Sunday, May 19, 2024
Home » எல்நினோ காரணமாக காற்றின் திசையில் மாற்றம் தமிழ்நாட்டில் 113 டிகிரி வெயில் கொளுத்தும்: வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை

எல்நினோ காரணமாக காற்றின் திசையில் மாற்றம் தமிழ்நாட்டில் 113 டிகிரி வெயில் கொளுத்தும்: வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை

by Karthik Yash

சென்னை: எல்நினோ காரணமாக தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெயில் அளவு இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்றும் அதனால் இந்த ஆண்டு உச்சபட்சமாக 111 முதல் 113 டிகிரி வரை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் நேற்று 8 மாவட்டங்களில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. எல்நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றின் வேகம் மற்றும் திசையில் ஏற்படும் மாற்றமாகும். பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகமான வெப்பம் ஏற்பட்டால், அதனால் கடும் பாதிப்புகள் ஏற்படும். அமெரிக்காவின் கடல்சார் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தேசிய அலுவலகத்தின் வானிலை நிபுணர்களின் அறிக்கையின்படி, பசிபிக் பெருங்கடலில் நடைபெறும் இந்த காலநிலை நிகழ்வு உலகின் வெப்பநிலையை அதிகரிக்கும்.

மேலும் காலநிலை மாற்றத்தின் விளைவாக இது சமீப ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியசுக்கு மேல் உயரக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
புவியின் சராசரி வெப்பநிலை முன்பைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரவிடாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு உயர்ந்துள்ளது. தற்போது அந்த அளவை எட்டும் நிலையில் பூமி உள்ளது. இது நிகழ்ந்தால், 19ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இருந்த புவி வெப்பநிலையைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பநிலையை பூமி அடையக்கூடும்.

எல்நினோ 2024ம் ஆண்டு இளவேனிற்காலம் வரை இருக்கக்கூடும் என கருதப்படுவதால், அடுத்த ஆண்டு மிகவும் வெப்பம் மிகுந்த ஆண்டாக பதிவாகும் வாய்ப்பு உள்ளது. ஒரு மாதத்திற்கு கடல் வெப்பநிலை 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்போது அந்த வெப்பத்தை வளிமண்டலம் பிரதிபலிக்கும்போது எல்நினோ தொடங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பூமியில் அடுத்த ஆண்டு நிச்சயம் புதிய அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. இது, எல்நினோ எந்தளவு பெரிதாக மாறும் என்பதை பொறுத்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் எல்நினோ தனது முழு அளவை எட்டினால், 2024ல் புதிய அதிகபட்ச வெப்பநிலை பதிவாகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 111 டிகிரி முதல் 113 டிகிரி வரை வெயில் அளவு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

எல்நினோ காரணமாக தமிழ்நாட்டில் பருவ மழையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. வெப்பநிலைதான் அதிகரிக்கும். அதேநேரத்தில் இன்னொரு தரவுகளையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. 1950ல் இருந்து தமிழகத்தில் இதுவரை 11 முறை வறட்சி வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக 8 அல்லது 9 முறை எல்நினோ காலத்தில்தான் வறட்சி ஏற்பட்டுள்ளது. வெயிலைப் பொறுத்தவரை, மே மாதத்தில் இருக்கும் கத்திரி வெயில் என்பது ஜூன் வரை நீடித்துள்ளது. எனவே, அடுத்த 2 மாதத்திற்கு வெயில் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டிலும் சரி இந்தியாவிலும் சரி வெப்ப அலையை எதிர்கொள்ள சரியான திட்டமிடல் இல்லை என்பதையும் நாம் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 108 டிகிரி வரை வெயில் எகிறியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 11 இடங்களில் 106 டிகிரி வெயில் நிலவியது. மேலும், கடந்த 3 மாதங்களாக சராசரியாக 100 முதல் 102 டிகிரி வெயில் தமிழ்நாட்டில் அநேக மாவட்டங்களில் நிலவி வருகிறது. எல்நினோ காரணமாக இந்த ஆண்டு பசிபிக் பெருங்கடல் பகுதியில் வெப்பம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வங்கக் கடல் பகுதியிலும் இதன் பாதிப்பு இருக்கும்.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு சுமாராக 111 டிகிரி முதல் 113 டிகிரி வரை வெயில் எகிறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் ஆந்திரா, மகாராஷ்ட்ரா பகுதிகளில் 113 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. அதுபோல இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் உச்ச பட்ச அளவாக 113 டிகிரி வரை வெயில் உயர வாய்ப்புள்ளது. அதற்கேற்றவகையில் வறட்சியும் இருக்கும். பகலில் வெப்ப அளவும் இயல்பைவிட 2-5 டிகிரி செல்சியஸ் வரை உயரவும் வாய்ப்புள்ளது. வெப்ப அலை தமிழ்நாட்டில் அநேக இடங்களில் இருக்க வாய்ப்புள்ளது. அதன் காரணமாக உடலில் ஆசிட் ஊற்றியது போன்ற எரிச்சலை உணர முடியும். ஏப்ரல் மாதம் அதிகரித்த வெயில் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் 2 பேர் இறந்துள்ளனர்.

* 108ஐ தொட்டது ஈரோடு
தமிழ்நாட்டில் நேற்று உள் மாவட்டங்களில் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. கடலோரப் பகுதிகளில் இயல்பைவிட 1 டிகிரி முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக கரூர், ஈரோட்டில் 108 டிகிரி பதிவாகி உள்ளது. பரமத்தி வேலூர், திருச்சி, மதுரை, திருத்தணி, சேலம், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் 106 டிகிரி வெயில் இருந்தது. இதர மாவட்டங்களில் 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை இருந்தது. தமிழக கடலோரப் பகுதியில் 98 முதல் 102 டிகிரி வரையும் இருந்தது.

வெப்பநிலையை பொறுத்தவரையில் தஞ்சாவூர், கடலூர், கன்னியாகுமரி, தர்மபுரி, திண்டுக்கல், மதுரை நாகப்பட்டினம், சேலம், திருப்பத்தூர், திருச்சி, திருவள்ளூர், ராமநாதபுரம், நீலகிரி, வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், இதர மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெயில் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* ஏப்ரல் மாதம் அதிகரித்த வெயில் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் 2 பேர் இறந்துள்ளனர். அவர்கள் வெயில் மற்றும் வெப்ப தாக்கத்தினால் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
* அதிக வெப்பநிலை மற்றும் காற்றில் ஈரப்பதம் இருக்கும் போது பொதுமக்களுக்கு அசவுகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கடந்த ஒரு மாதமாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வருவதை நாம் கடந்து சென்றுவிட முடியாது.
* இது போன்ற நிழ்வுகளால் உடலில் நீர்ச்சத்து குறையும், தலை சுற்றல். மயக்கம், இதய பாதிப்பு, ஸ்ட்ரோக் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் வெயில் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வராமல் இருப்பதே நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் வீடுகளில் இருப்பதே நல்லது.

You may also like

Leave a Comment

nine − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi