Friday, May 10, 2024
Home » 2023 – 2024 ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவால் அறிவிக்கப்படவுள்ளபுதிய அறிவிப்புகள்!

2023 – 2024 ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவால் அறிவிக்கப்படவுள்ள
புதிய அறிவிப்புகள்!

by Suresh

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆற்றிய உரை; இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021 – 22, 2022 – 23 மற்றும் தற்போது 2023 – 24 மானியக் கோரிக்கை அறிவிப்புகளில் ரூ.4,137 கோடி மதிப்பீட்டில் 16,108 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டள்ளன.

உபயதாரர்கள் தாமாக முன் வந்து ரூ.583 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகளை மேற்கொள்கின்றனர். மேலும், உபயதாரர்கள் திருப்பணிகளில் பங்கேற்க ஆர்வம் தெரிவித்து வருவதால் அதிகப்படியான திருப்பணிகள் தொடரும்.

இந்த ஆண்டு மொத்தம் 249 அறிவிப்புகள். நேரமின்மை காரணமாக 37 அறிவிப்புகளை மட்டும் வாசித்து மீதமுள்ள 212 அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் வாசித்ததாக கருதி பதிவு செய்யுமாறு பேரவை தலைவரை கேட்டுக்கொள்கிறேன்.

புதிய அறிவிப்புகள்;

  1. இராமேசுவரம் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலுக்கு, அக்னி தீர்த்த படித்துறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி அரசு மானியம் வழங்கப்படும்.
  2. தமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் கிராம தெய்வங்களின் சுடுமண் சிற்பங்களைப் பாதுகாத்துச் சீரமைக்கும் பணி 6 திருக்கோயில்களில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் (அறிவிப்பு எண்.2)
  3. திருப்பைஞ்ஞீலி, பழையாறை, திண்டல், உள்ளிட்ட 15 திருக்கோயில்களில் ரூ. 25.98 கோடி மதிப்பீட்டில் இராஜகோபுரங்கள் கட்டப்படும். (அறிவிப்பு எண்.3 முதல் 9 வரை)

10.19 திருக்கோயில்களில் புதிய திருத்தேர்கள் ரூ.11.83 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
(அறிவிப்பு எண்.10 முதல் 13 வரை)

  1. 53 திருக்கோயில்களில் உள்ள திருத்தேர்களுக்கு ரூ. 10.25 கோடி மதிப்பீட்டில் திருத்தேர் பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்படும். (அறிவிப்பு எண்.14)
  2. 46 திருக்கோயில்களின் திருக்குளங்கள் ரூ.25.94 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும். (அறிவிப்பு எண்.15 முதல் 23 வரை)
  3. பக்தர்கள் மனம் மகிழும் வகையில் 2 திருக்கோயில்கள் ரூ.7 கோடி மதிப்பீட்டில் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்படும். (அறிவிப்பு எண்.24)
  4. வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 3 நாள் தைப்பூச விழாவிற்கு வருகை தரும் 10,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். (அறிவிப்பு எண்.28)
  5. திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் அவர்களுக்கு புத்தாடைகளுடன் கட்டணமில்லா திருமணம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதல் அத்திருமணங்களுக்கு 4 கிராம் பொன் தாலி திருக்கோயில் சார்பில் வழங்கப்படும். (அறிவிப்பு எண்.35)
  6. தற்போது 15,000 திருக்கோயில்களில் நடைமுறையில் உள்ள ஒரு கால பூசைத் திட்டம் மேலும் 2,000 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். இத்திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.1,000/- வழங்கப்படும். (அறிவிப்பு எண்.36)
  7. ஒரு கால பூசை திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பிள்ளைகளின் மேற்படிப்பு நலன் கருதி ஆண்டுதோறும் 400 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிட தனியாக ஒரு மைய நிதி ஏற்படுத்தப்படும். (அறிவிப்பு எண்.37)
  8. ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3,000/-லிருந்து ரூ.4,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும். (அறிவிப்பு எண்.38)
  9. குடும்ப ஓய்வூதியம் ரூ.1,500/- லிருந்து ரூ.2,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும். (அறிவிப்பு எண்.39)
  10. ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கொடையாக ரூ.1,000/- வழங்கப்படும். (அறிவிப்பு எண்.40)
  11. திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி முடித்தவர்கள், பணி அனுபவம் பெற ஏதுவாக திருக்கோயில்களில் மூத்த அர்ச்சகர்களின் கீழ் பணி அனுபவம் பெற வாய்ப்பளித்து ரூ.6,000/- மாத ஊக்கத் தொகை வழங்கப்படும். (அறிவிப்பு எண்.41)
  12. ஓலைச் சுவடிகள் மற்றும் மூலிகை ஓவியங்கள் ஆய்வு மையம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்படும். (அறிவிப்பு எண்.42)
  13. பக்தர்கள் நலன் கருதி பழனி-இடும்பன் மலை, அனுவாவி, திருக்கழுக்குன்றம், திருநீர்மலை ஆகிய மலைப் பகுதியில் அமைந்துள்ள 4 திருக்கோயில்களில் கம்பிவட ஊர்தி ரூ.66 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
    (அறிவிப்பு எண்.43 முதல் 46 வரை)
  14. சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் நலனுக்காக ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் மின்தூக்கி அமைக்கப்படும். (அறிவிப்பு எண்.49)
  15. மயிலாப்பூர். அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயிலில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். (அறிவிப்பு எண்.50)
  16. திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் புதிய வெள்ளித் திருத்தேர் ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். (அறிவிப்பு எண்.51)
  17. அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் 22 திருக்கோயில்களில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
    (அறிவிப்பு எண்.52 முதல் 59 வரை)
  18. திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாற்றுத்திறனாளிகள் கடலில் தீர்த்தமாட சிறப்பு நடைபாதை ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். (அறிவிப்பு எண்.60)
  19. திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் சார்பாக ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம் உள்ளிட்ட மூன்று பசுக்கள் காப்பகங்கள் ரூ.4.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும்.
    (அறிவிப்பு எண்.61 முதல் 63 வரை)
  20. 1. சிறுவாபுரி, பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
  21. மேல்மலையனூர், அங்காள பரமேஸ்வரி திருக்கோயில்,
  22. குமாரவயலூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
  23. மருதமலை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
  24. மதுரை, அழகர்கோயில், கள்ளழகர் திருக்கோயில்
    ஆகிய திருக்கோயில்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏதுவாக பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, ரூ.200 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.(அறிவிப்பு எண்.64)
  25. 7 திருக்கோயில்களில் ரூ.16.90 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் இளைப்பாறும் மண்டபம் புதியதாகக் கட்டப்படும். (அறிவிப்பு எண்.74 முதல் 80 வரை)
  26. சென்னையிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திருத்தணியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் இளைப்பாறும் மண்டபம் கட்டப்படும். (அறிவிப்பு எண்.81)
  27. ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக, திருமலையில் பக்தர்களுக்கு கூடுதலாக தங்கும் விடுதி ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். (அறிவிப்பு எண்.82)
  28. திருக்கோயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் விரைவாகத் தரிசனம் செய்யும் பொருட்டு தனி வரிசை ஏற்படுத்தப்படும். (அறிவிப்பு எண்.84)
  29. பக்தர்கள் பெருவாரியாக வருகை புரியும் திருவண்ணாமலை, சமயபுரம், பழனி, ஸ்ரீரங்கம் ஆகிய திருக்கோயில்களில் தினசரி ஒரு மணி நேரம் இடை நிறுத்த தரிசன வசதி (Break Darshan) ஏற்படுத்தப்படும். (அறிவிப்பு எண்.85)
  30. இந்து சமய அறநிலையத்துறை பதிப்பகப்பிரிவின் வாயிலாக முதற்கட்டமாக 108 அரிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டன. இவ்வாண்டு மேலும் 108 அரிய நூல்கள் மறு பதிப்பு செய்து வெளியிடப்படும். (அறிவிப்பு எண்.86)
  31. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த தொன்மையான 84 திருக்கோயில்களுக்கு ரூ.149 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புனரமைக்கப்படும். இதற்கு ரூ.100 கோடி அரசு மானியமாக வழங்கப்படும். (அறிவிப்பு எண்.87 முதல் 131 வரை )
  32. திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலுடன் இணைந்த அம்மணி அம்மாள் மண்டபம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். (அறிவிப்பு எண்.132)
  33. 745 திருக்கோயில்களில் ரூ.331 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். (அறிவிப்பு எண்.134 முதல் 180 வரை)
  34. கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்களில் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மேலும் 100 திருக்கோயில்களுக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். (அறிவிப்பு எண்.181)
  35. நாமக்கல், அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் சார்பாக அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி புதிதாக தொடங்கப்படும். (அறிவிப்பு எண்.182)
  36. கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்களின் நிர்வாகச் செலவினங்களுக்காக வழங்கப்படும் அரசு மானியத் தொகை ரூ.6 கோடியிலிருந்து ரூ.8 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். (அறிவிப்பு எண்.186)
  37. புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாக செலவினத்திற்காக வழங்கப்படும் அரசு மானியத் தொகை ரூ.3 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். (அறிவிப்பு எண்.187)

பக்தி என்பது தனி சொத்து, ஒழுக்கம் என்பது பொது சொத்து,என்றார் பெரியார். ஒன்றே குலம்
ஒருவனே தேவன் என்பது திருமூலர் வழியில் அண்ணா சொன்ன ஆன்மிகம்.

எனக்கு கடவுளை பிடிக்குமா என்பது பிரச்சனையல்ல கடவுளுக்கு பிடிக்கிற மாதிரி நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதே கலைஞர் காட்டிய ஆன்மிக வழி.

கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் வழியில் ஒருபோதும் இந்த அரசு குறுக்கே நிற்காது என்று உறுதி அளித்தவர் முதல்வர்.

ஆன்மிக நால்வரான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போல திராவிட நால்வராக இருக்கும்
பெரியார், அண்ணா, கலைஞர், தளபதியார் வழியில் நடப்பதால் இந்த அரசு இராஜகோபுரமாய் உயர்ந்து நிற்கிறது.

அரசு துறைகளிலேயே அதிகமாக குறி வைக்கப்படுவதும் கவனிக்கப்படுவதுமாக இருப்பது இந்து சமய அறநிலையத்துறை தான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையை கலைப்போம் என்று ஒரு சிலர் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

இது எப்படி இருக்கிறது என்றால் வயலுக்கு வேலி எதற்கு என்று காளை மாடு கவலைப்படுவது
போல் உள்ளது. நீதிக் கட்சி ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஆன்மிகத்தில் சமூக நீதி காக்கும். இந்து சமய அறநிலையத்துறையை எங்கள் முதல்வர் இருக்கும் வரை யாராலும் எப்பொழுதும் எதுவும் செய்து விட முடியாது.

இது பசுக்களை வைத்து பகை வளர்க்கும் அரசல்ல; பசுக்களுக்கு காப்பகங்கள் கட்டி பக்தர்களுக்கு காமதேனுவாக கொடுத்து கொண்டே இருக்கும் அரசு எங்கள் முதல்வர் அரசு. இது இருப்பதை இடித்து விட்டு
வேறொன்றை கட்டுகின்ற அரசல்ல; இடிந்ததை புதுப்பித்து கட்டும் அரசு.

பெரியது எது என்று ஔவையிடம் கேட்டபோது அண்டத்திலே மிகப்பெரியது ஆண்டவன் குடியிருக்கும்
தொண்டர் தம் உள்ளம் என்றார். அந்த கடைக்கோடி பக்தகோடிகளின் உள்ளம் குளிர பலகோடிகளை அள்ளித்தந்து மக்களுக்கு தொண்டாற்றும் அரசு நம் கழக அரசு. காடவர் கோன்
காஞ்சியிலே கட்டிய கோயிலுக்குச் செல்லாமல் மனதிற்குள்ளே கோயில் கட்டிய பூசலார் நாயனாருக்கு
இறைவன் முன்பே காட்சி தந்தார்

அதுபோலவே செல்வந்தர்களின் இல்லங்களைத் தேடி செல்லாமல் சாமானியர்களின் உள்ளங்களை நாடிச் செல்லும் சரித்திர தலைவர் எங்கள் முதல்வர்.

உதயம் என்றாலே விடியல் என்று பொருள். தொட்ட செயலில் எல்லாம் வெற்றிகண்டு பட்டாசு வெடிக்கும்
திராவிட தீபாவளியே. ஒன்றிய பிரதமரை தனி ஒருவராய் சந்தித்து கேலோ இந்தியாவை தமிழ்நாட்டில் நடத்திட கோரியவரே.

ஒடிசாவுடனான புரிந்துணர்வால் அம் மாநிலத் திறனையும், நம் மாநிலத்திற்கு கொண்டு வருபவரே. உரிமைகளை உரிமையோடு கேட்டுப் பெறும் உரிமைப் போராளியே. எப்போதும் சுறுசுறுப்பாக சுற்றி வரும்
திருவல்லிக்கேணி தேனீயே.

“அறிவின் செயல் மகிழ்வோடு இருப்பதல்ல பிறர் வலிகளை நீக்குவது” என்றார் அரிஸ்ட்டாட்டில்
மகிழ்வான வாழ்வு வேண்டி வருகின்ற பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து மனநிறைவு தந்த, மகத்தான முதல்வர் நம் முதல்வர்.

அடுத்தவனை என்ன செய்யலாம் என யோசிக்கும் அரசல்ல இது அடுத்தடுத்து மக்களுக்கு என்ன செய்யலாம் என யோசிக்கும் அரசு” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

2 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi