Saturday, July 27, 2024
Home » கனவுகளை நோக்கி உழைத்தால் வெற்றி நிச்சயம்

கனவுகளை நோக்கி உழைத்தால் வெற்றி நிச்சயம்

by Porselvi

ஹெலன் கெல்லர் பிறந்த 19 மாதத்திலேயே அவரின் பார்வை மங்கியது.காது செயல் இழந்தது. வாயால் பேசவே முடியாமல் போனது.இதே குறைபாட்டோடு வளர்ந்தார்.ஆனால் அவர் மனம் தளரவில்லை. தனது குறைபாட்டை ஒருபோதும் அவர் தடையாக கருதவில்லை.இருளே ஒளி, மவுனமே எனது மொழி என்று கூறிய ஹெலன் தனது 12 வயதில் “ஸ்டோரி ஆஃப் மை லைஃப்” என்ற நூலின் ஆசிரியராக மாறினார். பத்திரிகைகளில் பகுதி நேர எழுத்தாளராகவும் பணியாற்றினார். “அமெரிக்கன் ஃபவுண்டேஷன் ஃபார் தி பிளைண்ட்” என்ற அமைப்பை உருவாக்கி உலகம் முழுவதும் சென்று தன்னைப்போல மாற்றுத் திறனுடையவர்களின் வாழ்வில் ஒளியை ஏற்றினார். வெறும் 19 மாதம் மட்டுமே உலகை பார்த்த ஹெலன் கெல்லர் மிகப்பெரிய சாதனையை புரிந்தார்.

தன்னுடைய விடாமுயற்சியால், உலகம் தன்னை பார்க்கும் அளவுக்கு வரலாறு படைத்தார். எழுத்தாளர், பெண்ணியச் சிந்தனைவாதி, சமூக சேவகி,அமைதியின் தூதுவர் என்ற பல பரிணாமங்களில் சாதனை படைத்துள்ளார். தடவித் தடவித் தன் வேலையெல்லாம் தானே செய்ததோடு மட்டுமல்லாமல், தனது ஆசிரியரோடு இணைந்து திரைப்படம் ஒன்றையும் தயாரித்து இயக்கினார்.எனக்கு கண் தெரியவில்லையே, காது கேட்கவில்லையே, வாய் பேச முடியவில்லையே என்ற இயலாமையை நினைத்துக் கொண்டே இருந்திருந்தால் வரலாற்றில் அவர் பெயர் என்றோ நீர்த்துப் போயிருக்கும். இன்றைக்கு நம் மத்தியில் இதே மனப்பான்மையில் நிறைய பேர் வாழ்கிறோம். ஆனால் இன்றும் ஹெலன் கெல்லர் போல சிலர் சாதித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள், இதற்கு உதாரணமாய் தெரிஜின்கா என்ற சாதனைப் பெண்ணைச் சொல்லலாம்.

பிரேசிலைச் சேர்ந்த 44 வயது தெரிஜின்சிகா ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பத்தாவது குழந்தையாக பிறந்தவர். நெருங்கிய உறவுகளில் அவருடைய பெற்றோர் திருமணம் செய்து கொண்டதால், பிறக்கும் போது ஐந்து பேருக்குப் பார்வை கிடையாது. தெரிஜின்கா பள்ளிக்கு சென்றபோதுதான் அவருக்கும் பார்வை குறைபாடு இருப்பது தெரியவந்தது.படிப்பதில் சிரமம்,சக மாணவர்கள் கிண்டல். ஆனாலும் வீட்டில் வசதி இல்லாததால், மீதமான உணவுகளை இலவசமாக பெறுவதற்காகப் பள்ளி சென்று வந்தார்.வறுமை குறைபாடு, கிண்டல் போன்றவற்றிலிருந்து ஓடிச் செல்ல வேண்டும் என்கிற சிந்தனையே அவரை எப்பொழுதும் ஆக்கிரமித்து இருந்தது.அந்த எண்ணம் ஓட்டப்பந்தய வீராங்கனையாக வேண்டும் என்கிற லட்சியத்தில் நிறுத்தியது. நீச்சலும்,ஓட்டமும் தன்னைப் போன்றவர்களுக்கான விளையாட்டுக்கள் என்று அறிந்து கொண்டார்.அவரிடம் ஷூக்கள் இல்லை. ஒரே ஒரு நீச்சல் உடை மட்டுமே இருந்தது.இருந்தபோதும் நீச்சலில் பயிற்சி பெற ஆரம்பித்தார். ஆனால் ஓட வேண்டும் என்கிற ஆர்வம் மட்டும் குறையவில்லை. வீட்டு வேலை செய்து வந்த அவரது அக்கா தன்னுடைய ஷூக்களைக் கொடுத்து ஓடச் சொன்னார். ஆனால் சிறப்பு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்சியாளர்கள் அவசியம். இரண்டு விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டும் என்றால் இரண்டு பயிற்சியாளர்கள் தேவை. தெரிஜின்காவின் அக்கா பயிற்சியாளராக இருக்க முன் வந்தார்.
நண்பகல் கொளுத்தும் வெயிலில் பயிற்சிகளை எடுத்துக் கொண்டார் தெரிஜின்கா.அப்போதுதான் மைதானத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். தினமும் 16 கிலோமீட்டர் தூரம் ஓடுவார்.சர்க்கரை சேர்த்த மாவு தான் அவரது உணவு.மழை பெய்தால் அவர் வீட்டில் இருக்க முடியாது. கூரையில் இருந்து தண்ணீர் கொட்டும்.

‘என் வறுமை ஒழிய வேண்டும்,என் குறைபாடு பெருமிதமாக மாற வேண்டும்.அதற்காக எவ்வளவு உழைக்கவும் தயாரானேன். உழைப்புதான் என் வாழ்க்கையை மாற்றும் என்று நம்பினேன்.ஓடும் தூரத்தை இரண்டு மடங்குகளாக மாற்றிக் கொண்டேன்.உள்ளூர் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறை ஓட்டத்தின் மூலம் பணம் கிடைத்தவுடன் என் கனவுகள் எல்லாம் விரைவில் நிஜமாகும் என்று தோன்றியது. அந்தப் பணத்தில் ஒரு யோகர்ட் வாங்கிச் சாப்பிட்டேன். இது என் சின்ன வயது ஆசை.அந்த நாளை என்னால் மறக்க முடியாது’ என்கிறார் தெரிஜின்கா.2004- ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் முதல் முறை பங்கேற்றார். 400 மீட்டர் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2008 பெய்ஜிங்கில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும்,100 மீ. ஓட்டத்தில் வெள்ளியும்,400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலமும் பெற்று,தான் கலந்து கொண்ட மூன்று போட்டி களிலும் பதக்கங்களை பெற்றார்.

2012 லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார். 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்களில் தங்கப் பதக்கங்களை அள்ளினார். உலகிலேயே அதிவேகமாக ஓடக் கூடிய பார்வையற்றவர் என்கிற சாதனையை படைத்தார் தெரிஜின்கா. 12.01 நொடிகளில் 100 மீட்டரை கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நல்லெண்ணப் பயணமாக பிரேசில் வந்த உலகின் அதிவேக வீரரான ஜமைக்காவின் உசேன் போல்ட்., ஒரு போட்டியில் என் கையைப் பிடித்துக் கொண்டு வழிகாட்டியாக ஓடி வந்தார்!யாருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்! இந்த நிகழ்ச்சி பாராலிம்பிக் வீரர்கள் மீது அதிக மரியாதையைப் பெற்றுத் தந்துவிட்டது,மேலும் ஒரு காலத்தில் என்னிடம் எதுவுமே இல்லை.இன்று அனைத்தையும் என் வசமாக்கி விட்டேன்! என்கிறார் தெரிஜின்கா.

வறுமை,பசி, களைப்பு, காயங்களோடு, பார்வையின்றி இருந்த ஒரு பெண்ணால் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்க முடிந்த போது, உங்கள் ஒவ்வொருவராலும் நினைத்ததை சாதிக்க முடியும். கனவுகளை நோக்கி உழைப்பைச் செலுத்தினால் உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பதுதான் தெரிஜின்காவின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் உன்னத பாடமாகும்.
– பேராசிரியர்,
அ.முகமது அப்துல் காதர்.

You may also like

Leave a Comment

eleven + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi