Sunday, May 12, 2024
Home » 135 உயிர்களை பலி கொண்ட தொங்கு பால விபத்து: கடவுள் செயலா… ? மோசடி செயலா… ? கணக்கு தீர்க்க காத்திருக்கும் குஜராத் தேர்தல் களம்

135 உயிர்களை பலி கொண்ட தொங்கு பால விபத்து: கடவுள் செயலா… ? மோசடி செயலா… ? கணக்கு தீர்க்க காத்திருக்கும் குஜராத் தேர்தல் களம்

by kannappan

கடவுளின் விருப்பத்தால் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான நிகழ்வு நடந்துவிட்டது. குஜராத் மோர்பி பால விபத்தில் கைதான ஓரேவா நிறுவனத்தின் மேலாளர் தீபக் பரேக் வழக்கு விசாரணையின் போது நீதிபதி முன்பு தெரிவித்த அலட்சிய பதில் இது. தென்கொரியாவில் ஹாலோவீன் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 153 பேர் பலியானதை டிவியில் பார்த்து அனைவரும் ச்சச்சோ என்று சொல்லிக்கொண்டு இருந்த நேரம் அது. வடமாநிலங்களில் சாத் பூஜை களைகட்டியிருந்த காலம். விடுமுறை என்பதால் 150 ஆண்டு பழமையான குஜராத் மாநிலத்தின் மோர்பி தொங்கு கேபிள் பாலத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பமாக திரண்டு இருந்தார்கள். கண் இமைக்கும் நேரத்தில் பாலத்தின் கேபிள் அறுந்து மச்சு நதியில் அத்தனை பேரும் விழுந்தனர். மரண ஓலம் விண்ணை எட்டியது. 135 பேர் பலியாகி விட்டனர். பெரும்பாலானோர் சிறுவர், சிறுமியர், பெண்கள் மற்றும் இளைஞர்கள். 5 நாட்கள் கடந்தும் இன்றும் மீட்பு பணி நடக்கிறது. உலக தலைவர்கள் அனைவரும் அதிர்ச்சி செய்தி வெளியிட்ட இந்த கோரத்திற்கு தான் ‘கடவுள் விருப்பம்’ என்று சொல்லி தப்பிக்க நினைத்திருக்கிறார் அந்த தொங்குபாலத்தை சீரமைக்கும் பணியை செய்த ஓரேவா நிறுவனத்தின் மேலாளர்.மோர்பி நகரில் பிரபலம் இந்த தொங்குபாலம். மச்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்டது. 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் மகாபிரபுஜி மற்றும் சமகந்தா மாவட்டங்களை இணைக்கும் வகையில் இந்த பாலத்தை அப்போதைய உள்ளூர் அரசர் பாஜி தாகூர் கட்டினார். 1880ல் கட்டி முடிக்கப்பட்டது. அந்த சமயம் ஒரே நேரத்தில் 15 பேர் பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டது. அதன்பின் காலத்திற்கு ஏற்றார்போல் பாலம் கேபிள் கொண்டு மாற்றி அமைக்கப்பட்டது. அஜந்தா கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் ஓரேவா என்ற நிறுவனம் இதை சீரமைக்கும் பணியை எடுத்துக்கொண்டது. அதோடு அடுத்த 15 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பணியும் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. 8 மாதங்களில்  சீரமைப்பு பணிக்கு டெண்டர் விடப்பட்டு குஜராத் புத்தாண்டை முன்னிட்டு கடந்த மாதம் 26ம் தேதிதான் திறக்கப்பட்டது. அப்போது பேசிய ஓரேவா நிறுவன நிர்வாக இயக்குனர் ‘இனிமேல் எந்தவித பயமும் இல்லாமல் இந்த பாலத்தில் பயணம் செய்யலாம். அடுத்த 10 ஆண்டுகள் வரை எந்தவித பெரிய பராமரிப்பு பணிகளும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை’ என்று பெருமைப்பட்டு கொண்டார். ஆனால் 30ம் தேதி கேபிள் அறுந்து 10 விநாடிகளில் பாலம் சரிந்து விட்டது.எல்லாமே மோசடி, பாலத்தின் சீரமைப்புக்கு ஏற்ப புதிய கேபிள் போடவில்லை. இன்னும் ஏராளமான குற்றச்சாட்டுகள். பயன் என்ன? 135 பேர் பலியாகி விட்டார்களே?. ஓரேவா நிறுவனத்தின் உரிமையாளர் மீது கூட இன்று வரை வழக்கு போடவில்லை. அதிர்ந்து போய் இருக்கிறார்கள் மக்கள். இது தேர்தல் காலம். ஆம்ஆத்மி எகிற வைத்த தேர்தல் ஜூரம் அங்கு அதிகம். தணிக்க வாரம் 3 நாள் அங்கு சென்று வந்தார் பிரதமர் மோடி. ஒருவாரம் தொடர்ந்து முகாமிட்டு பல கட்ட ஆலோசனைகளை வழங்கினார் அமித்ஷா. தொடர்ந்து 24 ஆண்டுகள் ஆட்சி கட்டிலில் இருக்கும் அதிருப்தியை சமாளித்து எப்படியாவது வென்று விடலாம் என்ற கனவில் இருந்த பா.ஜவுக்கு மோர்பி பாலம் விபத்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதை ஆம்ஆத்மி அரசியல் செய்யும் வேகம் பா.ஜவுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்து விட்டது. மோர்பி பாலம் இடிந்து விழுந்தது விபத்தல்ல. பா.ஜ ஊழல் ஆட்சியால் நடந்த படுகொலை என்று காட்டமாக விமர்சித்தார் ஆம்ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி துணைமுதல்வருமான சிசோடியா. முதல்வர் கெஜ்ரிவால் இன்னும் ஒருபடி மேலே சென்று,’ இத்தனை பேர் இறந்தபிறகும் இன்னும் முதல்வர் பதவியில் நீடிக்க பூபேந்தர் படேலுக்கு வெட்கமாக இல்லை’ என்று கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்  சிங்,’கடந்த 2016 ஆம் வருடம் கொல்கத்தாவில் சாலை மேம்பாலம் இடிந்து  விழுந்து பல பேர் உயிரிழந்ததற்கு மேற்குவங்க மம்தா பானர்ஜி அரசு பற்றி  பிரதமர் மோடி குறை கூறியுள்ளார். ஆனால் தற்போது மோர்பி பால விபத்து கடவுளின் செயலா அல்லது மோசடி செயலா? என பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றார். இக்கேள்வி அலைகள் குஜராத் முழுவதும் பா.ஜவுக்கு சறுக்கலை ஏற்படுத்தியது. உடனே தேர்தல் தேதியை அறிவித்து நடத்தை விதிமுறைகளை அறிவித்து விட்டார்கள். மோர்பி பாலம் இன்னும் ஒரு மாதத்தில் பதில் சொல்ல காத்திருக்கிறது.ஏன் சரிந்தது தொங்கு பாலம்?மோர்பி பாலம் ஏன் சரிந்தது என்பது பற்றி தடய அறிவியல் ஆய்வகத்தின் அறிக்கை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்: * மோர்பி தொங்கு பாலத்தில் மராமத்து பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் அதைச் செய்யத் தகுதியற்றவர்கள்.* வரலாற்றுச் சிறப்புமிக்க தொங்கு பாலத்தின் பழுது மற்றும் பராமரிப்பு பணி மோர்பியின் தொழில்துறை நிறுவனமான ஓரேவா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் குழு அஜந்தா பிராண்ட் கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்கிறது. இது  தவிர, பல்புகள், விளக்குகள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்களையும் தயாரிக்கிறது.* தொங்கு பாலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தளத்தின் எடையைத் தாங்க முடியாமல் அதன் கேபிள்கள் உடைந்துள்ளன. காரணம் பாலத்தின் கேபிள்கள் மாற்றப்படவில்லை. தரைத்தளம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.* தளம் நான்கு அடுக்கு அலுமினியத் தகடுகளால் ஆனது. அதன் எடை மிகவும் அதிகரித்து விட்டதால் பாலத்தை தாங்கியிருந்த கேபிள் அதன் எடையைத் தாங்க முடியாமல் பாலம் இடிந்து விழுந்தது.* மச்சு ஆற்றில் உள்ள தர்பார்கர் அரண்மனை மற்றும் லக்திர்ஜி பொறியியல் கல்லூரியை இணைக்கிறது மோர்பி பாலம்.* 1.25 மீட்டர் அகலம், 233 மீட்டர் நீளம் கொண்டது.* 150 ஆண்டுகளுக்கு முன்னர் மோர்பி மன்னர் பாஜி தாகூர் என்பவர் ஐரோப்பிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த பாலத்தை கட்டினார்.* 1879 பிப்ரவரி 20ல் மும்பை கவர்னராக இருந்த ரிச்சர்ட் டெம்பிள் இதை திறந்து வைத்தார்.