உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவே இல்லை. இந்நிலையில், பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 2021ம் ஆண்டில் இருந்தே எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகரிக்க தொடங்கி விட்டது. இந்த ஆண்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் எலக்ட்ரிக் வாகன விற்பனை 1,39,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மார்ச் மற்றும் மே மாதங்களுக்குப் பிறகு, அதிக எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையானது அக்டோபரில்தான். தொடர்ந்து 13வது மாதமாக அக்டோபரில் எலக்ட்ரிக் வாகனங்கள் மாதம் 1 லட்சம் எண்ணிக்கைக்கு மேல் விற்பனையாகியுள்ளது.
நடப்பு ஆண்டின் முதல் 10 மாதங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை 12,34,325 ஆக உள்ளது. இந்த ஆண்டு டிசம்பருக்குள் 15 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகிவிடும் என வாகன உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். மொத்த எலக்ட்ரிக் வாகன விற்பனையில், டூவீலர்கள், ஆட்டோ, கார், பயணிகள் வாகனங்கள், வணிக பயன்பாட்டு வாகனங்கள், சரக்கு வாகனங்கள் அடங்கும். இந்த ஆண்டின் 10 மாதங்களில் நடந்த மொத்த எலக்ட்ரிக் வாகன விற்பனையில் டூவீலர்கள் 56 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. அடுத்ததாக ஆட்டோக்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் 38.17 சதவீதம் விற்பனையாகியுள்ளன.
இந்த ஆண்டில் விற்பனையான எலக்ட்ரிக் வாகனங்கள் விவரம்
வாகனம் எண்ணிக்கை
டூவீலர்கள் 6,91,536
3 சக்கர வாகனங்கள் 4,71,153
பயணிகள் வாகனங்கள் 67,151
சரக்கு வாகனங்கள் 2,548
பஸ்கள் 1,579
இதர வாகனங்கள் 358
மொத்தம் 12,34,325