சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 15ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இதன் காரணமாக இன்று முதல் வரும் 15ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.