Monday, June 3, 2024
Home » மேக்கப்-நெயில் பாலிஷ்

மேக்கப்-நெயில் பாலிஷ்

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழி ஜீன்ஸ் தெரியா குக் கிராமத்திலும் கூட பெண்கள் வண்ணமயமாக நெயில் பாலிஷ் பயன்படுத்தும் அளவிற்கு நம் காஸ்மெட்டிக் பெட்டிகளில் நெயில் பாலிஷ் தவிர்க்க முடியாத ஒன்று. சரி நாம் இப்போது பயன்படுத்தும் நெயில் பாலிஷ்களும், அதன் முறையும் சரிதானா? அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கலர்ஃபுல்லாக பேச ஆரம்பித்தார் பிரபல ஸ்பா உரிமையாளர் வீணா குமரவேல்.‘‘ஒவ்வொரு பெண்ணுடைய விரல்களையும் அழகாக எடுத்துக்காட்டுவது நகங்கள். மேலும் ஒருவரின் உடல் ஆரோக்கியத்தையும் சுட்டிக்காட்டுவதும் நகங்கள் தான். அழகு மற்றும் ஆரோக்கியம் இரண்டிற்குமே பக்கபலமாக இருக்கும் நகத்தினை நாம் மிகவும் கவனமாக  பாதுகாத்துக் கொள்வது அவசியம். எப்போதும் நகத்தை முதல்ல சுத்தம் செய்த பிறகு தான் நெயில்பாலிஷ் போட வேண்டும். சிலர் முகத்திற்கு க்ரீம் மற்றும் தலையில் எண்ணை எல்லாம் பூசிவிட்டு கைகள் மற்றும் நகத்தினை சுத்தம் செய்யாமல் அப்படியே பாலிஷ் போட்டுக் கொள்வார்கள். நகத்தில் கொஞ்சம் எண்ணைத் தன்மையோ, பிசுபிசுப்போ அல்லது ஷைனிங் இருந்தாலும் கூட நாம் போட்ட நெயில் பாலிஷ் இரண்டே நாட்களில் உரிய ஆரம்பித்துவிடும். எண்ணை தன்மை அல்லது பிசுபிசுப்பு தன்மை விரல் நகங்களில் இருந்தால். அதனை Nail Buffer பயன்படுத்தி முதலில் நீக்க வேண்டும். நெயில் பஃபர் என்பது உங்கள் நகத்தின் மேல் இருக்கும் எண்ணை பிசுபிசுப்பினை நீக்க உதவும். இதன் மூலம் நகங்கள் பளபளப்பாகும். நெயில்பாலிஷ் போட்டாலும் எளிதில் உரிந்து வராமல் இருக்கும். நகத்தினை பஃபர் செய்த பிறகு நெயில்பாலிஷ் கோட்டிங் போட வேண்டும். அது நன்கு காய்ந்த பிறகு நாம் விரும்பிய நிற நெயில்பாலிஷினை போடலாம். இதனை இரண்டு அல்லது மூன்று முறை போடவேண்டும். கடைசியாக நெயில்பாலிஷ் காய்ந்த பிறகு நெயில்பாலிஷ் கோட்டிங் கொண்டு மீண்டும் போட வேண்டும். இப்படித்தான் முறையாக நெயில் பாலிஷ் போட வேண்டும். ஆனால் வீட்ல அதெல்லாம் செய்யறது ரொம்ப கஷ்டம். முடிஞ்சவரைக்கும் டபுள் கோட் கொடுக்கலாம்.எந்த சருமத்திற்கு என்ன நிறம் செட்டாகும் சரும நிறத்திற்கு ஏற்ப நெயில்பாலிஷ் நிறங்களை தேர்வு செய்வது அவசியம். காரணம் ஒருவர் நம்மிடம் பேசும் போது முதலில் நம்முடைய கண்களைப் பார்த்து பேசுவார்கள். சிலர் கைகளைப் பார்த்து பேசுவார்கள். அதனால் விரல் நகங்களை அழகாக எடுத்துக் காட்டும் நெயில்பாலிஷை நம்முடைய சருமத்திற்கு ஏற்ப தேர்வு செய்து அணியவேண்டும். கருமை நிறமுடைய சருமம் கொண்டவர்கள் லைட் நிறங்களை தேர்வு செய்யலாம். குறிப்பாக டஸ்கி சரும நிறம் கொண்டவர்களுக்கு லைட் கலர் நெயில்பாலிஷ் பார்க்க அழகாக இருக்கும். மேலும் அடர்ந்த நிறங்களை விட லைட் நிறங்களில் ரசாயனமும் குறைவு. அடர்த்தியான நிறங்கள் நம்முடைய சருமத்தை மேலும் கருப்பாக எடுத்துக் காட்டும். நகங்களை மாதம் ஒரு முறை பெடிக்யூர் அல்லது மெனிக்யூர் செய்து பாதுகாத்துக் கொள்வது அவசியம். அவ்வாறு செய்ய முடியாத பட்சத்தில் நக இடுக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் நக அடிப்பாகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டும். நம்ம நகத்தின் இயல்பு மற்றும் வடிவத்தைப் பொருத்து அழகாக கத்தரித்துக் கொள்ளவேண்டும். அதேப்போல் சிலர் இடது கையில் மட்டும் பாலிஷ் போட்டுக்கிட்டு வலது கைல போட்டுக்க மாட்டாங்க. குறைந்தபட்சம் பெரிய நிகழ்ச்சிகளுக்கு போகும் போதாவது ரெண்டு விரல்களில் போட்டுக் கொண்டால் பார்க்க அழகாக   இருக்கும். நெயில்பாலிஷை எப்போதும் அதன் ரிமூவர் கொண்டு நீக்க வேண்டும். அதில் அசிட்டோன் அளவு குறைவாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்’’ என்றார் வீணா. நெயில் பாலிஷில் உள்ள சில ஆபத்துகளையும் பாதுகாப்பு முறைகளையும் அடுக்கினார் காஸ்மெட்டாலஜிஸ்ட் மற்றும் அரோமா தெரபிஸ்ட் கீதா அஷோக். ‘‘பொதுவாகவே பெண்கள் வீட்டில் இருக்கும் போது ரசாயனம் சார்ந்த வேலைகள் செய்வது வழக்கம். அதாவது பாத்திரம் கழுவுவது, துணிகளை துவைப்பது போன்ற வேலைகளில் பயன்படுத்தப்படும் சொப்புகளில் ரசாயனங்கள் கலந்திருக்கும். அந்த நேரத்தில் அதில் உள்ள ரசாயனங்கள் விரல் நகங்களில் உள்ள நகக் கண் அதாவது க்யூட்டிக்கல் வழியாக உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. கால்கள் சொல்லவே வேண்டாம். நடக்கும் போது நகக்கண்கள் தூசிகளால் பாதிப்பு ஏற்படும். நகக் கண்கள் இந்த பிரச்னையால் பாதிக்காமல் இருக்க நெயில் பாலிஷ் உதவும். சிலருக்கு சரியான வடிவங்கள்ல நகங்கள் இருக்காது, அதுக்கும் ஒரே வழி பாலிஷ்தான். நெயில் பாலிஷ்களில் ஃபார்மல் டிஹைட் (Formal Dehyde), தாலுயீன்(Toluene), டைபியூட்டைல் தாலேட்(DBP) என மொத்தம் மூணு மூலக்கூறுகள் இருக்கு. என்னதான் காசு அதிகம் போட்டு பிராண்ட் வாங்கினாலும் இந்த மூணு மூலக்கூறு எல்லா நெயில் பாலிஷ்கள்லயும் இருக்கும். பிராண்டட் போகும் போது இதனுடைய அளவுகள் வேணும்னா வேறுபடும். ‘ஃபார்மல் டிஹைட்’க்கு இன்னொரு பெயர் கார்சினோஜென்னு சொல்வோம். நெயில் பாலிஷ் போட்ட உடனே உலர்ந்து போவதற்கு இந்த மூலக்கூறுதான் பயன்படுகிறது. அமெரிக்க கலிபோர்னியா சான்ஃபோர்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் குழு நெயில் பாலிஷ் விஷத்தன்மைக் கொண்டது என்றும், நடைமுறை வாழ்க்கைக்கே ஆபத்தானது என்ற நிரூபிச்சிருக்காங்க. நெயில் பாலிஷ் வாசனை நம் உடலில் உள்ள மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பினை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் கேன்சர் வரை கூட பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர். போதைப்பொருட்கள் பயன்படுத்தினால் வரும் மறதி, குமட்டல், தலைவலி, தசைவலி, கைநடுக்கம், கருப்பை பிரச்னைகள் இப்படி நிறைய பிரச்னைகள் இதனால் ஏற்படலாம். பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், மூச்சுப் பிரச்னைகள், சரும பிரச்னைகள் உள்ளவர்கள் நெயில் பாலிஷ் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நெயில் பாலிஷ் ரிமூவரில் இருக்கும் அசிட்டோன் மற்றும் குளோரோபார்ம் நுரையீரல் பிரச்னைகளை ஏற்படுத்தும். ரொம்ப அடர்த்தியான நிறங்களை தவிர்த்துட்டு வெளிர் நிற நிறங்களை பயன்படுத்தலாம். பாலிஷ் போட்டுக்கொண்டு சாப்பிடுவது, நகம் கடிப்பதை தவிர்க்க வேண்டும். தினம் ஒரு நெயில்பாலிஷ் போடும் பழக்கம் உள்ளவர்கள் அசிட்டோன் கொண்டு சுத்தம் செய்வார்கள். அதை தவிர்க்க வேண்டும். நல்ல பிராண்ட் அல்லது ஆர்கானிக் வகை நெயில்பாலிஷ்களை கூட பரிசீலிக்கலாமே தவிர தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. அதேப்போல் அதிக பளபளப்பு குறைவான, நல்ல பிராண்ட் நெயில்பாலிஷ்களை தேர்வு செய்வது நல்லது. குழந்தைகளுக்கான பேபி நெயில் பாலிஷ்கள் கூட மார்க்கெட்டில் இருக்கின்றன. அவர்களுக்கு அதனை பயன்படுத்தலாம்.  ஆரோக்கியமான நகங்களுக்குசிலருக்கு நகம் பலவீனம் காரணமாக தண்ணீரில் சில நிமிடங்கள் வேலை செய்தால் கூட உடைந்து போகும். அவர்கள் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் எப்சம் உப்பு கலந்து கால் மற்றும் கை விரல்களை சிறிது நேரம் வைக்கலாம். அதனை தொடர்ந்து செய்து வந்தால் நகம் வலிமையடையும். ஆரோக்கியமான நகங்களுக்கு  கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடலாம். இயற்கையான மருதாணி அதிகம் பயன்படுத்தலாம். தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

You may also like

Leave a Comment

nineteen + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi