Monday, June 10, 2024
Home » ஆலமர் செல்வர்

ஆலமர் செல்வர்

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பரிசில் பெறக் கருதிய பாணனொருவனைப் பரிசில் பெற்றான் ஒருவன் ஓய்மானாட்டு நல்லியக் கோடனிடத்தே ஆற்றுப்படுத்தியதாக அந்நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நந்தத்தனார் பாடியநூலே சிறுபாணாற்றுப்படையாகும். பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான இந்நூலில்;

…………. நிழறிகழ்
நீலநாக நல்கிய கலிங்க
மாலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோ
ளார்வ நன்மொழி யாயும்… (95-99)

என்று கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் என்பானின் புகழ் எடுத்துரைக்கப் பெற்றுள்ளது. இவ்வடிகளுக்குப் பாம்பு ஈன்று கொடுத்த ஒளி விளங்கும் நீலநிறத்தையுடைய, உடையினை ஆலின்கீழ் இருந்த இறைவனுக்கு, “நெஞ்சு பொருத்திக் கொடுத்த ஆய்’’ என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறியுள்ளார். ஆலின்கீழ் இருந்த இறைவனாகத் தொன் நூல்கள் உரைப்பது, சிவபெருமானின் தட்சிணாமூர்த்தி வடிவமாகும். இங்கு ஆய் அளித்த நீலநிற ஆடை பற்றிய விளக்கங்கள் வேறு எங்கும் கூறப்பெறவில்லை. ஆனால், அஃது ஓர் அரிய ஆடை என்பது மட்டும் புலப்படுகின்றது. சிவபெருமானின் புதல்வனாகிய முருகப்பெருமானைக் குறிப்பிடும் செம்மொழி நூல்கள், பின்வருமாறு உரைக்கின்றன.

திருமுருகாற்றுப்படை, ‘ஆல்கெழு கடவுட் புதல்வ’ என்றும், சிறுபாணாற்றுப்படை ‘ஆலமர் செல்வற் கமர்ந்தனன்’ என்றும், கலித்தொகை, ‘ஆலமர் செல்வ னணிசால் பெருவிறல்’ என்றும், ‘ஆலமர் செல்வ னணிசால் மகன்விழாக் கால்கோள்’ என்றும், புறநானூறு, ‘ஆலமர் கடவுளன்ன நின் செல்வம்’ என்றும், சிலப்பதிகாரத்தின் குன்றக்குரவை, ‘ஆலமர் செல்வன் புதல்வன்’ என்றும், மணிமேகலை ‘ஆலமர் செல்வன் மகன்’ என்றும் கூறியுள்ளன. சிவபெருமானை ஆலமர் செல்வன் என்னும் சிறப்புப் பெயரால் குறிப்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வழக்கு என்பதை அறியமுடிகிறது. திருமுறைகளில் ஆலமர் செல்வர் பற்றிய பல பாடல்கள் காணப் பெறுகின்றன. குறிப்பாகத் தேவாரப் பனுவல்களில் தட்சிணாமூர்த்தியின் திருவடிவம் பற்றிய பல பாடல்கள் உள்ளன.

`கல்லால் நிழல்மேவி காமுறு சீர்நால் வர்க்குஅன்
எல்லா அறன்உரையும் இன்அருளால் சொல்லினான்
நல்லார் தொழுதுஏத்தும் நாலூர்மயா னத்தைச்
சொல்லாதவர் எல்லாம் செல்லாதார்தொல் நெறிக்கே’
– என்பது இரண்டாம் திருமுறையில் திருஞானசம்பந்தர் காட்டும் ஆலமர் செல்வரின் கோலக்காட்சியாகும்.

கல்லாலம் எனும் ஆலமரத்தின்கீழ் அவர் அமர்ந்து சனகாதி முனிவர் நால்வருக்கு அறம் உரைத்ததால்தான் ஆலமர்செல்வர் எனக் குறிக்கப்பெற்றார். சுந்தரர் திருப்புன்கூரில் திருப்பதிகம் பாடும்போது,

`போர்த்தநீள் செவியாளர்அந் தணர்க்குப்பொழில்கொள்ஆல் நிழற்கீழ்அறம் புரிந்து’
– என்றும், திருநின்றியூரில் பதிகம் பாடும்போது,

`காதுபொத்தர்ஐக் கின்னரர் உழுவை

கடிக்கும் பன்னகம் பிடிப்படரும் சீயம்
கோதுஇல் மாதவர் குழுவுடன் கேட்பக்

கோலஆல் நிழல்கீழ் அறம் பகர’

– என்றும் பாடி ஆலமர்செல்வரின் கோலம் காட்டியுள்ளார். பொதுவாகச் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் எனும் நால்வருக்குப் பெருமான், அறம் உரைத்ததாக அனைவரும் கூறுவர். ஆனால், சுந்தரரோ மேற்குறித்த இரண்டு பாடல்களிலும் காது பொத்தர், போர்த்த நீள் செவியாளர் எனப்பெறுவோரைக் குறிப்பிட்டுப் பின்பே, சனகாதி முனிவர்களை அந்தணர் என்றும், மாதவர் குழுவினர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள ராஜராஜ சோழனின் கல்வெட்டுச் சாசனமொன்றில் குறிப்பிடப்பெறும் தட்சிணாமூர்த்தியின் கோலக்காட்சி பற்றிய குறிப்பில் கர்ணபிராவிருத்தர்கள் இருவர் என்ற சொற்றொடர் காணப் பெறுகின்றது. காதுபொத்தர் எனச் சுந்தரர் குறிப்பிடும் சொல்லின் வடமொழி வடிவமே இதுவாகும்.

திருக்கயிலாய மலையில் பொன்னும் மணியும் இழைத்துக் கட்டப்பெற்ற அழகிய மண்டபத்தின் நடுவில் சிங்கம் சுமந்த ஆசனத்தில் பார்வதியும் பரமசிவனும் எழுந்தருளி இருந்தனர். அப்போது, முனிவர்கள் எல்லோரும் தாம்தாம் விரும்பிய வரங்களைப் பெறும் பொருட்டுச் சிவபிரானைப் பலவாறு போற்றித் துதித்துக் கூடியிருந்தனர்.அத்தருணம் பார்வதிதேவி எழுந்து நின்று பெருமானை வணங்கி, ‘‘அருட்கடலாக விளங்கும் அண்ணலே! சிவத்துரோகியாகிய தக்கனிடம் அடியேன் வளர்ந்த காரணத்தால், தாட்சாயணி என்ற பெயர் பெற்றுள்ளேன். அதனை மாற்றி அருள் புரிய வேண்டும்’’ என்று பிரார்த்தித்தாள்.

ஒண்ணுதற் கடவுள் உவப்பெய்தி ‘‘உமையே! இமய பர்வதராசன் நின்னைப் புதல்வியாக அடைய வேண்டும் என்று நம்மை நோக்கித் தவம்புரிகின்றான். நீ அவன்பாற் சென்று வளர்வாயாக. யாம் அங்கு வந்து நினக்கு மணமாலை சூட்டுவோம்’’ என்றருளிச் செய்தார். அன்னையும் அண்ணலின் அடிகளை வணங்கிச் சென்று தவம் புரியும் மலையரசனை அடைந்து குழவி வடிவாய் அமர்ந்து, அவனாலும் அவன் மனைவி மேனையாலும் வளர்க்கப் பெற்று ஐந்து வயது முதலே தவச்சாலையில் இருந்து தவஞ்செய்து வந்தாள்.

அங்கே அன்னையானவள், தவத்திலிருக்கும்போது, பிரம்மதேவனின் புதல்வர்களாகிய சனகன், சனந்தனன், சனாதனன், சனற்குமாரன் ஆகிய நான்கு முனிவர்களும் அவ்வன்னையை வணங்கிவிட்டுக் கயிலாயத்திற்குச் சென்று திருநந்திதேவர் அனுமதியைப் பெற்றுச் சிவபெருமான் திருமுன்பு சென்று, அவனடி விழுந்து வணங்கி எழுந்து நின்று, ‘‘பரம்பொருளே! யாங்கள் வேதங்கள், ஆகமங்கள் யாவும் கற்றும் மனம் தெளிவடையாமலும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மல இருள் நீங்கப்பெறாமலும் வருந்துகிறோம்.

ஆதலினால், “தேவரீர் எங்களுக்கு வேதத்தின் உண்மைப் பொருளை யாங்கள் கடைத்தேறும் வண்ணம் உபதேசித்தருள வேண்டும்’’ என்று வேண்டிக் கொண்டனர். சிவபிரான் அம்முனிவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி அவர்களைக் கையமர்த்தி அமரச்செய்து அவர்களுக்கு உபதேசிக்கும் குருபீடமாகிய தட்சிணாமூர்த்தி வடிவம் தாங்கியருளினார்.பெரும்பாலான சிவாலயங்களின் கருவறை தென்புறக் கோட்ட மாடங்களில் ஆலமர் செல்வரின் திருமேனி கற்சிற்பங்களாக இடம் பெற்றிருக்கும். கல்லாலால மரத்தின்கீழ் மலை முகடுகளின்மேல் வீராசன கோலத்தில் அமர்ந்தவாறு நான்கு திருக்கரங்களுடன் காணப்பெறுவார்.

பின்னிரு கரங்களில் அக்கமாலை, எரி ஆகியவை திகழும் இடக்கரத்தில் சுவடி ஒன்றினை ஏந்தியவாறு தன் வலக்கரத்தால் சின்முத்திரை காட்டி அறம் உரைப்பவராகக் காணப் பெறுவார். ஆலமரத்தின் மேல் பறவைகள், அணில், பொக்கணம் எனும் திருநீற்றுப்பை, அக்கமணிமாலை ஆகியவை காணப்பெறும். காலின்கீழ் முயலகன் காணப்பெறுவான். மலையின் பொந்துகளில் பாம்பு, புலி, சிங்கம் ஆகியவையும் இருடிகளும் காணப்பெறுவர்.

கோட்ட மாடத்தின் பக்கவாட்டில் மேற்புறம் சூரியசந்திரர், கின்னரர், கிம்புருடர் போன்றோர் இடம்பெற்றிருப்பர். காது பொத்தர், சனகாதி முனிவர்களுடன், மான், புலி, சிங்கம் போன்றவையும் காணப் பெறும். பெருமானின் தலையின் பின்புறம் சடாபார அலங்காரமும் முடிமேல் கபாலமும் திகழும். சில இடங்களில் அமர்ந்த கோலம் வேறுபட்டும் வீணை இசைப்பவராகவும் காணப்பெறுவார்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

You may also like

Leave a Comment

eleven + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi