கவுகாத்தி: அசாம் முதல்வர் மனைவி நடத்தும் நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு சார்பில் ரூ.10 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி குற்றம் சாட்டினார். இதுகுறித்து மக்களவை காங்கிரஸ் துணை தலைவரும் எம்பியுமான கவுரவ் கோகாய் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில்,விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக பிரதம மந்திரி கிசான் சம்பாதா திட்டத்தை கடந்த 2017ம் ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வேளாண் பிரிவினருக்கான கட்டமைப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவியான ரிங்கி பூயன் சர்மா பிரைட் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இந்த திட்டத்தின் கீழ் ரிங்கி பூயானுக்கு ரூ.10 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உணவு பதப்படுத்துதல் அமைச்சக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அசாம் முதல்வர் ஹிமந்தா தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி தனது மனைவியின் கம்பெனிக்கு ரூ.10 கோடி வாங்கி கொடுத்துள்ளாார். ரிங்கி பூயானின் நிறுவனம் மற்றும் அந்த பட்டியலில் உள்ள அவரது நிறுவன வரிசை எண் ஆகியவற்றின் படத்தையும் அதனுடன் இணைத்துள்ளார்.
நாகோன் மாவட்டத்தில் 10 ஏக்கர் விவசாய நிலத்தை முதல்வரின் குடும்பத்தினர் வாங்கினர். அதன்பின் சில நாள்களில் அந்த இடம் தொழிற்சாலை பகுதி என அரசு அறிவிப்பு வெளியிட்டதாக அசாம் செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கவுகாத்தி உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.