காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அதிகளவில் நாய்கள் சுற்றி வருகின்றன. இதனால், வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சிக்கு வருவோர் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் ரயில்வே சாலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு தினந்தோறும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை ஏராளமானோர் நடைப்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சிக்காக வருகின்றனர். இங்கு நீச்சல், கால்பந்து, கூடைபந்து, வாலிபால், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளுக்காக பயிற்சி பெறுவதற்காக ஏராளமானோர் வருகின்றனர்.
மேலும், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், பள்ளி, கல்லூரிகளின் விளையாட்டு போட்டிகள் என ஏராளமான நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், விளையாட்டு மைதானத்தில் அதிகளவில் நாய்கள் சுற்றி திரிந்து தொல்லை அதிகரித்திருப்பதால் நடைபயிற்சி மற்றும் ஓட்டப் பயிற்சிக்காக வரும் சிறுவர்கள், விளையாட்டு வீரர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து நடைப்பயிற்சிக்கு வருவோர், மைதான பராமரிப்பு ஊழியர்களிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், விளையாட்டு மைதானத்துக்கு குழந்தைகளை அழைத்து வருவதற்கும் அச்சமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானம் முறையான பராமரிப்பு இல்லாததால் சீரழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விளையாட்டு மைதான நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் நடைபயிற்சிக்கு வருவோரின் அச்சத்தை போக்க, விளையாட்டு மைதானத்தில் அதிகளவில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.