தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் வினோத் குமார் (46), மாநகரப் பேருந்து தடம் எண் 44 கிராஸ்-ல் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே பேருந்தில் பாபு (58) கண்டக்டராக உள்ளார். இவர்கள் நேற்று முன்தினம் இரவு பிராட்வேயில் இருந்து தண்டையார்பேட்டை ஐஓசி நோக்கி பேருந்தை ஓட்டி வந்தனர். அப்போது 6 வாலிபர்கள் கடற்கரை ரயில்நிலைய பேருந்து நிறுத்தத்தில் ஏறினர். அவர்கள் முன்பக்கம் மற்றும் பின்பக்க படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். அவர்களை கண்டக்டர் பாபு கண்டித்துள்ளார். ஆனால் அவரது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தனர்.
இதையடுத்து வள்ளலார் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள போக்குவரத்து போலீசாரிடம் 6 பேரில் ஒருவரை பிடித்து டிரைவர் வினோத்குமார் ஒப்படைத்தார். அந்த வாலிபரை போக்குவரத்து போலீசார் கண்டித்து வேறு பேருந்தில் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், பென்சில் பேக்டரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது, அங்கு வந்து டிரைவர் வினோத்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கல்லால் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. வண்ணாரப்பேட்டை போலீசார் தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகிறார்கள்.