மோர்பி தொங்கு பால விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிடும் போது அதை சீரமைத்த ஓரேவா நிறுவன பெயர் துணியை கட்டி மறைக்கப்பட்டு இருந்தது.* ஒரு வேலை கூட நடக்கல…மோர்பி பாலத்தில் பராமரிப்பு பணிகளில் ஒரு பகுதியாக தளம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. பாலம் இருந்த கேபிள் மாற்றப்படவில்லை. ஏன் கிரீஸ் கூட தடவவில்லை. அறுந்த இடத்தில் கேபிள் கூட துருபிடித்த நிலையில் இருந்திருக்கிறது. தேர்தலுக்காக உரிய நேரத்திற்கு முன்னதாக பணிகள் முடிக்கப்பட்டு அவசர அவசரமாக திறந்து வைத்து இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் மோர்பி துணைக்காவல் கண்காணிப்பாளர் பி.ஏ சாலா.* மோர்பியும், மோடியும்பிரதமர் மோடியின் அரசியல் வாழ்வு தொடங்கிய இடம் மோர்பி. ஆர்எஸ்எஸ் சேவகராக இருந்த அவர் பொது வாழ்வில் களமிறக்கப்பட்ட இடம் தான் மோர்பி. 1979ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மோர்பி அருகே உள்ள மச்சு ஆற்றின் அணை உடைந்து வெள்ளம் மோர்பியை மூழ்கடித்தது. அதிகாரப்பூர்வ பலி எண்ணிக்கை 1000. ஆனால் 25 ஆயிரம் வரை இருக்கக்கூடும் என்கிறார்கள். அணை உடைந்து 15 மணி நேரம் கடந்தும் யாருக்கும் தகவல் தெரியவில்லை. 48 மணி நேரத்திற்கு பின்னர் தான் நிவாரணப்பணிகள் தொடங்கப்பட்டன. 8 நாட்கள் கடந்தும் மோர்பி நகரில் சடலங்கள் மீட்கப்படவில்லை. மோர்பி பாதிக்கப்பட்ட போது சென்னையில் இருந்தார் மோடி. தகவல் கிடைத்ததும் உடனே அங்கு சென்றார். ஆர்எஸ்எஸ் களத்தில் குதித்தது. அன்று முதல் இன்று வரை ஆர்எஸ்எஸ் மற்றும் பா.ஜ மீதான அபிமானத்தை மாற்ற காங்கிரசால் இன்றும் முடியவில்லை. முதன்முறையாக மோர்பி மக்களுக்கான மீட்பு பணியில் மோடி களமிறக்கப்பட்டார். இன்று அவர் பிரதமர். மோடிக்கு மோர்பி இப்போதும் ஆதரவாக இருக்குமா என்பது டிசம்பர் 8ம் தேதி தெரியும்.* அன்றும்… இன்றும்…கொல்கத்தாவில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி விவேகானந்தா சாலை மேம்பாலம் இடிந்து 27 பேர் பலியானார்கள். இதுபற்றி பிரதமர் மோடி அப்போது விமர்சனம் செய்தார். அவர் கூறுகையில்,’ கொல்கத்தா மேம்பாலம் சோகம், திரிணாமுல் காங்கிரஸிடமிருந்து வங்காளத்தை காப்பாற்ற மக்களுக்கு அனுப்பப்பட்ட ‘‘கடவுளின் செய்தி”. ‘‘இது கடவுளின் செயல் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் இது ஒரு மோசடி செயல்’ என்று அவர் கூறினார்.இப்போது மோர்பி விபத்து பற்றி மேற்கு வங்க முதல்வர் மம்தாவிடம் கேட்ட போது,’ மோர்பி விபத்து நடந்த மாநிலம் குஜராத் என்பதால் பிரதமரைப் பற்றி நான் எதுவும் கூறமாட்டேன். உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மக்கள் உயிர் முக்கியம்.பலியான மக்களுக்கு என் இரங்கல்கள். எத்தனை இறந்த உடல்கள் மீட்கப்பட்டன என்று எனக்குத் தெரியவில்லை. இதை மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும். ஆனால் இதுபோன்ற பணிகளை யார் செய்தாலும் அது குற்றம் தான். நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். நான் மோர்பிக்கு செல்ல விரும்புகிறேன், ஆனால் நான் சென்றால்  நான் அரசியல் செய்கிறேன் என்று அவர்கள் கூறுவார்கள். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது நான் அங்கு செல்வேன்’ என்று அவர்  கூறினார்….

You may also like

Leave a Comment

sixteen + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi