Sunday, May 19, 2024
Home » “நம்பினோர் கெடுவதில்லை”: குழந்தை வரம் தரும் புட்லூர் பூங்காவனத்தம்மன்..நிறைமாத கர்ப்பிணியாக அருள் புரிகிறாள்..!!

“நம்பினோர் கெடுவதில்லை”: குழந்தை வரம் தரும் புட்லூர் பூங்காவனத்தம்மன்..நிறைமாத கர்ப்பிணியாக அருள் புரிகிறாள்..!!

by Kalaivani Saravanan
Published: Last Updated on

கோயில் விவரம் :

மூலவர் – அங்காளபரமேஸ்வரி, விநாயகர், தாண்டவராயன்
அம்மன்/தாயார் – கர்ப்பிணி போல மல்லாந்து படுத்திருக்கும் பூங்காவனத்தம்மன்
தல விருட்சம் – வேப்பமரம்
ஊர் – ராமாபுரம் (புட்லூர்), திருவள்ளூர், தமிழ்நாடு

அம்மன் என்றால் அழகு….

அம்மன் என்றால் அன்பு…

அம்மன் என்றால் ஆக்ரோஷம்….

அம்மன் என்றால் ஆவேசம்….

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூர்-ராமபுரம். ஊருக்கு நடுவே கோயில் கொண்டிருக்கிறாள் பூங்காவனத்தம்மன். சென்னை சென்ட்ரலில் இருந்து சுமார் 38 கி.மீ; கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது.

இங்கு மூலவராக அங்கலபரமேஸ்வரி அம்மனும் விநாயகர் மற்றும் தாண்டவராயன் ஆகியோர் திகழ்கிறார்கள் . இங்கு வீற்றிருக்கும் அம்மனின் பெயர் பூங்காவனத்தம்மன். இங்கு வீற்றிருக்கும் அம்மனின் பெயர் பூங்காவனத்தம்மன். தல விருக்ஷமாக வேப்பமரம் உள்ளது . இத்திருக்கோவில் 500-1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் ஆகும்.

ராமபுரம் எனும் கிராமம், பசுமை நிறைந்த வயல் வெளியாக இருந்தது. மேல்மலையனூரில் இருந்து நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவியை அழைத்துக் கொண்டு காடு-மேடுகளைக் கடந்து நடந்து வந்தார் ஒருவர். இடுப்பில் கூடையை ஏந்தி, சூலத்தை ஊன்றுகோலாக பயன்படுத்தி மெள்ள நடந்து வந்த அந்தப் பெண்ணுக்கு, கடும் தாகம்! நா வறண்டு, நடக்க இயலாமல், அங்கிருந்த மரத்தடி ஒன்றில் அமர்ந்தாள். ”அப்படியே படுத்துக் கொள்; தண்ணீர் எடுத்து வருகிறேன்” என்று மனைவியிடம் சொல்லி விட்டு, கணவர் தண்ணீரைத் தேடி ஓடினார்.

வறண்டு கிடந்த குசஸ்தலை ஆற்றுப் படுகையைக் கடந்து, ஓரிடத்தில் தண்ணீரை சேகரித்துக் கொண்டு திரும்பினார். என்ன அதிசயம்! ஆற்றில் கரைபுரண்டு ஓடியது வெள்ளம். கையில் தண்ணீ ருடன், பாய்ந்தோடும் வெள்ளத்தை பார்த்தபடி, அழுது கொண்டு நிற்பதைத் தவிர, அவரால் வேறென்ன செய்ய முடியும்?

நேரம் ஆக ஆக நீர் வரத்து மெள்ள குறைந்தது; கரை கடக்க வழியும் கிடைத்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டவர், தண்ணீருடன் கரையைக் கடந்து மனைவி அமர்ந்திருந்த மரத்தடிக்கு ஓடினார். அங்கே… அந்தக் காட்சியைக் கண்டு உறைந்து போனார். அவரின் நிறைமாத கர்ப்பிணி, புற்றுருவமாகக் கிடந்தாள்.

காலங்கள் ஓடின! இந்த இடமே விளை நிலமாகிப் போனது. இங்கு விவசாயி ஒருவர் நிலத்தில் உழுது கொண்டிருந்தபோது, திடீரென… அவரது ஏர்க் கலப்பை அழுந்திய ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. அதிர்ந்த விவசாயி மயங்கிச் சரிந்தார். அருகில் வயலில் வேலை செய்தவர்கள், பரபரவென ஓடி வந்தனர். ‘என்னாச்சு… என்னாச்சு…?’ என்று ஒருவருக்கொருவர் பதற்றத்துடன் கேட்டுக் கொண்டிருந்த வேளையில்… அங்கு நின்றிருந்த பாட்டியம்மாளுக்கு அருள் வந்தது.

”நான்தான் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி. இந்த இடத்துல புற்றுருவமா கிடக்கிறேன். இங்கே கோயில் கட்டி, என்னைக் கும்பிடுங்க. உங்களையும் உங்க ஊரையும் நல்லா பாத்துக்கறேன். நோய், நொடி அண்டாம, பில்லி, சூனியம் தீண்டாம காப்பேன்’ என்றவள் மயங்கி விழுந்தாள்.

அங்காளபரமேஸ்வரி, மனித உருவில் தங்கள் ஊருக்கு வந்ததை அறிந்து மெய்சிலிர்த்தனர் ஊர்மக்கள்; புற்றுருவாக தோன்றியவளுக்கு அங்கு கோயில் எழுப்பினர். மரம், செடி, கொடிகளுடன் பூக்கள் பூத்துக் குலுங்கிய வயலில் கண்டெடுத்ததால், பூங்காவனத்தம்மன் எனப் பெயரிட்டு வழிபடத் துவங்கினர். அங்காளபரமேஸ்வரி என்ற பழைய பெயரும் இவளுக்கு உண்டு!

திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிராகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களைடைய பிரார்த்தனை நிறைவேறும்.

அம்மனின் பெற எளிய முறை :

இந்த கோயிலில் கர்ப்பிணி போல் அருள்பாலிக்கும் பூங்காவனத்தம்மனை தரிசித்தாலே குழந்தை பாக்கியம் உண்டாகும் என நம்பிக்கை இருக்கிறது.

இந்த அம்மனின் திருவடியில் எலுமிச்சையை வைக்கும் பெண்கள் அருகில் அவர்களின் முந்தானையை விரித்தபடி பிடித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வைக்கும் எலுமிச்சை உருண்டோடி அவர்களின் முந்தானையில் விழுந்தால் பிள்ளை பாக்கியம், திருமண பாக்கியம் என தாங்கள் வேண்டும் வரத்தை அம்மன் அருள்வார் என்பது ஐதீகம்.

மேலும் குடும்பத்தில் எப்போதும் பிரச்சினைகள் என்று சிக்கித்தவிப்பவர்கள், நிம்மதியில்லாமல் கலங்குபவர்கள் விரைவில் குடும்பத்தில் குதூகலத்தை அடைவார்கள். நிம்மதியும் சந்தோஷமுமாக இருப்பார்கள் என்கிறார்கள் பெண்கள்.

அதே போல் பிள்ளை வரம் வேண்டுபவர்கள் கோயிலில் வெளியே இருக்கும் புற்றுக்கு அருகே இருக்கும் வேப்ப மரத்தில் சேலையின் முந்தானையை சிறிது கிழித்து கட்டி விடுகிறார்கள். அவர்களின் வேண்டுதல் நிறைவேறியதும் அம்மனை தரிசித்து பூஜை செய்து செல்கின்றனர்.

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6:00 முதல் இரவு 8 மணி வரை; மற்ற நாட்களில் காலை 6:00 முதல் மதியம் 1:00 மணி மற்றும் 2:00 முதல் இரவு 7:30 மணி வரை நடை திறந்திருக்கும்.

You may also like

Leave a Comment

sixteen − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi