Wednesday, May 15, 2024
Home » சமுதாயத்துக்கு நாம் என்ன செய்தோம்?

சமுதாயத்துக்கு நாம் என்ன செய்தோம்?

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 32(பகவத் கீதை உரை கர்ம யோகம்)சிறுவர்கள் விளையாட்டு ஒன்று. இரண்டு பேரே போதும் இந்த விளையாட்டுக்கு. அதாவது ஒருவன் திடீரென்று ‘ஸ்டாச்யூ’ என்று சொல்வான், உடனே அடுத்தவன் அப்படியே சிலை போல நின்றுவிடுவான். சிலையானவன் கொஞ்சமாவது அசைகிறானா, கண் சிமிட்டுகிறானா, முகத்தைத் திருப்புகிறானா, கை, கால்களை அசைக்கிறானா என்று சில விநாடிகள் கவனிப்பான். குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, ‘கோ’ (GO) என்று முதல் பையன் சொல்வான், இரண்டாமவன் இயல்புக்குத் திரும்புவான். இந்தக் குறுகிய காலகட்டத்தில் இரண்டாமவன் ஏதேனும் அசைவைக் காட்டினால் அவன் தோற்றவனாவான்.இது அப்போதைய கொஞ்ச நேரத்துக்குப் புலனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு விளையாட்டு. அதாவது புலன் கட்டுப்பாடு என்பது பற்றியே உணராத சிறுவர்களின் விளையாட்டு. இப்படி விளையாட்டில் மட்டுமல்லாமல், வாழ்க்கையிலும் புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றுதான் கிருஷ்ணன் அறிவுறுத்துகிறார். தேவான்பாவயதானேன தே தேவா பாவயந்துவபரஸ்பரம் பாவயந்த ச்ரேய பரமவாப்ஸ்யத (3:11)‘‘இப்படி ஆற்றும் யக்ஞத்தால் தேவர்களை மேன்மையுறச் செய்யுங்கள். பதிலுக்கு அந்த தேவர்கள் உங்களை மேம்படுத்தட்டும். இப்படி ஒருவருக்கொருவர் தத்தமது கடமைகளை இதயபூர்வமாக, முழுமையாக ஆற்றி மேலும்மேலும் சிறப்படைவீர்களாக.’’தேவர்கள் என்பவர் யார்? அமரத்துவம் பெற்றவர்கள். எப்படிப்பட்ட அமரத்துவம்? வெறும் மரணத்தால், உடலை விட்டு நீங்குவதால் ஏற்படும் அமரத்துவம் அல்ல. ஓர் உடலைப் பிரிந்த உயிர் உடனேயே இன்னொரு கருவாக உருமாறும். சில மாதங்களில் இன்னொரு உடம்பு அதற்குக் கிடைத்துவிடும். ஆனால், இப்படி இன்னொரு உடல் பெறாமல் ஆன்மாவாகவே நிலைத்துவிடுவதே அமரத்துவம். இத்தகைய ஆன்மாக்களே தேவர்கள். இவர்கள் நிரந்தரமானவர்கள். இத்தகைய தேவர்களின் ஒத்துழைப்பு நமக்குக் கிடைக்க வேண்டுமானால் நம் கர்மங்களை இறையச்சத்தோடு நாம் இயற்ற வேண்டும். இப்படி இயற்றும்போது தேவர்களுடன் பரஸ்பரம் ஒருங்கிணைப்பும் ஏற்படும். நல்ல செயல்களைச் செய்யும்போது இந்த தேவதைகள் தாமாக முன்வந்து நமக்கு உதவுகின்றன. பலருக்கும் பயனளிக்கக்கூடிய பல செயல்கள் எப்படி நடந்தன என்ற பிரமிப்பை நமக்கு ஊட்டும். இதற்கெல்லாம் காரணம் கண்ணுக்குத் தெரியாத அந்த தேவதைகளின் மறைமுக உதவிதான். இதற்கு முக்கிய காரணம், நாம் நம் கர்மாக்களை இறையுணர்வோடு, தன்னலம் நோக்காத மனப்பான்மையோடு செய்வதுதான்.நம் உடலிலுள்ள புலன்களைப் போலத்தான் இந்த தேவர்களும். சில நாட்கள் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஐம்புலன்களும் சக்தியிழக்கும். ஆமாம்! பசி காதை அடைக்கும், கண்களில் பார்வை மங்கும், சுவாசம் நீளும், வாயும் தொண்டையும் வறண்டுபோகும், சருமம் சோர்வு கொள்ளும். இந்தப் புலன்களுக்கு உணவு எப்படி முக்கிய தேவையோ அதேபோலதான் தேவர்களுக்கும். நாம் இறைச்சுவை மிகுந்த கர்மங்களை, அதாவது யக்ஞத்தை இயற்றுவதும் தேவைப்படுகிறது. பிறகு, இந்த உலகில் எத்தனையோ கொடுஞ் செயல்கள் நிகழ்கின்றனவே இவற்றுக்கு யார் ஆதரவு கொடுக்கிறார்கள்? எப்படி நல்ல மனிதனுக்குத் துணைபுரிய நல்ல ஆன்மாக்கள் (தேவர்கள்) இருக்கின்றனவோ, அதேபோல தீயனபுரிபவனுக்குத் தீய ஆன்மாக்கள் உதவுகின்றன. இந்தத் தீய ஆன்மாக்கள் முந்தைய ஜன்மத்தில் இறை உணர்வே இல்லாமல் தீய செயல்களில் ஈடுபட்டிருந்திருக்கக் கூடியவை. அவை தன் தன்மையை ஒத்த உயிர் எங்கேனும் இருக்குமா என்று தேடி வருகையில், தீயசெயல்கள் புரியத் தோதான உடலை அடையாளம் கண்டுகொள்கின்றன. உடனே ஓடோடி வந்து அதற்குத் துணையாக நிற்கின்றன. இதனால்தான், நல்லவரும் பலமிக்கவராக விளங்குகிறார், தீயவரும் பலமிக்கவராக உள்ளார். தத்தமது உணர்வுக்கேற்ற செயல்களில் ஐம்புலன்களும் ஆர்வம் கொள்கின்றன. அச்செயல்கள் நல்லவையாக இருந்தால் அவையும் நல்லனவற்றையே பிரதிபலிக்கும். அதேபோல் தீயவையானால் தீயனவற்றையே வெளிப்படுத்தும். ஒருவர் தண்ணீர்ப் பந்தல் அமைத்து தேவைப்பட்டோருக்கு தாகம் தணிவிக்கிறார் என்றால், உடனே தேவர்களும், தேவதைகளும் அவருக்கு பக்கபலமாக இருந்து அந்த சேவை அனைத்து மக்களுக்கு போய்ச் சேர உதவும். தண்ணீர்ப் பந்தல் வைத்தவரே திகைக்கும்படி எந்த இடையூறும் இல்லாமல் அந்தச் சேவை நிறைவேறும். அதேபோல, ஒருவன்  கொலை செய்ய முனைகிறான் என்றால், உடனே தீய தேவதைகளின் தூண்டுதலும், ஊக்குவிப்பும் அவனுக்குக் கிடைக்கின்றன. ‘உணர்ச்சிவசப்பட்டு’ அந்தக் கொலையைத் தான் புரிந்ததாக அவன் அப்படிச் செய்த பிறகு சமாதானம் சொல்லிக்கொள்கிறான், அல்லது தன்னையே நொந்து கொள்கிறான். இப்படி அவனுடைய நினைப்புக்கு துர்தேவதைகள் பக்க பலமாக இருக்கின்றன. கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொல்வதும் இதைத்தான். ‘நான் செய்கிறேன்’ என்ற அகம்பாவத்தை ஆரம்ப கட்டத்திலேயே அழிக்கச் சொல்கிறார். அந்த உணர்வை அழித்து பரமாத்மா அளித்த கர்மத்தில் முழுமையாக ஈடுபடச் சொல்கிறார். அப்படி அவன் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு செய்வானாகில் அவனுக்குத் தேவர்கள் உடனிருப்பார்கள், உதவுவார்கள், ஒத்துழைப்பார்கள். இதனால் ஏற்படும் பெரிய பலன் என்ன தெரியுமா? அர்ஜுனன் தன் செயல்களில் வெற்றி பெறுவது மட்டுமல்ல; அவர்களுடைய ஆதரவுடன் அவன் தன் கர்மாக்களை நிறைவேற்றுவதுபோல, அவர்களும் தாங்கள் நிறைவேற்றத் துடிக்கும் கடமைகளை அவன் மூலமாக ஈடேற்றிக்கொள்வார்கள். அவனுக்கும் வெற்றி, அவர்களுக்கும் வெற்றி. மொத்தத்தில் நல்ல மனிதனுக்கு தேவர்கள் உதவி கிடைப்பதுபோல, தீய மனிதருக்கும் தீய தேவதைகளின் உதவி கிடைக்கிறது. ஆனால், பரம்பொருள் அளித்துள்ள கர்மாக்களை நல்ல தேவர்கள், தேவதைகளின் உதவியோடு நிறைவேற்றும் நல்ல மனிதனே, உண்மையான வெற்றி பெற்றவனாகக் கருதப்படுகிறான் என்று அறிவுறுத்துகிறார் கிருஷ்ணன். சரி, அப்படி தேவதைகளின் உதவிகளைப் பெற்ற ஒருவன் ஆற்றவேண்டிய ஒரு முக்கியமான கடமை இருக்கிறதே, அது என்ன தெரியுமா?இஷ்டான் போகான்ஹி வோ தேவாதாஸ்யந்தேயக்னபாவிதாதைர்தத்தானப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேன ஏவ ஸ (3:12)‘‘ஒருவன் ஆற்றக்கூடிய யக்ஞத்தின் மூலம் தேவர்கள் பேணப்படுகிறார்கள். அதே யக்ஞத்தின் மூலம் அழைக்கப்படும் அவர்கள் நீ கோராமலேயே உனக்கு அநேக போகங்களை அருள்வார்கள். அப்படிப் பெறக்கூடிய போகங்களுக்குக் கைம்மாறாக நீ என்ன செய்யப் போகிறாய்? கைம்மாறு ஒன்றும் செய்ய வேண்டாம் என்று நீ கருதுவாயானால் நீ ஒரு திருடனுக்கு ஒப்பாவாய்.’’பிறப்பிலிருந்து என்று எடுத்துக்கொண்டால், ஒரு மனிதனுடைய வளர்ச்சி என்பது முற்றிலும் அவனுடைய சமுதாயத்தையே சார்ந்திருக்கிறது. அவனுடைய பெற்றோர் மேற்கொண்ட யாகத்தின் பயனாக அவனுடைய பிறப்பு நிகழ்கிறது. அப்போதிலிருந்து ஒவ்வொரு கட்டத்திலும் அவனுடைய வளர்ச்சியில் சமுதாயத்தின் பங்களிப்பு இருக்கிறது. அவன் உடை உடுத்துகிறான். இதற்கு துணி தயாரிப்பவரும், உடையாகத் தைத்துக் கொடுப்பவரும் அவனுக்கு உதவு கிறார்கள். அதாவது இவர்களுடைய யக்ஞத்தின் பலனை அவன் அனுபவிக்கிறான். அதேபோல் அவனுடைய கல்விக்கும், அதனை அளிக்கும் நிறுவனம், கட்டிடம், போதிக்கும் ஆசிரியர் என்று பலருடைய சேவை பயன்படுகிறது. அவன் உண்ணும் உணவுக்குப் பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது! அவன் எங்கேனும் பயணிக்க வேண்டுமானால், அந்த இலக்கு நோக்கி அவனை அழைத்துச் செல்ல சாலைகளையும், வாகனங்களையும் அவனுக்கு சமுதாயம் அளிக்கிறது. அவன் நோய்வாய்ப் பட்டால் அதைக் குணப்படுத்த மருத்துவர், மருத்துவமனை, மருந்து என்றெல்லாம் உருவாக்கித் தருகிறது. அவன் குடியிருக்க வீடு தருகிறது. அவன் தொழில்புரிய பல வாய்ப்புகளை அவன்முன் விரிக்கிறது. அவன் வருமானம் பெறுவதற்கும் தன் குடும்பத்தை நடத்தவும் எத்தனையோ சலுகைகளையும், திட்டங்களையும் அவன்முன் சமர்ப்பிக்கிறது. அவனுடைய திருமணத்தை நடத்தி வைக்கிறது. அவனுக்குப் பிறக்கும் குழந்தைகளை அந்தந்த வயதில், அவரவர் தேவைகளுக்கேற்ப வசதிகள் செய்து தருகிறது. அதாவது இவன் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக சமுதாயத்தின் உதவிகளைப் பெற்று வளர்ந்தானோ அதேபோல, அவனுடைய குழந்தைகளுக்கும் அதே உதவிகளை நீட்டிக்க இந்தச் சமுதாயம் தயங்கவில்லை. அதுமட்டுமா, முதிய வயதில் அவன் தனித்திருக்கவேண்டிய நிலை வந்தால், அப்போதும் அவனைப் பாதுகாக்க முதியோர் இல்லமும் இந்த சமுதாயத்தால் உருவாக்கித் தரப்பட்டுள்ளது.  இப்படி தனக்குப் பலவகைகளில், அந்தந்த வயதுக்குத் தேவையான எல்லா உதவிகளையும், வாய்ப்புகளையும் தந்த சமுதாயத்துக்கு இவன் திருப்பி என்ன கைம்மாறு செய்கிறான்? தன் வளர்ச்சிக்குத் தனக்குக் கிடைத்த பல நல்விஷயங்களைப்போல, தானும் அந்தச் சமுதாயத்துக்குச் செய்ய வேண்டாமா? தான் பெற்ற அதே அளவிலாவது அவன் திரும்பச் செலுத்தவேண்டும். ஏன் கூடுதலாகவே செய்ய வேண்டும். திரும்பச் செலுத்தும் அளவு குறையுமானால், அவன் சமுதாயத்துக்குக் கடன்பட்டவனாகி விடுகிறான். தன் வளர்ச்சிக்குக் கிடைக்கும் வாய்ப்புகளுக்கு அவன்தான் உரிய கட்டணம் செலுத்தியோ அல்லது வேறுவகையிலோ சமன் செய்துவிடுகிறானே என்று வாதிடலாம். ஆனால் அவ்வாறு கட்டணம் செலுத்தினாலும் அந்த விஷயங்கள் அவனுக்குக் கிடைக்காமலேயே போய்விடவும் கூடுமல்லவா? ஆகவே தனக்கு உதவிய சமுதாயத்துக்கு நிச்சயம் பிரதியுபகாரம் செய்யவேண்டியது அவனுடைய கடமை. அப்படி அவன் செய்யவில்லை என்றால், அவன் திருடனாகிறான். இன்னும் திடமாகச் சொல்வதானால், தான் எந்த உழைப்பையும் நல்காமல், எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல், சமுதாயத்தின் பலனை ஒருவன் அனுபவிக்கிறான் என்றால், அவன், தனக்குச் சற்றும் உரிமையில்லாத பொருளைக் கவர்ந்துகொள்ளும் கள்வனாகிறான் என்றுதான் பொருள்.வாழ்க்கையில் யக்ஞத்தை இயற்றுபவன், சற்றும் சுயநல நோக்கின்றி, சமுதாயத்தின் பொது நன்மையைக் கருதியே இயங்குகிறான் என்பதால், அவனுக்கு எல்லா உதவிகளையும் அதே சமுதாயம் வழங்குகிறது. தெய்வீக சக்திகளும் அவனுக்குத் தேவையான ஆன்மிக பலத்தினை அருள்கின்றன. யக்ஞத்தின் பலனை அனைவருக்கும் பகிர்ந்தளிக்குமாறு கிருஷ்ணன் சொல்கிறார். இது பரஸ்பர பரிமாற்றலுக்கும் உட்பட்டது. அந்தப் பலன்தான் என்ன? ஆனந்தம்தான், சந்தோஷம்தான். சுயநலம் பாராட்டாத இந்தக் கணிதத்தின் வினோதத்தைப் பாருங்கள். அன்பும், ஆனந்தமும் வகுத்தளிக்கப்படும்போது அது பன்மடங்காகப் பெருக்கம் அடைகிறது! இப்படி ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் இந்த ஆனந்தமே பெருவாழ்வுக்கு வழிவகுக்கிறது. ஆனந்தம் என்பது ஊற்று நீர் மாதிரி. ஊற்றை இறைக்க இறைக்க அது சுரந்துகொண்டே இருக்கும். அதுபோல, பகிர்ந்துகொள்வதாலோ, வாரி வழங்குவதாலோ நம்மிடம் ஆனந்தத்தின் இருப்பு குறையாது, மேன்மேலும் வளர்ந்துகொண்டேதான்போகும்.(கீதை இசைக்கும்)தொகுப்பு: பிரபு சங்கர்

You may also like

Leave a Comment

1 + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi