Saturday, May 25, 2024
Home » அருள் மழை தரும் ஆடி மாதம்

அருள் மழை தரும் ஆடி மாதம்

by Kalaivani Saravanan

மனித வாழ்வு என்பது என்றுமே போராட்டமானதுதான். நல்லவைகளை பெறுவது மட்டுமில்லாமல் அதனை காக்கவும் செய்ய வேண்டும். தீயவைகளை வளர விடாமல் அதனை அழித்து விட வேண்டும். இந்த மனதோடு போராடி நம்மை நல்வழிப்படுத்திக் கொள்ள நம்முடைய முயற்சியுடன் இறை சக்தியின் அருளும் தேவைப்படுகின்றது. அதனைத்தான் நம் முன்னோர்கள் வழிபாடுகள், பண்டிகைகள், விழாக்கள் மூலம் நமது கலாச்சாரத்தில் புகுத்தியுள்ளனர்.

நம் நாட்டில் வருடம் பிறந்தது முதல் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக தமிழகத்தில் அன்றாடம் ஆன்மீகம் சார்ந்த விழாக்களுக்கு பஞ்சமே கிடையாது. தமிழ் மாதங்களை அடிப்படையாய் கொண்டு பல விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ் மாதங்களான சித்திரை, தை மாதங்களுக்கு இங்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அது போலத்தான் ஆடி மாதத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. தமிழ் மாதத்தில் நான்காவது மாதமாக வருவது ஆடி மாதம். இந்த வருடம் 2023ல் ஆடி மாதம் ஜூலை 17-ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.

இது தக்ஷணாயன கால ஆரம்பம். அதாவது தெய்வங்களுக்கு இரவு நேரம். இக்காலத்தில் தெய்வங்களை வழிபடுவதினையே நம் முன்னோர்கள் சிறப்பு எனக் கூறுகின்றனர். இக்காலம் அதிகம் சக்தி வழிபாட்டிற்கு உரிய காலம். தேவர்களும் இக்காலத்தில் சக்தி உபாசனையில் இருப்பது ஐதீகம். அப்படிப்பட்ட ஆடி மாதங்களில் உள்ள விசேஷங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

மாதப்பிறப்பினை ஆடிப்பிறப்பு என்று கொண்டாடுகின்றோம். வீட்டு வாசலிலும் பூஜை அறையிலும் அரிசி மாவினால் பெரிய கோலம் இட்டு காவி மண் பூசி இம்மாதம் முழுதும் அலங்கரிப்பது வழக்கம். மாவிலை தோரணம் கட்டி வீட்டினை தூய்மைப்படுத்துவர்.ஆடி மாதம் பிறந்த உடனேயே கோவிலுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பர். பலர் மாத தர்ப்பணம் செய்வர். புதிதாய் கல்யாணம் நடந்திருந்தால் பெண், மாப்பிள்ளையை வீட்டுக்கு அழைப்பர். தாலிக்கயிறு மாற்றுவர்.

முருகனுக்கு உகந்த தினமான செவ்வாய் அன்று குறிப்பாக ஆடி மாசத்தில் முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு வாரத்தில் இந்த மூன்று தினங்களும் சக்தி வழிபாட்டிற்கு உகந்ததாகக் கூறப்படுகின்றது. செவ்வாய்க் கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு குறிப்பாக துர்க்கை அம்மனை வழிபடுவது நலம் உண்டாக்கும். கல்யாணம் ஆகாத பெண்கள் கல்யாணம் வேண்டியும், கல்யாணம் ஆன பெண்கள் கணவன் மற்றும் குடும்ப நலம் வேண்டியும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வர். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு நாட்களில் அம்மனுக்கு பொங்கல் வைப்பது, கூழ் ஊற்றுவது அனைத்து அம்மன் கோவில்களிலும் காணப்படும் ஒன்று.

அம்மனுக்கு வேப்பிலை, எலுமிச்சை, சிகப்பு அரளி மாலைகளை செலுத்தி வழிபடுவது சிறப்பு. ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளியன்று அம்மனுக்கு வீட்டில் நைவேத்தியம் செய்து வழிபட்டால், சுபிக்‌ஷம் கிடைக்கும். ஆடி முதல் வெள்ளி அன்று லட்சுமியினை வழிபடுவர். இரண்டாம் வெள்ளி அங்காள பரமேஸ்வரி, காளி, துர்க்கை இவர்களை அறிவு வேண்டி வழிபடுவர். மூன்றாம் வெள்ளி அன்று அன்னை பார்வதி, காளி மாதா இவர்களை தைரியம், வளம் வேண்டி வழிபடுவர். நான்காம் வெள்ளி அன்று காமாட்சி அன்னையை தன் உறவுகளோடு இன்பமாய் வாழ வழிபடுவர்.

ஆடிக் கிருத்திகை

கார்த்திகை பெண்கள் ஆறு பேர் கந்தனை பாலூட்டி வளர்த்த காரணத்தினால் முருகனுக்கு சிவபிரான் கார்த்திகேயன் என்ற பெயரினை அருளினார். கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருப்போருக்கு முருகப்பெருமான் அனைத்து நலன்களையும் வழங்குவார் என்பது ஐதீகம். ஆடிக் கிருத்திகை அன்று வழிபடுவது கூடுதல் விசேஷம். ஆடிக்கிருத்திகை, முருகப்பெருமானுக்கு விசேஷ நாளாக வழிபடப்படுகிறது. கிருத்திகை அன்று முழு உபவாசம் இருந்து மாலை கோவிலுக்குச் சென்ற பிறகே உணவு அருந்துவர். முழு நாளும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் அருந்தி விரதம் இருப்பர். ஆடிக் கிருத்திகை அன்று கோவில்களில் பால் அபிஷேகம் செய்வது, முருகனுக்கு காவடி எடுப்பது விசேஷம்.

ஆடி அமாவாசை

உயிரோடு இருப்பவர்கள் நீடூழி வாழ அவர்கள் பிறந்த நட்சத்திரம் அன்று அவர் பெயரில் கோவிலில் அர்ச்சனை செய்கிறோம். மறைந்தவர்கள் மோட்சம் அடைய அவர்கள் இறந்த திதி அன்று அவர்களுக்காக தர்ப்பணம் செய்கிறோம். அமாவாசை அன்று சூரியன், சந்திரன் இருவரும் ஒரே ராசியில் இருப்பதால் இது ஒருவரின் தந்தை, தாயினை குறிக்கின்றது. ஆகவே அமாவாசையில் முன்னோருக்கு வழிபாடு செய்வது மிகவும் நல்லது. ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம். அன்று நதி, ஆறு, கடல் கரைகளில் பித்ருக்களுக்கான தர்ப்பணத்தினை செய்யும் பொழுது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, மோட்சம் அடைவார்கள் என்று கருட புராணம் கூறுகின்றது. முன்னோர்களின் ஆசீர்வாதம் வருங்கால சந்ததிகளை வெற்றிகரமான வாழ்வு பெறச் செய்யும்.

ஆடிப்பெருக்கு

ஆடி மாதத்தின் 18-வது நாள் அன்று கொண்டாடப்படும் பண்டிகை. பஞ்ச பூதங்களில் நீருக்கு நன்றி சொல்லி வணங்கி வழிபடும் பண்டிகை. குடும்பத்தினர் சுற்றம் சூழ காதோலை, கருகமணி, தாம்பூலம், மஞ்சள், குங்குமம், வளையல் இவற்றினை ஆற்று நீரில் இட்டு மழை, நீர் வேண்டி வணங்குவர். பல வகையிலான கலந்த சாதங்கள் செய்து உற்றார் உறவினருடன் கூடி உண்பர். அம்மன் கோவிலில் அருகில் இருக்கும் குளத்தில் 18-ம் பெருக்கு பூஜையும் மிக சிறப்பாக நடைபெறும்.

ஆடிப்பூரம்

ஆண்டாள் ஜெயந்தி எனப்படும் ஆடிபூஜை அன்னை ஆண்டாளின் பிறந்த நாளாகும். ஆண்டாள் ஸ்ரீலட்சுமியின் பிறப்பாவாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் 10 நாள் விழாவாக ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாள் விழா முடிந்து பத்தாவது நாள் அன்று ஆண்டாள், ஸ்ரீரங்கநாதர் திருமணம் சீரும் சிறப்புமாய் நடைபெறும். அம்பாளுக்கு கோவில்களில் எண்ணற்ற வளையல்கள் கொண்டு அலங்காரம் செய்து வழிபடுவதி வழக்கம்.

ஆடி மாத பண்டிகைகள்

* ஆடி மாதம் 1-ந் தேதி திங்கட்கிழமை (17.7.2023) ஆடி அமாவாசை. அன்றைய தினம் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட்டால் முன்னேற்றம் ஏற்படும்.
* 6-ந் தேதி சனிக்கிழமை (22.7.2023) ஆடிப்பூரம். விரதம் இருந்து அம்பிகையை வழிபட இன்பங்கள் கிட்டும்.
* 16-ந் தேதி செவ்வாய்க்கிழமை (01.08.2023) ஆடிப் பவுர்ணமி. விரதம் இருந்து மலைவலம் வந்தால் மகத்துவம் கிடைக்கும்.
* 16-ந் தேதி செவ்வாய்க்கிழமை (01.08.2023) சங்கரன் கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு.
* 18-ந் தேதி வியாழக்கிழமை (3.8.2023) ஆடிப்பெருக்கு. புது முயற்சிகள் செய்ய பொன்னான நாள்.
* 24-ந் தேதி புதன்கிழமை (9.8.2023) ஆடிக் கிருத்திகை. கந்தப்பெருமானை வழிபட்டால் கவலைகள் தீரும்.

தொகுப்பு: பிரியா மோகன்

You may also like

Leave a Comment

2 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi