Thursday, November 30, 2023
Home » அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

by Kalaivani Saravanan

553. அஜிதாய நமஹ (Ajithaaya Namaha)

அயோத்தியைப் புரஞ்ஜயன் என்னும் மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவர் ராமபிரானுக்குக் குல முன்னோர், ஈக்ஷ்வாகு குலத்தில் தோன்றியவர். அந்தச் சமயம் தேவ லோகத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் யுத்தம் நடந்து வந்தது. அந்தப் போரிலே அசுரர்களின் கை ஓங்கி விட்டது. இந்திரன் திருப்பாற்கடல் நோக்கி ஓடி வந்து, நாராயணனைஅடி பணிந்தான். தான் வெற்றி பெற அருள்புரியுமாறு திருமாலிடம் வேண்டினான்.

திருமாலோ இந்திரனிடம் அயோத்தியை ஆண்டு வரும் புரஞ்ஜய மன்னரிடம் உதவி கேட்கச் சொன்னார். இந்திரன் பூமிக்கு வந்து புரஞ்ஜயனைச் சந்தித்தான். தேவலோகத்துக்கு வந்து, தேவர்களுக்காகப் போர் புரிந்து அசுரர்களை வீழ்த்தி, தேவர்களின் ஆட்சியை மீட்டுத் தருமாறு வேண்டினான் புரஞ்ஜயனிடம் வேண்டினான் இந்திரன். அதைக் கேட்ட புரஞ்ஜயன், தனது தலைநகரான அயோத்தியில் அப்போது கோவில் கொண்டிருந்த திருவரங்கநாதனைச் சென்று வணங்கினான். பெருமாள் சந்நிதி முன் நின்ற புரஞ்ஜயன், இறைவா, இந்திரன் வந்து என்னைப் போர் புரிய அழைக்கிறான்.

அசுரர்களை எதிர்த்துப் போர் புரியுமாறு கேட்கிறான். இது எனக்கு சாத்தியமா, மனிதனாக இருக்கும் நான் எப்படி தேவர்களுக்கு உதவ முடியும் என்று பெருமாளிடம் பிராத்தித்தான். திருமால் திருவாய் மலர்ந்து, அது உனக்கு சாத்தியமே, உன் ஊரின் பெயர் அயோத்தியா. அயோத்தியா என்றால் யாராளும் கைப்பற்ற முடியாத ஊர் என அர்த்தம். நான் இங்கே வசிப்பதால், என் இருப்பிடத்தை யாராலும் கைப்பற்ற முடியாது.

அதனால் தான் இந்த ஊருக்கு இப்படி ஒரு திருநாமம் ஏற்பட்டது. நான் இந்த க்ஷேத்திரத்தில் மட்டுமல்ல உன் உள்ளத்திலும் குடிகொண்டிருக்கிறேன். புரஞ்ஜயனுக்கு இதைக் கேட்டதும் நம்பிக்கை வந்தது. போர் புரிய தேவ லோகத்துக்குச் சென்றான்.புரஞ்ஜயன் தேவலோகத்தில் போர் புரிய வாகனம் வேண்டுமென இந்திரனிடம் கேட்டான். அந்தச் சமயத்தில் தேவர்களிடம் ஒரு வாகனம் கூட இல்லை. அனைத்தையும் இழந்த நிலையில் இருந்தார்கள் தேவர்கள். இந்திரன் தானே வாகனமாக வருகிறேன் எனக் கூறிக் காளை மாடாக வடிவம் கொண்டான். அந்தக் காளை மாட்டின் திமில் மீது ஏறி அமர்ந்து போரிட்டு, அசுரர்களை வென்றான் புரஞ்ஜயன்.

ககுத் என்றால் மாட்டுத் திமில். திமில் மீது ஏறி அமர்ந்து போரிட்டதாலே புரஞ்ஜயன் ககுத்ஸ்தன் எனப் பெயர் பெற்றான். அவன் வம்சத்தில் வந்ததாலே ராம பிரான் காகுத்ஸ்தன் எனப் பெயர் பெற்றான். ககுத்ஸ்தன் வெற்றி பெற்றுத் தந்ததால், இந்திரன் மிகவும் மகிழ்ந்து ஒரு பாராட்டு விழா எடுப்பதாகச் சொன்னான். ககுத்ஸ்தனோ, எல்லாம் நாராயணன் செயல், அவன் என்னுள் குடிக் கொண்டு வெற்றியடையச் செய்தான், அதனால் இந்த வெற்றிக்கான நன்றியை நீ திருமாலிடம் தான் கூற வேண்டும் என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். பகவான் ஓர் இடத்தில் குடி கொண்டால், அந்த இடத்தை யாராலும் கைப்பற்ற முடியாது. ககுத்ஸ்தனுக்குள் திருமால் எழுந்தருளி இருந்தபடியால் தான் அவனை யாராலும் வெல்ல முடியவில்லை.

அவ்வாறே பகவானின் இருப்பிடமான வைகுண்டமும். அங்கே எப்போதும் பகவான் எழுந்தருளி இருப்பதால் வைகுண்டத்தை யாராலும் வெல்ல முடியாது. அதனால் தான் வைகுண்டத்துக்கு அயோத்யா என்ற பெயரே உண்டு – யாராலும் வெல்ல முடியாத லோகம் என்று பொருள்.வைகுண்டத்தைக் காலத்தாலோ, படைப்பு அழிப்பு போன்றவற்றாலோ கைப்பற்ற முடியாது, அதாவது தங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்த முடியாது.

வைகுண்டத்தில் இருக்கும் பகவான், பகவானின் தொண்டர்கள், நித்யசூரிகள் அனைவரும் எந்த மாற்றத்துக்கும் உட்படாதவர்கள். அதனால் வைகுண்டத்துக்கு அஜித என்னும் திருநாமம் ஏற்பட்டது.அஜிதா என்றால் எதனாலும் அழிக்கமுடியாதது, யாராலும் கைப்பற்ற முடியாதது என்று பொருள். எதனாலும் அழிக்க முடியாத வைகுண்டமாகிய அஜிதாவை இருப்பிடமாகக் கொண்டிருப்பதால், நாராயணன் அஜித எனப் பெயர் பெற்றார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 553வது திருநாமம்.அஜிதாய நமஹ என்று தினமும் சொல்லி வருவோர்க்கு வாழ்வில் என்றும் வெற்றி ஏற்படும்படி திருமால் அருள்புரிவார்.

554. க்ருஷ்ணாய நமஹ (Krishnaaya Namaha)

சுவாமி வேதாந்த தேசிகன், திருவரங்கநாதனின் பாதுகையை வர்ணித்து இயற்றிய ஸ்ரீபாதுகா சஹஸ்ரத்தின் 732வது ஸ்லோகத்தில் கவிநயத்துடன் அழகாக ஒரு வர்ணனையை அளிக்கிறார்.

மதுஜித் தனு காந்தி தஸ்கராணாம்
ஜலதானாம் அபயம் விதாதுகாமா
சபலேவ ததங்க்ரிம் ஆச்ரயந்தீ
பவதி காஞ்சன பாதுகே விபாதி

கார்மேகத்துக்கும் அரங்கனுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.

1.அரங்கன் கருனை மழை பொழிகிறார், கார்மேகமோ தண்ணீரை மழையாகப் பொழிகிறது. மழை பொழிதலில் ஒற்றுமை.

2.அரங்கன் மின்னல் போன்ற பிராட்டியின் இசைவைப் பார்த்தபின் தான் அனுக்கிரகம் செய்கிறார். கருமேகமும் மின்னல் வெட்டிய பின்தான் மழை கொடுக்கும். மின்னலை மேகத்தின் மனைவியாகச் சொல்லக் கூடிய வழக்கமும் உண்டு.

3.அரங்கன் எப்படி எப்பொழுது அனுக்கிரகம் பண்ணுவார் என்பதைக் கணிக்கவே முடியாது. கார்மேகத்தையும் கணிக்க முடிவதில்லை, எவ்வளவு அறிவியல் உதவி இருப்பினும் எப்படி, எந்த அளவில் மழைப் பொழிவு இருக்கும் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடிவதில்லை.

4.அரங்கன் அனுக்கிரகம் செய்யும் போது ஏற்றத்தாழ்வு பார்ப்பதே கிடையாது. அனைத்து பக்தர்களுக்கும் சமமாகவே அருள்புரிகிறார். கார்மேகத்திற்கும் எந்த ஏற்றத்தாழ்வும் கிடையாது. காடு, மலை, ஏழை பணக்காரர் அனைவருக்கும் ஒரே மழை தான்.

5.ரங்கநாதனைச் சேவித்தால் பக்தர்கள் ஆடிப்பாடி மகிழ்கிறார்கள், அதே போல் கார்மேகத்தைப் பார்த்தால் மயில்கள் ஆடும்.

6.ரங்கநாதனுடைய அனுக்கிரகம் ஆழ்வார்களின் வாக்கில் விழுந்தால் முத்தான பாசுரங்களாக வருகிறது. கார்மேகத்திலிருந்து மழைத் துளி சிப்பிக்குள் விழுந்தால் அது முத்தாக மாறுகிறது. இவ்வளவு ஒற்றுமைகளை இருவரும் கொண்டுள்ளதால், அரங்கனுடைய கருப்பு நிறத்தைத் தான் மேகங்கள் திருடிவிட்டன என்று நினைக்கிறேன் என்றார் தேசிகர். நிறத்தை மட்டுமில்லாமல் குணங்களையும் அரங்கனைப் போலவே கொண்டிருப்பதால் இவ்வாறு கூறுகிறேன் என்றார்.

இந்நிலையில் கார்மேகத்தின் மனைவியாக மின்னல் சிந்தித்ததாம். நம் கணவர் இப்படித் திருமாலிடம் இருந்தே நிறத்தைத் திருடி விட்டாரே. அவர் நம் கணவரைத் தண்டித்து விடுவாரோ என்று அஞ்சியதாம். அதனால் தான் கார்மேகத்தின் மனைவியான மின்னல் அரங்கனின் திருவடியில் சரணாகதி செய்து விட்டது. சரணாகதி செய்ததன் அடையாளம் தான் அந்த மின்னலே அரங்கன் திருவடியில் பாதுகையாக வடிவெடுத்து இருக்கிறது என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்தாகும்.

பாதுகைகள் மின்னலைப் போல ஒளி விசிக்கொண்டு இருப்பதால் இவ்வாறு மின்னலே பாதுகையாக வந்ததாக உருவகப் படுத்துகிறார் தேசிகன். இதில் வேதாந்தக் கருத்துகளும் உள்ளன. மேகம் ரங்கநாதனிடமிருந்த நிறத்தை திருடிவிட்டது, இருப்பினும் மேகத்திற்காக அதன் மனைவி மின்னல் சரணாகதி செய்கிறது. அதையும் ஏற்கிறார் ரங்கநாதர்.

அதுபோலே நாம் செய்த தவறுக்காக இன்னொருவர் சரணாகதி செய்தாலும் பெருமாள் ஏற்கிறார். பகவானின் கருணை அவ்வளவு பெரியது என்பதை எடுத்துக் காட்டுகிறார். மனதில் கார்மேகம் போல் குளிர்ச்சியைத் தருகின்ற கருமை நிறம் படைத்தவர் திருமால்.

வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனும் கார்மேக வண்ணனாகவே காட்சி தருகிறார். அதனால் தான் திருமாலுக்கு க்ருஷ்ண என்று திருநாமம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 554வது திருநாமம்.கிருஷ்ணாய நமஹ என்று தினமும் சொல்லி வந்தால் நமது பிழைகளையும் கருணைக் கடலான திருமால் மன்னித்து அருள்வார்.

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?