Saturday, May 25, 2024
Home » கொடுங்கையூரில் மக்காத குப்பையில் இருந்து ₹350 கோடியில் மின் உற்பத்தி ஆலை: தினமும் 14 லட்சம் கிலோ குப்பையிலிருந்து 15 மெகா வாட் மின்சாரம் பெற ஏற்பாடு

கொடுங்கையூரில் மக்காத குப்பையில் இருந்து ₹350 கோடியில் மின் உற்பத்தி ஆலை: தினமும் 14 லட்சம் கிலோ குப்பையிலிருந்து 15 மெகா வாட் மின்சாரம் பெற ஏற்பாடு

by Karthik Yash

சிறப்பு செய்தி
மறுசுழற்சி செய்ய முடியாத மக்காத குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி, கொடுங்கையூரில் ₹350 கோடியில் மின் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மின் உற்பத்தி ஆலை மூலம் தினமும் 14 லட்சம் கிலோ குப்பையில் இருந்து 15 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாம் வாழும் பகுதி மாசடைந்து வருகிறது என்றால் அதற்கு பிரதான பங்கு வகிப்பது நம்மால் தூக்கி எறியப்படும் குப்பை தான். நம் வாழ்க்கை முறை மாற மாற குப்பையின் அளவும் கணிசமாக அதிகரித்தே வருகிறது. முன்பெல்லாம் நகரங்களில் கூட வீடுகளுக்கு பின்னால் எருக்குழி என்று ஒன்று இருக்கும். உணவுக் கழிவுகளையும், வீணான காய்கறி, பழங்களையும் அதில் போட்டு அதன் மீது கொஞ்சம் மண்ணை தூவிவிட்டால், சில மாதங்களில் தோட்டத்திற்கு உபயோகிக்க நல்ல உரம் கிடைக்கும்.

ஆனால் இன்று வீடுகளின் அளவே குழியளவுக்கு சுருங்கிப் போய்விட்டது. இதில் எருக்குழிக்கு எங்கே போவது. அதோடு வீட்டில் உபயோகித்த பால்கவர், பவுடர் டப்பா, மை டப்பா, பாட்டில்கள், உபயோகித்த டூத்பிரஷ் என வீணாகும் பிளாஸ்டிக் மற்றும் உலோகப் பொருட்களை காயலாங் கடைக்காரனுக்கு எடைக்கு போடுகிற வழக்கம் இருந்தன. ஆனால் இன்றோ எல்லாமே யூஸ் அன் த்ரோதான். அதோடு எல்லாமே பிளாஸ்டிக் கவர் தான். சென்ட் பாட்டில் உபயோகித்தால் உபயோகித்து விட்டு குப்பைத் தொட்டிக்கு எறிகிற கலாச்சாரம் எப்படியோ நமக்குள் நுழைந்துவிட்டது. இவ்வாறான குப்பையை முறையாக அகற்றாமையினால் இன்று பல்வேறு தொற்று நோய்களும், கிருமித் தொற்றுகளும் ஏற்படுவதை காணலாம்.

பெரும்பாலும் மக்காத குப்பையின் மூலமே சூழலுக்கு அதிகமான பாதிப்புகள் அல்லது தீமைகள் ஏற்படுகின்றன. அதாவது பிளாஸ்டிக் பொருட்கள், பொம்மைகள், டப்பாக்கள், தண்ணீர் பாட்டில்கள், அட்டை டப்பாக்கள், கேரிபேக்ஸ், பால் கவர் முதலானவை மக்காத குப்பை ஆகும். இவைகள் மண்ணோடு சேர்வதனால் மண்வளம் பாதிக்கப்படுகின்றது. மேலும் அவற்றை எரிப்பதனால் வளிமண்டலம் மாசடைகிறது. நதி, கடல் போன்றவற்றில் கொட்டுவதனால் நீர் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறான குப்பை மனித இனத்துக்கு மாத்திரமல்லாமல் விலங்குகள், தாவரங்கள், சூழலில் உள்ள நுண்ணுயிரிகள் ஆகிய அனைத்துக்கும் பாதகமாகவே அமைகின்றன. இவற்றை முற்றிலும் அகற்றுவது என்பது சவாலான ஒன்று தான். எனவே, இந்தக் குப்பைகளில் உள்ள அத்தனைப் பொருட்களும் மறு சுழற்சி என்னும் முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, அதிக மக்கள் தொகை கொண்ட சென்னையில் குப்பை என்பது பிரச்னையாகவே இருந்து வருகிறது. சென்னையில் நாள்தோறும் 52 லட்சம் கிலோ குப்பை சேகரமாகிறது. இவை அனைத்தையும் மக்கும், மக்காத குப்பை என 100 சதவீதம் தரம் பிரித்து பெறும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதில், 22 லட்சம் கிலோ மக்கும் குப்பையில் இருந்து உரம் மற்றும் பயோ காஸ் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த உரம் விவசாய நிலங்களுக்கும், மாநாநகராட்சி பூங்காக்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதேபோன்று மக்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் குப்பை சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

மேலும் பல்ப், பேட்டரி, பெயின்ட், எண்ணெய் கேன், காலாவதியான மருந்து மாத்திரைகள் போன்றவை மணலியில் உள்ள அபாயகரமான எரிவாயு ஆலையில் எரியூட்டப்பட்டு பேவர் பிளாக் கற்கள் தயாரிக்க அனுப்பப்படுகிறது. மக்காத குப்பைகளில் மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியாதவை பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது சென்னை முழுவதும் குப்பை பிரச்னைக்கு முழு அளவில் தீர்வு காணும் வகையில் சென்னை மாநகராட்சி பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் பயோமைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கும் திட்டத்தை வேகமாக செயல்படுத்தி வருகிறது. இதனால் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பை அனைத்தும் வேகமாக அகற்றப்பட்டு அந்த இடம் சமதளத்துக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி வேகம் காட்டி வருகிறது. இப்படி பல்வேறு திட்டங்கள் மூலம் சென்னை முழுவதும் சேகரமாகும் அனைத்து விதமான குப்பையையும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, தற்போது தீர்வு காண முடியாத நிலையில் உள்ள மக்காத குப்பை பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில், மக்காத குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான திட்ட அறிக்கையை சென்னை மாநகராட்சி தயாரித்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு துறை வல்லுநர்கள் மற்றும் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலை உள்ளிட்டவர்களுடன் ஆலோசனைகளை சென்ைன மாநகராட்சி பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் மக்காத குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

இந்த திட்டம் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் குப்பை பிரச்னை என்பது நீண்ட கால பிரச்னையாக இருக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் தற்போது பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு நல்ல பலன்கள் கிடைத்து வருகிறது. சென்னையில் தினமும் சேகரமாகும் குப்பை அனைத்தையும் குப்பை கிடங்களுக்கு கொண்டு செல்லாமல் முழுமையாக அவற்றை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் உள்ள குப்பை பயோமைனிங் முறையில் அகற்றப்பட்டு நிலத்தை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முழுமையாக முடிந்ததும், இந்த குப்பை கிடங்குகளிலும் மறுசுழற்சி கிடங்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கு பிரித்தெடுக்கப்படும் பொருட்கள் மறுசுழற்சி நிறுவனங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பொருட்களில் மறுசுழற்சி செய்ய முடியாத மக்காத குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மின் உற்பத்தி ஆலை ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலையானது ₹350 கோடியில் அமைக்கப்படும். தினமும் 14 லட்சம் கிலோ குப்பையை பயன்படுத்தி 15 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். இதில் கிடைக்கும் மின்சாரத்தை மாநகராட்சி அலுவலகங்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த மின் உற்பத்தி ஆலைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிபுணர் குழுவின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிர்வாக அனுமதி பெற்று டெண்டர் கோரப்படும். பின்னர் மின் உற்பத்தி ஆலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மின் தேவை குறையும்
சென்னை மாநகராட்சி சார்பில் மக்காத குப்பையில் இருந்து மின் உற்பத்தி செய்வதன் மூலம் சென்னைக்கு மின் தேவையை குறைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், மின் பற்றாக்குறை காலங்களில் அதிகளவில் பணம் கொடுத்து வெளியில் இருந்து மின்சாரம் வாங்கப்படுவது இதன் மூலம் குறைவதுடன், அரசுக்கு வருவாய் ஈட்ட உதவியாக இருக்கும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாதிரி திட்டம்
சென்னை மாநகராட்சியில் சேரும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்க, அனைத்து மண்டலங்களிலும் பயோ கேஸ் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. அதன்படி, புளியந்தோப்பில் உள்ள ராயபுரம் மண்டல குப்பை மாற்று வளாகத்தில், மாதிரி திட்டமாக, ரூ.40 லட்சம் செலவில், 326 ச.மீ., பரப்பில் பயோ கேஸ் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையம் மூலம் 100 முதல், 200 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

திடக்கழிவு விழிப்புணர்வு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். என் குப்பை, எனது பொறுப்பு என்ற உணர்வோடு நமது சென்னை மக்கள் அனைவரும் தங்களது வீட்டு குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து கொடுக்க வேண்டும்” என்று மாநகராட்சி மேயர் பிரியா வலியுறுத்தியுள்ளார்.

You may also like

Leave a Comment

5 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi