கீழக்கரை, நவ.9: ஏர்வாடி தர்காவிற்கு தமிழ்நாடு மட்டும் இன்றி கேரளா,கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து ஆன்மீக மருத்துவத்திற்காக ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஏர்வாடி தர்கா அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பிரியர்கள் மது அருந்தி விட்டு கீழே விழுந்து கிடப்பதும் தகராறில் ஈடுபடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் பள்ளிக்கு சென்று விட்டு வரும் மாணவ,மாணவிகள் அச்சத்துடன் டாஸ்மாக் கடையை கடந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. மேலும் முக்கிய சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் வெளியூர்களில் இருந்து வரக்கூடிய யாத்திரீகர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு உள்ளது. மேலும் மது பிரியர்கள் குடித்துவிட்டு பாட்டில்களை நடுரோட்டில் உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் பள்ளி செல்லும் மாணவ,மாணவிகளின் கால்களில் பாட்டில்கள் கீறி காயங்கள் ஏற்படும் நிலை இருந்து வருகிறது. வருங்கால மாணவ,மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஏர்வாடி தர்கா செல்லும் முக்கிய வீதியில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.