Thursday, May 9, 2024
Home » தடய அறிவியல் துறையில் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 29 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தடய அறிவியல் துறையில் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 29 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Mahaprabhu

சென்னை: தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 29 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.3.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 29 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 6 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார். குற்ற நிகழ்வுகளில் குற்றவாளிகளை கண்டறிய சேகரிக்கப்படும் சான்றுப்பொருட்களை அறிவியல் ஆய்வு மேற்கொண்டு, நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க உதவுவதே தடய அறிவியல் துறையின் முக்கியப் பணியாகும். இவர்கள் தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகம் மற்றும் வட்டார தடய அறிவியல் ஆய்வகங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

முன்னதாக 26.7.2021 அன்று மேற்கண்ட பதவியில் 62 நபர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு தடய அறிவியல் துறையில் பணிகள் எவ்வித தொய்வுமின்றி நடைபெற வழிவகை செய்யப்பட்டது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் தடய அறிவியல் துறையின் செயல்திறனை உயர்த்தும் வகையில், 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக மேம்படுத்தப்பட்ட டிஎன்ஏ (DNA Unit) பிரிவுகள், கணினி தடய அறிவியல் (Computer Forensic Unit) பிரிவுகள், நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள் (Mobile Forensic Lab) அமைக்கப்பட்டதுடன், தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் அலகுகள் ISO/IEC 17025, 2017 தரச் சான்றினை பெற்றுள்ளது.

மேலும், சிறார்களிடம் பாலியல் குற்றங்கள் புரியும் குற்றவாளிகளின் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக போக்சோ சட்டத்தின் கீழான குற்ற நிகழ்வுகளில் தடய அறிவியல் துறை அறிக்கைகளை விரைந்து வழங்கிட, போக்சோ கணினி தடய அறிவியல் பிரிவு சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 2023-24 ஆம் ஆண்டு நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கையின் போது முதலமைச்சர் அறிவிப்பின்படி, திருநெல்வேலியில் டிஎன்ஏ (DNA) பிரிவும், போதை மற்றும் மனமயக்க (Narcotic Drug Testing Unit) பொருட்கள் தொடர்பான குற்றங்களை கண்டறிய தனியே போதை மற்றும் மனமயக்க பொருட்கள் பரிசோதனை அலகு கோயம்புத்தூரிலும், இராமநாதபுரம், சேலம், திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள வட்டார தடய அறிவியல் ஆய்வகங்களை தரம் உயர்த்தவும், தடய அறிவியல் துறையின் அறிக்கைகளை இணைய வழியில் நீதிமன்றங்களுக்கு சமர்ப்பிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் மற்றும் வழக்குகளை விரைந்து முடித்திடவும், இணைய வழியே வீடியோ கான்பரன்ஸ் முறையில் நீதிமன்றங்களின் முன் தடய அறிவியல் அலுவலர்கள் சாட்சியம் அளிக்கத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்திடவும், 25.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், தடய அறிவியல் துறையில் பணியாற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில். ஆண்டுதோறும் இரண்டு பணியாளர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பதக்கம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில், தடய அறிவியல் துறையை நவீனப்படுத்த தேவையான உபகரணங்கள் வாங்க 26.72 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தடய அறிவியல் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் இவ்வரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

You may also like

Leave a Comment

seventeen − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi