சென்னை: சுங்கத்துறையில் எழுத்தர், டிரைவர், சமையல் உள்ளிட்ட பணிகளுக்கு நடந்த எழுத்து தேர்வில் புளூடூத் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்திய வடமாநிலத்தவர்கள் 30 பேர் சிக்கினர். சென்னை ராஜாஜி சாலையில் தலைமை சுங்க துறை அலுவலகம் உள்ளது. சென்னை துறைமுகத்திலிருந்து வெளிநாட்டிற்கு பொருட்கள் கொண்டு செல்வதற்கும், பொருட்கள் கொண்டு வருவதற்கும் சுங்கத்துறையில் முறையாக சுங்கவரி செலுத்திதான் அப்பொருட்களை கொண்டு செல்ல வேண்டும்.
இந்நிலையில், சுங்கத்துறை அலுவலகத்தில் கேன்டீன் உதவியாளர், கிளார்க், சமையலர், எழுத்தர், கார் ஓட்டுநர்கள் என 17 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, சுங்கத்துறை இணையத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்காக, 18 வயது முதல் 25 வயது உச்ச வரம்பும், 10ம் வகுப்பு, டிப்ளமோ, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற கல்வி தகுதியும், 50 மதிப்பெண்கள் அடிப்படையில் ஒருமணி நேரம் எழுத்து தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு நேற்று சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. எழுத்து தேர்வு தொடங்கிய 15 நிமிடத்தில், சுங்கத்துறை தேர்வு குழு அதிகாரிகளுக்கு திடீரென சந்தேகம் எழுந்தது. எனவே, தேர்வர்களை சோதனை செய்தனர். அப்போது, அதிர வைக்கும் சம்பவமாக காதின் உள்புறமாக புளூடூத், உடலில் எலக்ட்ரானிக் டிவைஸ் போன்ற சாதனங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். தேர்வர்களில் சிலர் பிரீத்…புளூடூத், டிவைஸ் என்ற கருவியை உடலில் பொருத்தி இருந்தனர்.
இதையடுத்து, அதிரடியில் இறங்கிய சுங்கத்துறை அதிகாரிகள், ஒவ்வொருவராக சோதனையிட்டதில் அரியானா உள்பட வடமாநிலத்தை சேர்ந்த 30 பேர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இது குறித்து சுங்கத்துறை சார்பில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, பூக்கடை துணை ஆணையர் ஸ்ரேயா குப்தா உத்தரவின்பேரில் துறைமுகம் உதவி ஆணையர் வீரக்குமார், வடக்கு கடற்கரை ஆய்வாளர் ராஜா சிங் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முறையான சோதனைகளுக்கு பின் தேர்வு எழுத வந்தவர்களை அனுமதிக்காதது ஏன் போன்ற கேள்விகளை போலீசார் கேட்டு அதற்கான விளக்கங்களையும் பெற்றுள்ளனர். அரியானாவை சேர்ந்த 28 பேர் மற்றும் உ.பி.யைச் சேர்ந்த 2 பேர் என 30 பேர் இந்த மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர். சிங்க் என்ற செயலி மூலமாக இவர்கள் தொடர்பு கொண்டு பேசி இருப்பதும் தெரியவந்துள்ளது. 30 பேரும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுத வந்தவர்களுக்கு பின்னணியில் உதவியது யார் என காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.