Tuesday, April 30, 2024
Home » பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி: வழக்கம்போல மாணவிகள் முதலிடம்; பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி: வழக்கம்போல மாணவிகள் முதலிடம்; பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

by Karthik Yash

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டம் 97.67% பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியரே 6.50% கூடுலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மொத்த தேர்ச்சி வீதம் 91.39% மாக உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் இயங்கும் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்த மாணவ-மாணவியருக்கான தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுத்துறை நேற்று காலையில் வெளியிட்டது. சென்னை கல்லூரி சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்தில் தேர்வு முடிவுகளை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 பேர் பங்கேற்றனர். அவர்களில் 4 லட்சத்து 55 ஆயிரத்து 17 பேர் மாணவியர், 4 லட்சத்து 59 ஆயிரத்து 303 பேர் மாணவர்கள். தேர்வு எழுதியோரில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் ஒட்டுமொத்த தேர்ச்சி வீதம் 91.39%. இவர்களில் 4 லட்சத்து 30 ஆயிரத்து 710 பேர் மாணவியர் (94.66%). 4 லட்சத்து 4 ஆயிரத்து 904 பேர் மாணவர்கள் (88.16%). இந்த ஆண்டும் வழக்கம் ேபால மாணவர்களை விட மாணவியர் கூடுதலாக 6.50% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2022ம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 90.07%. இந்த ஆண்டின் தேர்ச்சி வீதம் 91.39%. என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட பத்தாம் வகுப்பு தேர்வில் 12 ஆயிரத்து 638 பள்ளிகள் பங்கேற்றன. இவற்றில் 7,502 பள்ளிகள் மேனிலைப் பள்ளிகள், 5,136 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள். இந்நிலையில், 3,718 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. 1,026 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மொத்த தேர்ச்சியை பொறுத்தவரையில் அரசுப் பள்ளிகள் 87.45%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24%, தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.38%, இருபாலர் பள்ளிகளில் படித்தோர் 91.58%, பெண்கள் பள்ளிகள் 94.38%, ஆண்கள் பள்ளிகள் 82.25% தேர்ச்சி பெற்றுள்ளன. பாடவாரியாக பார்த்தால் மொழிப்பாடத்தில் 95.55%, ஆங்கிலம் 98.93%, கணக்கு 95.54%, அறிவியல் 95.75%, சமூக அறிவியல் 95.83% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆங்கில பாடத்தில் 89 பேர் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். கணக்கு பாடத்தில் ,3649, அறிவியல் பாடத்தில் 3,584 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 320 பேர் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளி மாணவர்கள் இந்த தேர்வில் 10,808 பேர் பங்கேற்றனர். அவர்களில் 9,703 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 89.77%. சிறைவாசிகள் 264 பேர் தேர்வு எழுதியதில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்(42.42%). இந்நிலையில் மாவட்ட வாரியாக மாணவ மாணவியரின் தேர்ச்சி வீதத்தை பொறுத்தவரையில் பெரம்பலூர் மாவட்டம் 97.67% தேர்ச்சியை பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி வீதத்தை பொறுத்தவரையில் சிவகங்கை மாவட்ட அரசுப் பள்ளிகள் 96.38 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

* அரசுப்பள்ளியில் சிவகங்கை முதலிடம்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் அரசுப்பள்ளிகளை பொறுத்தவரை சிவகங்கை மாவட்டம் 96.38 சதவீதம் பெற்று முதலிடம் வகிக்கிறது. இதனையடுத்து இரண்டாவது இடத்தில் பெரம்பலூர் மாவட்டம் 96.31 சதவீதம் பெற்றுள்ளது. அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம் 93.81 சதவீதம் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

* 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம்
பள்ளி நிர்வாகம் தேர்வு எழுதியோர் தேர்ச்சி பெற்றோர் தேர்ச்சி சதவீதம்
ஆதிதிராவிடர்
நலத்துறைபள்ளிகள் 6254 5253 83.99%
மாநகராட்சி 12064 9967 82.62%
வனத்துறை பள்ளிகள் 171 156 91.23%
கள்ளர் நலத்துறை பள்ளி 2027 1876 92.55%
நகராட்சிப் பள்ளிகள் 8056 7063 87.67%
சமூகநலப் பள்ளிகள் 307 281 91.53%
மலைவாழ் பள்ளிகள் 2046 1762 86.12%

* 10ம் வகுப்பு தேர்வில் தனியார் பள்ளிகள் முதலிடம்
10ம் வகுப்பு தேர்வில் அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மூலம் படித்த மாணவ மாணவியரில் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர் 97.38 சதவீதம் பெற்று பள்ளிகள் அளவில் முதலிடத்தில் உள்ளனர். அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ மாணவியர் 92.24 சதவீதம் தேர்ச்சி பெற்று 2ம் இடத்தில் உள்ளனர். அரசுப் பள்ளி மாணவ மாணவியர் 87.45 சதவீத தேர்ச்சி பெற்று 3ம் இடத்தில் உள்ளனர்.

பள்ளி நிர்வாகம் தேர்வு எழுதியோர் தேர்ச்சி பெற்றோர் சதவீதம்
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 216065 199288 92.24%
அரசுப் பள்ளிகள் 439475 384325 87.45%
தனியார் பள்ளிகள் 258780 252001 97.38%

* 10ம் வகுப்பு தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
பெரம்பலூர் 97.67%
சிவகங்கை 97.53%
விருதுநகர் 96.22%
கன்னியாகுமரி 95.99%
தூத்துக்குடி 95.58%
அரியலூர் 95.40%
ஈரோடு 94.53%
திருச்சி 94.28%
திருநெல்வேலி 94.19%
தென்காசி 94.12%
திருப்பூர் 93.33%
ராமநாதபுரம் 93.86%
கோவை 93.49%
திருப்பத்தூர் 93.27%
நாமக்கல் 92.98%
புதுக்கோட்டை 92.31%
தஞ்சாவூர் 92.16%
மதுரை 91.79%
திண்டுக்கல் 91.77%
கரூர் 91.49%
வேலூர் 91.34
சேலம் 91.13%
பாண்டிசேரி 91.05%
திருவாரூர் 90.79%
விழுப்புரம் 90.57%
காஞ்சிபுரம் 90.28%
தேனி 90.26%
தருமபுரி 89.46%
கள்ளக்குறிச்சி 89.34%
சென்னை 89.14%
திருவண்ணாமலை 88.95%
ஊட்டி 88.82%
திருவள்ளூர் 88.80%
கடலூர் 88.49%
செங்கல்பட்டு 88.27%
மயிலாடுதுறை 86.31%
கிருஷ்ணகிரி 85.36%
நாகப்பட்டினம் 84.41%
ராணிப்பேட்டை 83.54%
காரைக்கால் 79.43%

You may also like

Leave a Comment

10 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi