பரமக்குடி, ஏப்.10: பரமக்குடியில் அதிமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவத்தை மாவட்ட செயலாளர் முனியசாமி வழங்கினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் 1.97 லட்சம் பேர் உள்ளனர். மேலும் 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கும் நிகழ்ச்சி பரமக்குடியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். மாநில மகளிர் இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் சதன் பிரபாகர், முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றியம், நகரம், பேரூர் செயலாளர்களிடம் புதிய உறுப்பினர் சேர்க்கைகான படிவம் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 ஒன்றியம், ஏழு பேரூராட்சி, நான்கு நகராட்சிகள் உள்ளன.
தற்போது மாவட்டத்தில் ஒரு லட்சத்து 97 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் 50,000 உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் முனியசாமி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் நயினார்கோவில் குப்புசாமி, பரமக்குடி ஒன்றிய செயலாளர் முத்தையா, போகலூர் லோகிதாசன்,ராமநாதபுரம் மருதுபாண்டி, மாவட்ட மாணவரணி செந்தில்குமார் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக, நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.