Monday, May 20, 2024
Home » பெண்ணே வா! உன்னை வலுவாக்கிக்கொள்!

பெண்ணே வா! உன்னை வலுவாக்கிக்கொள்!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழி 75 வருடங்களை முடித்திருக்கிறது இந்தியா பெற்ற சுதந்திரம்.. சும்மா வரவில்லை இந்த சுதந்திரம்.. ரத்தம் சிந்தி, உயிர்களை கொடுத்து, சொத்துக்களை, உறவுகளை, உரிமைகளை இழந்து, கோடான கோடி இந்தியத் தியாகிகளின் தியாகத் தீரச் செயலால் கிடைத்த சுதந்திரம் இது. நாடு விடுதலை அடைந்து விட்டது. இதோ பவள விழாவையும் கொண்டாடி விட்டது. ஆனால் நாம் பெற வேண்டிய சுதந்திரம் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை என்பதைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்!எத்தனையோ விஷயங்களில் நாம் சுதந்திரம் பெறாமல் அடிமையாகத்தான் இருக்கிறோம்.. அதில் பெண்களுக்கான சுதந்திரம் மட்டும் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. எத்தனை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் பெண்களின்  சாதனை ஒரு பக்கம் இருந்தாலும், மறு பக்கம் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மலையென குவிந்து கிடக்கிறது. பெண்கள் தன்னை தானே காத்துக்கொள்வதற்கு, அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. பெண்களுக்கான உரிமைகள் என்ன? எப்படிப் பெற வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஊட்டி வருகிறார் லில்லி மார்கெட். யார் இந்த லில்லி மார்கெட்?‘‘எனக்கு சொந்த ஊர் திருச்சி. என் குடும்பத்திலேயே கல்லூரிக்கு சென்ற முதல் பெண் நான் தான். கல்லூரியில் படிக்கும் காலத்தில் தான் சமூக சேவை பற்றி தெரிந்து கொண்டேன். அதன் பிறகு எனக்கும் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. என்னுடைய கல்லூரியில் மனம் மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவி செய்து வந்தார்கள். அது குறித்து தெரிந்த பிறகு நானும் சமூக சேவையில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. கல்லூரி படிப்பு முடிந்த கையோடு எனக்கு திருமணமானது. சென்னையில் செட்டிலானேன். படிப்பு முடிஞ்சதும், ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தேன். பணி மற்றும் குடும்பத்திற்கு நேரம் செலவு செய்தது போக கிடைக்கும் நேரத்தில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பிச்சேன்.என்னதான் படிச்சிருந்தாலும், நிறைய பெண்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அவர்கள் வழி தடுமாறி சென்று விடுகின்றனர். அவர்களுக்கு என்ன செய்யலாம்ன்னு யோசித்தேன். பெண்களுக்கு தேவையான விழிப்புணர்வை பள்ளிகள், கல்லூரிகள் சென்று எடுத்துரைத்தேன். தொண்டு நிறுவனங்களிலும் வேலைப் பார்க்க ஆரம்பித்தேன். அதன் மூலம் பெண்கள் சந்திக்கும் பிரச்னை மற்றும் அதை எவ்வாறு போக்கலாம் என்பது குறித்து  எனக்கு ெதரிய வந்தது. ‘‘Bloom Trust ” என்ற தொண்டு நிறுவனத்தை  நிறுவினேன். இதன் மூலம் பெண்களுக்கு  தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன்’’ என்றவர் பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். பள்ளி, கல்லூரி மாணவிகள், கல்வியறிவு இல்லாத பெண்கள், விதவைகள், சிறு வயதிலே திருமணம் செய்து கொண்ட பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களுக்காகவும் என்னுடைய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு கை தொழில் கற்றுக் கொடுத்து வேலை வாய்ப்புகளையும் அமைத்து தருகிறேன். என்னுடைய இந்த அனுபவ பயணத்தில் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட பெண்களை சந்தித்து இருக்கேன். ஒவ்வொருவரிடம் பேசும் போதும், எனக்கு சொல்லித்தர யாரும் கிடையாது. யாராவது சொல்லி கொடுத்து இருந்தால் எனது வாழ்க்கையில் முன்னேறி இருப்பேன் என்று தான் அவர்கள் கவலைப்படுகிறார்கள். இதனைத் தொடர்ந்து, வாரத்தில் இரு முறை பள்ளிகளுக்கு சென்று அவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பை நடத்தி வருகிறோம். இப்படி கல்வியோடு, விளையாட்டு, கைத் தொழில் என பல விதமான பயிற்சிகளை கொடுத்து வருகிறோம். மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் வருடத்தில் ஒரு முறை அனைத்து மாணவிகளுக்கும் போட்டி வைத்து பரிசளித்தும் வருகிறோம்’’ என்கிறார் லில்லி.  ஒவ்வொரு பெண்ணையும் தன்னைப் போல் விழிப்புணர்வு மிக்கவராக மாற்றும் பெரும் பணியில் ஈடுபட்டுள்ளார் லில்லி. உண்மையில் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் லில்லி இருக்கிறார். அதை பல பெண்கள் உணர்ந்தது கிடையாது. குடும்பத்திற்காக, குழந்தைக்காக, கணவருக்காக ஓடும் பெண்கள் தனக்காக ஓடி பார்த்திருக்க முடியாது. அங்குதான் பெண்கள் வீழ்ந்து கிடக்கிறார்கள். தனக்காக முதலில் ஒரு பெண் ஓட வேண்டும். தன்னை வலுவாக்கிக் கொள்ள வேண்டும். பெண் வலுவானவளாக இருந்தால்தான் அவளால் ஆலமரம் போல மற்றவர்களுக்கு நிழல் தர முடியும். பெண்களுக்கு இப்படிப்பட்ட விழிப்புணர்வையும், ஆதரவையும், ஆலோசனைகளையும் தரும் லில்லி மார்கெட் உண்மையில் பாராட்டுக்குரியவர்.தொகுப்பு: ஆனந்தி ஜெயராமன்படங்கள்: ஜி.சிவக்குமார்

You may also like

Leave a Comment

one × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi