சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு கல்வியாண்டு முதல், தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே பாட திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று திமுக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவுக்கு பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பொது பாட திட்டத்தால் தமிழக உயர் கல்வியின் தரம் குறையும் என்றும், பல்கலைக்கழக மானிய குழு சார்பில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு 45 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வரும் தன்னாட்சி அந்தஸ்தை இழக்க நேரிடும் என்றும் கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். எனவே, கல்வி துறையில் ஏதேனும் மாறுதல்களை கொண்டுவரும் முன்பு, கட்சி கண்ணோட்டம் இல்லாத உண்மையான கல்வியாளர்களை அழைத்து, எதிர்கால தமிழக இளைஞர்களின் நலனை மனதில் நிறுத்தி உயர்கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும்.