சித்தூர் : ஆந்திர முதல்வரின் ஆலோசகர் பாஜ மாநில தலைவரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது என மாவட்ட தலைவர் கூறினார்.சித்தூரில் உள்ள பாஜ கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஜெகதீஷ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:ஆந்திர மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் புரந்தரேஸ்வரி முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை மரியாதை நிமித்தமாக ராஜமுந்திரி சிறைக்கு சென்று சந்தித்தார். இதனால் ஆந்திர மாநில முதல்வரின் ஆலோசகரான சஜ்ஜலா ராமகிருஷ்ணா எங்கள் தலைவர் புரந்தரேஸ்வரியை விமர்சனம் செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் அவருடைய சொந்தக்காரராக சிறைக்கு சென்று பார்க்கவில்லை.
கட்சி தலைவராகவும் முன்னாள் அமைச்சராகவும் நினைத்து அவரை சிறைக்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால் மாநில ஆலோசகர் சஜ்ஜலா ராமகிருஷ்ணா, சந்திரபாபு என்னென்ன ஊழல்கள் செய்துள்ளார். அவர் எங்கெங்கு பணத்தை பதுக்கி வைத்துள்ளார். அனைத்து விவரங்களையும் கேட்பதற்காக எங்கள் தலைவர் சென்றுள்ளதாக விமர்சனம் செய்ததை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்று நான்கரை வருடத்தில் மாநிலத்தில் ஒரு நல திட்ட பணிகள் கூட செய்யவில்லை. அவர்களுடைய ஆட்சியில் மணல் கொள்ளை, செம்மரக்கட்டை கடத்தல், கல்குவாரிகள் ஆக்கிரமிப்பு, கஞ்சா கடத்தல், போதை பொருட்கள் விற்பனை, தரமற்ற மது பாட்டில்கள் விற்பனை உள்ளிட்டவை அதிகளவு நடைபெற்று வருகிறது.
அதே போல் ஏழை எளிய மக்கள் மீது தாக்குதல் நடத்துவது பொய் வழக்குகள் பதிவு செய்வது, ஏழை எளிய மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வது, தலித் மக்கள் மீது பலாத்காரம் செய்வது, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவை தான் அதிக அளவு ஆளும் அரசு நடத்தி வருகிறது. முதல்வர் ஜெகன் மோகன் அவருடைய தங்கை மற்றும் தாயை விரட்டியடித்தவர்.
அதே போல் அவருடைய சொந்த சித்தப்பாவை கொலை செய்து நாடகம் ஆடி வருவது முதல்வர் ஜெகன்மோகன். இவருடைய ஆட்சியில் ஆந்திர மாநிலத்தில் ஒரு தொழிற்சாலை, ஒரு வெளிநாட்டு நிறுவனங்கள் கூட அமைந்ததில்லை.
இளைஞர்கள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு அண்டை மாநிலங்களுக்கு சென்று கூலி வேலை செய்யும் அவல நிலை உள்ளது. மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்காக பருப்பு இலவசமாக மாநில அரசுக்கு வழங்கி வருகிறது. அந்தப் பருப்பை ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு வழங்காமல் விற்று பல கோடி ரூபாய் ஊழல் செய்து வருவது ஆளும் கட்சி அரசு.
ஊழலில் பெருச்சாளியான ஆளும் கட்சி அரசு எங்கள் தலைவரை விமர்சனம் செய்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். வரும் தேர்தலில் ஆளும் கட்சி அரசுக்கு ஒருவர் கூட வாக்களிக்க மாட்டார்கள். மாபெரும் தோல்வியை தழுவத்தான் இதுபோன்ற செயல்களில் ஆளும் கட்சியினர் செயல்பட்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். இதில் கட்சி முன்னாள் எம்பி துர்கா ராமகிருஷ்ணா முன்னாள் எம்எல்ஏ ராமகிருஷ்ண சௌத்ரி மாவட்ட பொதுச்செயலாளர் சீனிவாஸ் ஓபிசி மாவட்ட தலைவர் சண்முகம் உள்பட ஏராளமான பாரதிய ஜனதா கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.