திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் வட்டம் வேப்பத்தூரில் 106ம் ஆண்டு சிறுதொண்ட நாயனார் குருபூஜை விழா 3 நாட்கள் நடந்தது. இவ்வூரில் உள்ள சிவனடித் தொண்டு வேப்பத்தூர் வாசிகள் 105 ஆண்டுகளாக சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் சிறுதொண்ட நாயனார் குருபூஜை விழாவை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் 3 நாட்கள் இவ்விழா நடந்தது. இதில் முதல் 2 நாட்கள் சீராளன் பல்லக்கு வேப்பத்தூர், பாகவதபுரம், ராமமூர்த்தி நகர், கல்யாணபுரம் ஆகிய 4 கிராமங்களில் வீதியுலா புறப்பாடு நடந்தது.இதை தொடர்ந்து இரவு சுமார் 200 பக்தர்கள் காவிரியில் இருந்து அலகு காவடி, பால் காவடிகள் பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் சென்றனர்.இதைத் தொடர்ந்து 3வது நாளில் பிச்சாண்டவர் ஊர்வலம், மாலை 4 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அமுது படைத்தல், இரவு சிறப்பு கேரள ஜெண்டை மேளம் மற்றும் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியுடன் ஆத்தீஸ்வரர் சுவாமி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது.