சென்னை: பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர்கள் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இயங்கி வந்த பிரணவ் என்ற பிரபல நகைக்கடை, நாகர்கோவில், மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை ஆகிய ஊர்களில் கிளைகள் அமைத்து செயல்பட்டது. இங்கு நகை வாங்கினால் செய்கூலி சேதாரம் இல்லை என்று கவர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் நகை சிறுசேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் இருப்பதாக மக்களிடம் கவர்ச்சி விளம்பரங்கள் செய்தது. பல கிளைகள், பெரு நிறுவனம் என்று நம்பி பலரும் முதலீடு செய்தனர்.
ஆனால் பிரணவ் ஜூவல்லரி முதலீடு செய்த தொகைக்கான முதிர்வு முடிந்த உடன் அந்த நகைக்கடைக்கு சென்ற முதலீட்டாளர்கள் தாங்கள் செலுத்திய தொகையை திரும்ப கேட்டபோது திருப்பித்தராமல் இழுத்தடித்து மோசடி செய்தனர். ஒரு கட்டத்தில் அந்த கடையின் வாடிக்கையாளர்கள் பலர் திருச்சி, மதுரை உள்ளிட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதனிடையே கடைகள் மூடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாரை முற்றுகையிட்டனர். இதையடுத்து புகார் தொடர்பாக திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அந்த கடையின் உரிமையாளர்கள் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர். பிரணவ் ஜுவல்லரி 47 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளன.
தொடர்ந்து, 11 கிளைகளில் பெரும்பாலான இடங்களில் போலி நகைகள் மற்றும் கவரிங் நகைகளை வைத்து மக்களிடம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரணவ் ஜுவல்லரி மோசடி விவகாரத்தில் 100 சவரன் நகைகளும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிரணவ் ஜூவல்லரியில் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்களிடமிருந்து புகார்கள் பெற தனியாக புகார் மேளா ஒன்றை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்துவரும் பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர்கள் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகாவிற்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.