சிட்ரான் நிறுவனம் இசி3 ஷைன் என்ற புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 5 வேரியண்ட்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.13.2 லட்சம் எனவும், டாப் வேரியண்டான இசி3 ஷைன் டூயல் டோன் வைப் பேக் ரூ.13.5 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் காரில் 29.2 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. இதிலுள்ள மோட்டார் அதிகபட்சமாக 56 பிஎச்பி பவரையும், 143 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 60 கி.மீ வேகத்தை 6.8 நொடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 107 கி.மீ வேகம் வரை செல்லும்.
முழுமையாக சார்ஜ் செய்தால் 320 கி.மீ தூரம் வரை செல்லும் என அராய் சான்று வழங்கியுள்ளது. டூயல் டோன் அலாய் வீல்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதிவேக சார்ஜர் மூலம் 57 நிமிடங்களில் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். சாதாரண சார்ஜர் மூலம் முழுமையாக சார்ஜ் செய்ய 10.5 மணி நேரம் ஆகும் என நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. டாடா டியோகோ இவி மற்றும் டாடா பஞ்ச் இவி ஆகியவற்றுக்கு இது போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.