Saturday, June 1, 2024
Home » டெல்லியில் கவர்னருக்கு முழு அதிகாரம் மக்களவையில் மசோதா நிறைவேற்றம்: ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு: மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற கோரிக்கை

டெல்லியில் கவர்னருக்கு முழு அதிகாரம் மக்களவையில் மசோதா நிறைவேற்றம்: ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு: மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற கோரிக்கை

by kannappan

புதுடெல்லி: டெல்லி ”அரசாங்கம்” என்பது ”துணை நிலை ஆளுநர்” தான் என்று தெளிவுபடுத்தும் மசோதா நேற்று மக்களவையால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்த சட்டம்”அரசியலமைப்பிற்கு விரோதமானது” என கூறினர். டெல்லியில் முக்கிய விவகாரங்களில் முடிவெடுப்பதில் முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் ஆளுநர் இடையே கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்த மோதல் போக்கு நீடித்து வருகிறது. உயரதிகளை முக்கிய பொறுப்புகளுக்கு நியமனம் செய்வதில் அப்போதைய ஆளுநர் நஜீப் ஜங் மற்றும் கெஜ்ரிவால் இடையே மோதல் உருவாகி அந்த மோதல் இப்போதைய கவர்னர் அனில் பைஜால் வரை தொடர்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அதிகாரம் என கூறிவரும் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதிதான் என்றும் வாதிட்டு வருகிறார். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது. அதன்பேரில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியது. அதனிப்படையில் டெல்லி சட்டத்திருத்த மசோதா 2021 மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண்ரெட்டியால் நேற்று மக்களவை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மசோதாதை தாக்கல் செய்து விவாதத்திற்கு பின்னர் கிஷண்ரெட்டி பதிலளித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: டெல்லி அரசாங்கத்தின் செயல்பாடு தொடர்பானவற்றில் சில தெளிவற்ற தன்மை இருப்பதால், டெல்லி தேசிய தலைநகர் மண்டல(திருத்த) மசோதா, 2021 நிறைவேற்ற வேண்டியது அவசியமாகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றம் வரை சென்றுள்ளது. எனவே, தயவுசெய்து இது ஒரு அரசியல் மசோதா என்று யாரும் கூற வேண்டாம். டெல்லி ஒரு யூனியன் பிரதேசமாக இருப்பதால் இதில் உள்ள சிக்கல்கள் மற்றும் தெளிவின்மையை இந்த மசோதா மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்படுகிறது. இதில் உள்ள சில குழப்பங்கள் முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் நிர்வாகத்தின் செயல்திறன் அதிகரிக்கும்.கடந்த 1996 முதல் மத்திய மற்றும் டெல்லி அரசாங்கங்களுக்கு இடையே நல்லுறவு இருந்து வந்தது. அனைத்து வேறுபாடுகளும் விவாதங்கள் மூலம் தீர்க்கப்பட்டன. இருப்பினும், கடந்த 2015ம் ஆண்டு முதல், சில சிக்கல்கள் வந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன அதனடிப்படையில் இது சில தீர்ப்புகளையும் நீதிமன்றம் வழங்கியது. ஜிஎன்சிடிடி சட்ட கடந்த 1991 ஆம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தால் இயற்றப்பட்டபோது, டெல்லி”சட்டமன்றத்துடன் கூடிய வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டது\” என தெரிவிக்கப்பட்டது. ஆனால், நாங்கள் அதைச் செய்யவில்லை. காங்கிரஸ் அரசாங்கம்தான் இந்தச் சட்டத்தை இயற்றியது. மேலும், துணை நிலை ஆளுநர் என்பவர் ஒரு நிர்வாகி. எனவே அன்றாட விவகாரங்களை அறிந்து கொள்ள அவருக்கு உரிமை உண்டு. அதேசமயத்தில், நாங்கள் டெல்லி அரசாங்கத்திடமிருந்து எந்த அதிகாரத்தையும் பறிக்கவுமில்லை. கவர்னருக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கவுமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் எந்த தவறும் செய்யவில்லை அல்லது புதிதாக எதையும் கொண்டுவரவில்லை. ஆனால் தெளிவற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டு வந்து டெல்லி அரசாங்கத்தின் மீதுள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்தியது. இவ்வாறு கூறினார். ஆனால், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி, ”இந்த மசோதா அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானது. டெல்லி அரசின் அதிகாரங்களை ஆக்ரமித்துக்கொண்டது”என்றார். ஆம் ஆத்மி எம்பி பக்வந்த்மான் சிங், இந்த மசோதாவை கடுமையாக எதிர்ப்பதாகவும், இதனை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார். முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகிறது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த மசோதாவை திரும்பப் பெறுமாறு மத்திய அரசிடம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார். இந்த மசோதாவை வாபஸ் பெறுவதற்காக ஆம் ஆத்மி கட்சி மோடி அரசாங்கத்தின் காலடியில் விழவும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.வைஸ்ராயின் ஆன்மா மூலம் டெல்லியை வழிநடத்த மத்திய அரசு விரும்புகிறதுமக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட போது ஆம்ஆத்மி சார்பில் அந்த கட்சியின் எம்பி பகவந்த் மான்சிங் விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: பிரிட்டிஷ் காலத்து வைஸ்ராய் ஆன்மாவை வைத்து டெல்லியில் ஆட்சி நடத்த மத்திய அரசு மாநிலங்களின் உரிமைய பறித்து இருக்கிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் சட்டசபை இல்லாமல் செய்தது போல் தேசிய தலைநகரும் இருக்க மத்திய அரசு விரும்புவது ஏன்?. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வைஸ்ராய் குடியிருந்த பங்களாவில் தான் தற்போது டெல்லி கவர்னர் வசித்து வருகிறார். ஒருவேளை வைஸ்ராயின் ஆன்மா மூலம் டெல்லியை ஆட்சி நடத்த மத்திய அரசு விரும்புகிறது போலும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட டெல்லி முதல்வர் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றால் எதற்காக டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படுகிறது?. மாநிலங்களின் உரிமையை பறிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் தான் வேளாண் சட்டம் உள்பட பல்வேறு சட்டங்கள் மூலம் மாநில அரசுகளை கவர்னர்கள் மூலம் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் ஆம்ஆத்மி அரசை பலவீனப்படுத்த இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மிகப்பெரிய படுதோல்விக்கு பிறகு பா.ஜ பாடம் கற்று இருக்க ணே்டும். ஏனெனில் சட்டசபையில் உள்ள 90 சதவீதம் எம்எல்ஏக்கள் ஆம்ஆத்மி சார்பில் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து பெறக்கூட டெல்லி சட்டசபையில் பா.ஜவுக்கு எம்எல்ஏக்கள் இல்லை. ஆனால் நாங்கள் அந்த பதவியை பா.ஜவுக்கு கொடுத்தோம். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக டெல்லி சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் எப்படி அமர்வது என்பதைக்கூட பா.ஜ மறந்து விட்டது. எனவே தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் தொடர்ந்து மிகப்பெரிய தோல்வியைத்தான் பெறப்போகிறீர்கள். அதில் இருந்து உங்களால் மீளவே முடியாது. இந்த மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இந்த மசோதா மூலம் ஜனநாயகத்தை மத்திய அரசு கொன்று விட்டது. தடி கொண்டு தேசிய தலைநகரை ஆட்சி செய்ய மத்திய அரசு விரும்புகிறது. இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.டெல்லியில் எப்போதும் மத்திய அரசு ஆட்சிதான்பா.ஜ எம்பி பிரிஜேந்திரசிங் மக்களவையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: டெல்லி ஒரு யூனியன் பிரதேசம்தான். அது சண்டிகார் அல்லது புதுச்சேரி போல் சிறப்பு அந்தஸ்து பெற்றது அல்ல. அந்தமான், நிக்கோபார் தீவுகள் போன்றதுதான். ஏனெனில் டெல்லி இந்த நாட்டுக்கே தலைநகரம். எனவே டெல்லியின் முக்கியத்துவம் மத்திய அரசுடன் தொடர்புடையது. டெல்லியை மத்திய அரசுதான் ஆட்சி நடத்தும். இந்த மசோதா மூலம் டெல்லி கவர்னருக்கும், அரசுக்கும் இடையிலான அதிகார மோதல் முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கனவே டெல்லி கவர்னருக்கு அதிக அதிகாரம் உள்ளது. இந்த மசோதா மூலம் அவரது அதிகாரத்தை யாரும் குறைக்காமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்தியில் பா.ஜ ஆட்சியில் இருந்த போது டெல்லியில் காங்கிரஸ் முதல்வராக ஷீலா தீட்சித் இருந்தார். அதே போல் டெல்லியில் பா.ஜ ஆட்சி நடத்திய போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அப்போது எல்லாம் இதுபோன்ற அரசியல்சாசன பிரச்னை எழவில்லை. ஆனால் இப்போது உள்ளது போல் ஒரு அராஜகவாதியின் ஆட்சியின் டெல்லிக்கு முழுமாநில அந்தஸ்து அளித்தால் ஒரு உள்நாட்டு போர் ஏற்பட்டு இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.டெல்லி மக்களுக்கு அவமானம் முதல்வர் கெஜ்ரிவால் ஆவேசம்டெல்லி கவர்னருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது: டெல்லி அரசாங்கம் என்பது டெல்லி கவர்னர்தான் என்ற மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்து இருப்பது டெல்லி மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானம். இந்த மசோதா மக்கள் வாக்களித்து தேர்வு செய்யப்பட்டவர்களின் அதிகாரத்தை பறிக்கிறது. மேலும் யார் தோல்வி அடைந்தார்களோ அவர்கள் டெல்லியை ஆள்வதற்கு அதிகாரம் அளிக்கிறது. பா.ஜ மக்களை ஏமாற்றி விட்டது. இவ்வாறு கூறியுள்ளார். முன்னதாக இந்த மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற்றால் மோடி அரசின் காலடியில் விழுந்து கிடக்க ஆம்ஆத்மி அரசு தயாராக உள்ளது என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதையெல்லாம் மீறி இந்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

sixteen − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi