சென்னை: அரசியலமைப்பை சீர்குலைக்கும் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என இந்திய சட்ட ஆணையத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர், இந்திய சட்ட ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதம்: அரசமைப்புச் சட்டப் பிரிவு 44 குறிப்பிடும் பொது சிவில் சட்டம், பொதுவான மதம் சாராத பல்வேறு சமூகச் செயல்களுக்கு, குறிப்பாக இரு நபரிடையே ஒப்பந்தங்கள், சொத்துப் பரிமாற்றத்துக்கான சட்டங்கள், பணப் பரிமாற்ற ஆவணங்கள், கருவிகள் குறித்த சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரத்தை வழங்குகிறதே தவிர, மத வழக்கங்களுக்கானதல்ல.
பொது சிவில் சட்டத்தை திணிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் மத விஷயங்களில் அரசின் முரண்பாடாக கருதப்படலாம், மேலும் பல்வேறு மத சமூகங்களுக்கிடையில் ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும் முயற்சியாகவும் கருதப்படும். அரசியலமைப்புச் சீர்குலைவை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பன்முக தன்மைக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது.