Saturday, July 27, 2024
Home » தசரதன் தன் மக்களுக்கு கொடுத்த இரண்டு வாய்ப்புகள்

தசரதன் தன் மக்களுக்கு கொடுத்த இரண்டு வாய்ப்புகள்

by Nithya

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ராமாயணமும், மகாபாரதமும் இன்றைக்கும் நமக்கு ஏதோ ஒரு வழியில் ஆலோசனை சொல்வதாகவும் வழிகாட்டுவதாகவும், சில நேரங்களில் ஆறுதல் சொல்லி அடுத்தடுத்த செயல்களுக்குத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது. ராமாயண – மகாபாரத கதாபாத்திரங்கள் இன்றைக்கும் நம்மிடையே உலவுகின்றன. அதில் உள்ள சில நிகழ்வுகள் வேண்டுமானால் இன்றைய உலகில் பொருந்தாததாகவும், நம்பத் தகாததாகவும் இருக்கலாம். ஆனால், அது சொல்லும் நீதி பொதுவானது. அதைவிட அந்த கதாபாத்திரங்களின் மன இயல்புகள் (Psychological attributes) இன்றைக்குள்ள மனிதர்களின் இயல்புகளையும், அவர்கள் எப்படி எல்லாம் சிந்திப்பார்கள் என்பதையும் பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன.

எனவே, மனித உளவியலை (Human Psychology) துல்லியமாகத் தெரிந்து கொள்ள ராமாயணமும், மகாபாரதமும் நமக்கு உதவுகிறது. பொதுவாகவே, மனித மனம் ஏதோ ஒன்றை உயர்வாக நினைக்கிறது. ஆனால், அந்த நினைவு எதுவரையில் என்றால், எதை உயர்வாக நினைக்கிறார்களோ, அதைவிட உயர்வான ஒன்று கிடைக்காத வரையில்தான்.

அதைவிட உயர்வான ஒன்று கிடைத்து விட்டால், அவர்கள் ஏற்கனவே உயர்வான நினைத்த விஷயத்தைக் கைவிட்டுவிடுகிறார்கள். சில சமயம் அலட்சியப்படுத்துகிறார்கள். தசரதன் தன்னுடைய மகன் ராமனுக்குப்பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்து, தன்னுடைய முடிவை, தன்னுடைய மந்திரிகளும், மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவசரமாக சபையைக் கூட்டி, தன்னுடைய கருத்தை விரிவாக வெளிப்படுத்துகின்றான். அவன் மக்களிடம் எவ்வளவு வினையமாகக் கேட்டான் என்பதை வால்மீகி சொல்வதைக் கவனிக்க வேண்டும்.

“நான் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று நிச்சயித்திருக்கின்றேன். அவன் பராக்கிரமத்தில் இந்திரனை ஒத்தவன். இந்த பூமிக்கு தகுந்த அரசன். இவனை அரசனாக அடைந்தால் மூன்று உலகங்களும் நன்றாக காக்கப்படும். அதனால், அவனிடத்தில் அரச பதவியை ஒப்படைத்து, நானும் கவலை இல்லாமல் இருக்க விரும்புகின்றேன். இதை நான் நன்றாக யோசித்துத்தான் முடிவுக்கு வந்தேன். என்னுடைய யோசனை நல்ல பலனைக் கொடுக்கும் என்று உங்களுக்குத் தோன்றினால், நீங்கள் அனுமதி தரலாம். என்னுடைய இந்த முடிவு தவறு என்று நீங்கள் கருதினால் வேறு என்ன செய்யலாம் என்பதையும் சொல்லுங்கள்” என்றார்.

யோசித்துப் பாருங்கள். பத்து திசைகளையும் வென்றவன். நிகரற்ற சக்கரவர்த்தி. ஆனால், தன்னுடைய முடிவு சரிதானா என்று மக்களிடம் யோசனை கேட்கின்றான். அதாவது முடியாட்சி காலத்தில் குடியாட்சி முறை அதாவது மக்களின் அபிப்பிராயத்தைத் தெரிந்து கொண்டு, அரசு ஆள விரும்புகின்றான் தசரத சக்கரவர்த்தி. மக்களின் அபிப்பிராயத்துக்கு முக்கியத்துவம் தருவது என்பது ராமாயண காலத்திலேயே இருந்தது. அதுவும் அயோத்தியா காண்டம் சர்கம் இரண்டில், கம்பனுக்கு முன்னால் எழுதிய வால்மீகி விவரமாகச் சொல்லி இருக்கிறார். இதிலும் ஒரு நுட்பம் கவனியுங்கள். மக்களுக்கு இரண்டு வாய்ப்புகள் தருகின்றான் தசரதன்.

1. தன் முடிவு சரியாக இருந்தால் அங்கீகரிப்பது.

2. சரியில்லை என்றால், மாற்று யோசனை சொல்வது.

தசரதன் இப்படிச் சொன்னவுடன், மக்களும் மந்திரிகளும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். இருந்தாலும், உடனடியாக பதிலைச் சொல்லாமல் ஒருவருக் கொருவர் கலந்து ஆலோசித்து, பிறகு ஒரு முடிவுக்கு வந்து தசரதனிடம் சொன்னார்கள். அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

“சக்கரவர்த்தி, நீங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த உலகத்தைக் காப்பாற்றி, வயது முதிர்ந்து தளர்ந்திருக்கிறீர்கள். என்னதான் வயது தளர்ந்தாலும் இந்த அரசைக் காப்பாற்றுவதில் நீங்கள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கிறீர்கள். அதி அற்புதமான ஆட்சியை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இது எங்கள் பாக்கியம்’’ என்று தசரதனுடைய ஆட்சியை வெகுவாகப் புகழ்கிறார்கள். தன்னுடைய ஆட்சியையும், தன்னுடைய மேன்மையையும், தன்னுடைய குணச்சிறப்பையும் தன் எதிரிலே மந்திரிகளும், மக்களும் சொல்வதைக் கேட்க தசரதனுக்கு, ஆனந்தமாக இருக்கிறது.

இதைவிட வேறு என்ன வேண்டும்?

தன் மீது கொண்ட பிரியத்தாலும் தன்னுடைய பலத்திலும் திறமையிலும் கொண்ட நம்பிக்கையாலும், அரசன் என்கிற விஸ்வாசத்தினாலும், மக்கள் புகழ்வதாக தசரதன் நினைத்தான். அதனால் இப்பொழுது ஒரு எண்ணம் வந்தது.
“ராமனுக்கு முடி சூட்டிவிட்டு, அரசு பதவியிலிருந்து விலகிவிடுகிறேன்’’ என்று சொன்னதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தான். அப்படிச் சொன்னால் என்ன சமாதானம் சொல்லி ராமனை ஏற்றுக்கொள்ள வைப்பது என்று நினைத்தான். மக்கள், “இப்பொழுது என்ன அவசரம்? இன்னும் சில காலம் நீங்கள் நன்றாக ஆண்டு அதற்குப் பிறகு ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்யலாமே. இப்பொழுது தானே அவனுக்கு திருமணம் ஆகி இருக்கிறது. அமைதியான வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கிறான். உங்களுடைய ஆட்சியில் ஒரு குறையும் இல்லாத பொழுது, நீங்கள் ஏன் அவசரப்பட வேண்டும்?’’ என்றெல்லாம் மக்கள் சொல்லுவார்கள் என்று எதிர்பார்த்தான். ஆனால், மக்கள் வேறு விதமாகச் சொன்னார்கள். எப்படிச் சொன்னார்கள் தெரியுமா? அதை வால்மீகி பகவான் ஒரு அருமையான ஸ்லோகத்தில் கொடுக்கின்றார்.

இந்தச் ஸ்லோகம் இப்பொழுதும் திருமால் ஆலயங்களில் மந்திர புஷ்பம் செய்யும் பொழுது ராமாயணத்திலிருந்து சில ஸ்லோகங்கள் படிக்கப்படும். ஸ்லோகங்களில் ஒன்று.

“இச்சா மோஹி மஹாபா ஹூம் ரகுவீரம் மஹாப லம்
கஜேந மஹதா யாந்தம் ராமம் சத்ரா வ்ருதாநநம்’’

ராமாயணத்தில் உள்ள 24 ஆயிரம் ஸ்லோகங்களில், சில ஸ்லோகங்களை மட்டும் பொறுக்கி எடுத்து பெரியவாச்சான் பிள்ளை அபாரமான விளக்கம் தந்திருக்கிறார். அதற்கு “ராமாயண தனிச்சுலோக விவரணம்’’ என்று பெயர். இந்த விவரணத்தை மட்டும் ஒருவர் முறையாகப் படித்துவிட்டால், அவர் ராமாயணத்தின் அத்தனை நுட்பங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இந்தஸ்லோகத்தில் மக்களின் உளவியலை வால்மீகி விவரிக்கிறார்.

தொகுப்பு: தேஜஸ்வி

You may also like

Leave a Comment

seventeen − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi