Wednesday, May 22, 2024
Home » குழந்தை வரம் தந்தருள்வாள் வீரமனோகரி

குழந்தை வரம் தந்தருள்வாள் வீரமனோகரி

by kannappan

நம்ம ஊரு சாமிகள்குலசேகரப்பட்டினம், தூத்துக்குடிதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் அருள்பாலிக்கிறாள் அன்னை வீரமனோகரி அம்மன். நாக கன்னியின் வயிற்றில்  உதித்த அஷ்ட காளியரில் இரண்டாவதாக பிறந்தவள் மாகாளி. திருச்செந்தூரில் சூரபத்மனை, முருகபெருமான் வதம் செய்தபோது, சூரபத்மனின் குருதி இந்த மண்ணில் விழுந்து விடக்கூடாது என்பதால் அந்த குருதியை தான் வாங்கியவள் இந்த மாகாளி. அதன் பின்னர் வீரமாகாளி என்று அழைக்கப்படலானாள்.  திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) பகுதியில் சூரபத்மனை சுப்ரமணியர் வதம் செய்த பின்னர், வீரமாகாளி அவ்விடம் விட்டு மீண்டும் பொதிகைமலை செல்ல முற்பட்டாள். வரும் வழியில் வீரைவளநாடு (குலசேகரப்பட்டினம்) என்ற பகுதியில் உள்ள கடற்கரையோரம் இருந்த வனச்சோலை வீரமாகாளிக்கு பிடித்துவிட  அங்கேயே வாசம் செய்தாள். தனக்கு ஒரு ஆலயம் வேண்டும், முக்கால பூஜை மற்றும் விழாக்கள் வேண்டும், தான் இவ்விடம் வந்ததை இப்பகுதியினர் அறிய  வேண்டும் என்று எண்ணிய வீரமாகாளி, அவ்வழியாக வருவோர், போவோரை அடித்து, அச்சுறுத்தினாள். குழந்தை முதல் குமரி வரையிலான பெண்களுக்கு நோய்களை ஏற்படுத்தினாள். ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி அப்பகுதியில் மந்திரத்திலும், மாந்திரீகத்திலும் வல்லவனாகத் திகழ்ந்த வல்லவராயரை நாடினர். அவர் சோழி போட்டு பார்த்தார். வந்திருப்பது உக்கிர வடிவான காளி என்றும், குறிப்பாக அஷ்ட காளிகளில்  ஒருவரான மாகாளி என்றும் தெரிந்தது. மாகாளி இவ்விடம் வந்ததை விவரித்த வல்லவராயர், ஊர்ப்பிரமுகர்களிடம் சிலைக்கு வடிவம் வரைந்து கொடுத்து, சிலை செய்து கோயில் எழுப்பி அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டு வர, பிணிகள் அகலும், மணியான வாழ்க்கை ஒளிரும் என்றார். அதன்படி ஊரார் கூடி அம்மனுக்கு  கோயில் எழுப்பினர். வல்லவராயர் பூஜை செய்து வந்தார். அம்மன் அருள் திறன் ஊரெங்கும் பரவ, நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்தது. பனை ஓலையாலான கோயில் பெரிதாக கட்டப்பட்டது. வல்லவராயர் வம்சத்தினர் கோயிலில் பூசாரியாக இருந்து வந்தனர்.ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று பூஜை செய்ய சென்ற பூசாரியுடன் அவருடைய மனைவியும், மூன்று வயது மகனும் சென்றனர். பூசாரி அம்பாளுக்கு பணிவிடை செய்யும்போது, சிறுவன் கோயிலிலுள்ள மணிமண்டபத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். பூஜை முடிந்ததும் பூசாரியின் மனைவி, ‘பையன் விளையாடிக் கிட்டு இருக்கான், கூப்பிட்டா, அப்பா கூட வாரேன்கிறான். வரும்போது மகன கூட்டிட்டு வாங்க’ என்று கூறிச் சென்றாள். சந்நிதானத்திற்கு பின்னால் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் அங்கேயே தூங்கிவிட்டான். இதை கவனிக்காத பூசாரி, கோயில் நடையைப் பூட்டிவிட்டு புறப்பட்டார். அடுத்த மாதம்  அப்பகுதியில் வேறொரு கோயிலில் கும்பாபிஷேகம் விஷயமாக கோயில் நிர்வாகியிடம் பேசச் சென்ற பூசாரி நள்ளிரவுக்குப் பிறகு வீடு திரும்பினார். வீட்டுக்  கதவை திறந்த அவரது மனைவி, ‘பையன் எங்கே?’ என்று கேட்டாள். பூசாரி தான் மறந்துவிட்டதை எண்ணித் திகைத்திருக்க, உடனே ஒப்பாரி வைக்கலானாள் மனைவி. ‘அய்யய்யோ, அந்த காளி, என் மகனை பலி எடுத்திருவாளே, இப்போதே போய் பிள்ளைய எடுத்திட்டு வாங்க’ என்றாள். ‘நமக்கு புள்ள வரம் கொடுத்ததே அந்த ஆத்தாதான். அதுமட்டுமல்ல, அடைச்ச கோயிலத்  திறக்கக்கூடாது. அதுவும் வெள்ளிக்கிழமை நடு சாமப்பொழுதாச்சு, ஆத்தா மேல பாரத்தப்போட்டு நிம்மதியா தூங்கு. கோழி கூவுனதும் போய் நடை திறந்து பையனை கூட்டிட்டு வந்திடுறேன்’ என்றார் பூசாரி. ஆத்திரம் பொங்கியது மனைவிக்கு. ‘குழந்தையோட இப்ப நீங்க வரலண்ணா, நான், நாக்கு பிடுங்கிட்டு  நாண்டுகிட்டு சாவேன்’ என்று கொந்தளித்தாள். மனைவியின் கோபத்தை தணிக்கும் பொருட்டு, மனமில்லாமல் சாவிக்கொத்துடன் புறப்பட்டார் பூசாரி.கோயிலில் திடீரென கண் விழித்த குழந்தை கதறியது. சத்தம் கேட்டு மாகாளி எழுந்து வந்து குழந்தையை கையில் எடுத்து அரவணைத்தாள். கோயில் கதவைத் திறக்க பூசாரி முற்பட்டபோது உள்ளிருந்து தாலாட்டுப் பாட்டு கேட்க, திகைத்தார். பின்னர் திடமாக முடிவெடுத்து கோயில் கதவில் சாவியை வைக்க, கோயிலுக்குள் இருந்து அசிரீரி கேட்டது: ‘ஏய், பூசாரி, போய் நாளை காலையில் வழக்கம்போல் வா, குழந்தை தூங்கிவிட்டான். பத்திரமாக என்னிடத்தில் இருப்பான். காலையில் வா.’ பூசாரி, ‘முடியாது. இப்போதே என் குழந்தை வேண்டும்’ என்றார். ‘நான் சொல்வதை கேளாமல் வாதம் செய்கிறாய். சரி,  அபிஷேக நீர் வரும் மடை முன்வந்து நில், உன் குழந்தை வரும், எடுத்துக்கொள்’ என்று கூறி மாகாளி, சிறுவனை தன் சிலையின் பின்புறம் மலர்ப் படுக்கையில்  தூங்க வைத்துவிட்டு, அவனைப்போன்று மாய உடலை உருவாக்கி, அதிலிருந்து கை, கால் என தனித்தனியாக எடுத்து, அபிஷேக மடை வழியே அனுப்பினாள்.மகன் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியே கண்ட பூசாரி கதறி அழுதார். அப்போது மனைவியும் பதற்றத்துடன் கோயிலுக்கு வர, மகனின் உடல் பாகங்களை கண்டு மயக்கமுற்று விழுந்தாள். பொழுது புலர்ந்தது, ஊராருக்குத் தெரிந்தது. அனைவரும் ஒன்றுகூடி, சந்நதி முன்பு நின்று அம்பாளை மனமுருக வேண்டினர். ‘அம்மா, உனது குழந்தைகள் நாங்கள் அறியாது செய்த பிழையை மன்னித்து  அருள வேண்டும். காப்பதற்கு தானே தெய்வம், நீயே எங்களை அழித்தால் என்ன தர்மம்? அப்படியானால் உனக்கு எதற்கு கோயில், பூஜை?’ என்று கேட்க,  அசிரீரி ஒலித்தது: ‘பூட்டிய கோயிலை திறக்கக் கூடாது, பூசாரி தன் தவறை உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காக நான் ஆடிய திருவிளையாடல் இது. உனது  மகன் எனது சிலையின் பின்புறம் தூங்குகிறான். அவனை பெயர் கூறி அழைத்தால் எழுந்து வருவான்.’அதுபோல் பூசாரி மகனை பெயர் கூறி அழைக்க, அவரது மகன் எழுந்து ஓடோடி வந்தான். அவனைப் பூரிப்போடு வாரி அணைத்தாள் பூசாரியின் மனைவி. இந்த சம்பவத்திற்கு பிறகு வீரமாகாளி என்ற உக்கிரப் பெயரை மாற்ற வேண்டும், அம்மன் சாந்த ரூபிணியாக இருக்க வேண்டும் என்பதற்காக வீர மனோகரி என்று  பெயரிட்டு அழைக்கலாயினர். குடும்பத்தில் அமைதியும், குழந்தை வரமும் தந்தருள்வாள் வீரமனோகரி. அது மட்டுமன்றி செய்தொழில் மற்றும் தேர்வு முதலானவற்றில் வெற்றிபெற இந்த அம்மனை நேரில் சென்று வணங்கினால் வெற்றி நிச்சயம். இந்தக்கோயில் திருச்செந்தூரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் உள்ளது.தொகுப்பு: சு. இளம் கலைமாறன்

You may also like

Leave a Comment

four × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi