Monday, June 10, 2024
Home » நான்கு கரங்களுடன் புன்னகை தவழும் இன்முகம்: குறைகளை தீர்க்கும் தையல்நாயகி அம்மன் கோவில்..!!

நான்கு கரங்களுடன் புன்னகை தவழும் இன்முகம்: குறைகளை தீர்க்கும் தையல்நாயகி அம்மன் கோவில்..!!

by Kalaivani Saravanan
Published: Last Updated on

தடைபட்ட திருமணம், குழந்தை பேறு போன்ற அனைத்து குறைகளையும் தீர்த்து வைப்பதில் அன்னை தையல்நாயகிக்கு நிகரில்லை என பக்தர்கள் உளமார நம்புவது உண்மையே. சில அம்மன் ஆலயங்களில் விழாக் காலங்களில், சிலருக்கு அருள்வந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்வதுண்டு. சிலருக்கு தான் வணங்கும் அம்மனே கனவில் காட்சி தருவதும் உண்டு. ஆரம்பத்தில் தகரக் கொட்டகையாக இருந்த ஆலயம், தற்போது அழகான ஆலயமாக கட்டப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனைத்து வசதிகளுடன் காணப்படுகிறது.

கருவறையில் அன்னை தையல்நாயகி நான்கு கரங்களுடன் புன்னகை தவழும் இன்முகத்துடன் காட்சி தருகிறாள். அன்னையின் மேல் இரு கரங்களில் தாமரை மலரைத் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்புரிகிறாள். நாகம்மாவுக்கு நாகபஞ்சமி மற்றும் ராகு பெயர்ச்சி நாட்களில், விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ராகு தோஷ பாதிப்பு உள்ளவர்கள் இந்த சன்னிதிக்கு வந்து அபிஷேக ஆராதனைகள் செய்து பலன் பெறுகின்றனர்.

தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. விநாயக பெருமானுக்கு, விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாட்களிலும், முருகப்பெருமானுக்கு சஷ்டியின் போதும் பக்தர்கள் திரளாக வந்து ஆராதனைகளில் பங்குபெறுகின்றனர். துர்க்கை அம்மனுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ராகு கால நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

சித்ரா பவுர்ணமி அன்று ஆலயம் விழாக்கோலம் பூண்டிருக்கும். அன்று காவேரியில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பால் குடம், தீர்த்த குடம், காவடிகளுடன் அன்னையின் சன்னிதிக்கு வருவார்கள். இரவு அன்னைக்கு பால் அபிஷேகம் உள்பட பல அபிஷேக ஆராதனைகள் நடந்து, அன்னைக்கு வெள்ளி அங்கி சாத்துவார்கள். அன்று இரவு நடைபெறும் அன்னதானத்தில் சுமார் 1500 பேர் கலந்து கொள்வார்கள். ஆலயத்தின் வளாகம் மிகவும் விஸ்தாரமானது. சபரிமலை, வைத்தீஸ்வரன் கோவில், பழனி முதலிய புண்ணிய தலங்களுக்கு இந்த வழியாக பாத யாத்திரை செல்வோர், பகல் நேரங்களில் இங்கு வந்து தங்கி இளைப்பாறிச் செல்கின்றனர்.

காலை 7 முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் இந்த ஆலயத்தில் சூடம் பயன்படுத்துவது கிடையாது. தீபம் மட்டுமே. நோய்களை குணமாக்கி தருவதிலும் சொத்துப் பிரச்சினைகள், தடைபட்ட திருமணம், குழந்தை பேறு போன்ற அனைத்து குறைகளையும் தீர்த்து வைப்பதில் அன்னை தையல்நாயகிக்கு நிகரில்லை என பக்தர்கள் உளமார நம்புவது உண்மையே! ஆடி வெள்ளிக்கிழமைகளில் தையல்நாயகி அம்மனுக்கு நடக்கும் விசேஷ ஆராதனைகளில் நிறைய பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அன்னையை தினமும் விதம் விதமாக அலங்கரிப்பார்கள். மாத பவுர்ணமி நாட்களில் மாலையில் அன்னையின் சன்னிதியில் நடைபெறும் கும்ப பூஜை இங்கு மிகவும் பிரபலம். மூன்று கலசம் அமைத்து, அதில் மஞ்சள் கலந்த நீரை நிரப்பி பூஜை செய்வார்கள். பூஜை முடிந்தபின் அந்த கலச நீரை தீர்த்தமாக பக்தர்களுக்குத் தருவார்கள். அந்த தீர்த்த நீரைக் கொண்டு போய், வீட்டிலும், வியாபார நிலையங்களிலும் தெளித்தால் கண் திருஷ்டி, ஏவல் போன்றவை விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

உடல் சரும நோய்கள் நீங்க, ஆலயத்தின் மகாமண்டபத்தில் உள்ள தனி இடத்தில் பக்தர்கள் உப்பு, மிளகு காணிக்கை செலுத்துகின்றனர். உடம்பில் கட்டி ஏதாவது வந்தால், அன்னைக்கு வெல்லக் கட்டிகளை காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு 5 செவ்வாய்க்கிழமைகள் பிரார்த்தனை செய்தால், பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணம் பெறுவது நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள். இந்த பிரார்த்தனைப் பொருட்களை நிர்வாகத்தினர் அவ்வப்போது காவிரிக்கு கொண்டுபோய் நீரில் கரைத்து விடுகின்றனர்.

குழந்தை பேறு வேண்டுவோர் நாகம்மா சன்னிதியில் இருக்கும், அரச மரத்தில் தொட்டில் கட்ட அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறதாம். திருமணத்தடை உள்ளவர்கள் அன்னைக்கு அபிஷேகம் செய்து தாலி காணிக்கை செலுத்துகின்றனர். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அன்னைக்கு புடவை வாங்கி சாத்தி தங்கள் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றனர். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் தஞ்சை செல்லும் சாலையில் உள்ள அரியமங்கலத்தில் இத்திருத்தலம் அமைந்திருக்கிறது.

You may also like

Leave a Comment

eighteen + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi