ராமநாதபுரம், நவ.9: ராமநாதபுரத்தில் 20.10.2023 அன்று தனியார் கல்வியியல் கல்லூரியில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு, 11ம் வகுப்பு மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டியில் பொது சுகாதாரம் எச்.ஐ.வி., ரத்ததானம், காசநோய், பால்வினை நோய், அரசின் சுகாதார நலத்திட்டங்கள் தொடர்பான வினாடிவினா போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற பரமக்குடி சௌராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.2500, வீதம் ரூ.5000ம், இரண்டாம் பரிசாக உச்சப்புளி நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகளுக்கு தலா ரூ.2000 வீதம் ரூ.4000ம், மூன்றாம் பரிசாக ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகளுக்கு ரூ.1500 வீதம் ரூ.3000ம், ஆறுதல் பரிசாக சு.காவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவிக்கு தலா ரூபாய் 1000, வீதம் ரூபாய் 2000க்கான பரிசுத் தொகைகள் நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான சான்று மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் மாணவ மாணவிகளுக்கு வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட திட்ட மேலாளர் (பொ) முருகேசன் மற்றும் நடுவர் ஆசிரியர் வேல்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.