Thursday, May 9, 2024
Home » குறளின் குரல் : திருக்குறளில் பவனிவரும் தேர்

குறளின் குரல் : திருக்குறளில் பவனிவரும் தேர்

by kannappan
Published: Last Updated on

திருவள்ளுவர் திருக்குறளில் இரண்டு இடங்களில் தம் கருத்தை விளக்க தேரைக் கொண்டுவந்து நிறுத்துகிறார். அவர் நம் கண்முன் கொண்டு நிறுத்தும் அழகிய தேரைக் கண்டு மயங்கி, அதன்மூலம் அவர் சொல்லவரும் கருத்தையும் நாம் உள்வாங்கிக் கொள்கிறோம். உலகில் உருவத்தைக் கேலி செய்பவர்கள் சிலர் உண்டு. நாகரிகமற்றவர்கள் அத்தகையோர். உருவத்தால் குறைந்தவர்கள் கூட, உலகம் என்ற பெரிய தேருக்கு அச்சாணி போன்றவர்களாக இருக்கக் கூடும். அச்சாணி இல்லாவிட்டால் தேர் ஓடுமா? இந்த உலகம் என்ற தேர் அத்தகைய அச்சாணிகளால்தான் நில்லாது ஓடிக் கொண்டிருக்கிறது என அறைகூவுகிறார் வள்ளுவர்.உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி அன்னார் உடைத்து.(குறள் எண் 667)அரசாளும் மன்னனுக்குத் தேரை மையப்படுத்தி வள்ளுவர் ஒரு முக்கியமான அறிவுரையைச் சொல்கிறார். ஒரு நாட்டின் மேல், போர் தொடுக்கும் முன் அந்த நாட்டுச் சூழல் தனக்கு வலிமை தருவதாக இருக்குமா என்று ஆராய்தல் அவசியம் என்கிறார். தன் நாட்டுச் சூழலில் தான் வலிமையோடு இருப்பதுபோலவே பகைநாட்டுச் சூழலிலும் தான் வலிமையோடு இருக்க இயலும் என்று தவறாகக் கணித்துப் போரிடத் தொடங்கினால் வெற்றி கிட்டாது. வலிமையுடையது நெடிய தேர். ஆனால், நிலத்தில்தான் அது ஓடும். கடலில் ஓடாது. அதுபோல், கடலில் ஓடுகின்ற நாவாய் ஒருநாளும் தரையில் ஓடாது. தரை தேருக்கு வாய்ப்பான இடம். கடல் நாவாய்க்கு வாய்ப்பான இடம். இடம் மாறினால் இரண்டும் வலிமையற்றவை ஆகிவிடும்.கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்நாவாயும் ஓடா நிலத்து.(குறள் எண் 496)தேர், நாவாய் இரண்டும் மரத்தால் செய்யப்பட்டவையே. ஒரே பொருளால் உருவானவை என்றாலும், அவை ஒவ்வோர் இடத்தில்தான் சிறப்பைப் பெற முடிகிறது. ஒரே மரமாயினும் தரையில் செல்லவும் தண்ணீரில் செல்லவும் வெவ்வேறு அமைப்புகளாக அவை வடிவமைக்கப் படுகின்றன. அதுபோல், மன்னன் போரில் வெற்றிபெற வெவ்வேறு  இடங்களில் அந்தந்த இடத்திற்குத் தக்கவாறு வெவ்வேறு உத்திகளைக் கையாள வேண்டும் என்கிறது பிறிதுமொழிதல் அணியில் எழுதப் பெற்றுள்ள இந்தக் குறள்.திருக்குறளில் மட்டுமா, நம் இதிகாசங்களிலும் புராணங்களிலும் பழைய இலக்கியங்களிலும் கூட, அரிய பல கருத்துகளைச் சொல்லிக் கொண்டு அழகிய தேர்கள் பல, நெடுக   ஓடிக்கொண்டே இருக்கின்றன.சூரியனின் தேர் ஏழு குதிரை பூட்டிய தேர் என்கின்றன நம் புராணங்கள். இன்று விஞ்ஞானம் சூரிய ஒளியால் தோன்றும் வானவில்லில் ஏழு வண்ணங்கள் உள்ளதுபற்றி  விளக்கம் தருகிறது. சூரியனின் தேர் ஒற்றைச் சக்கரத் தேர். அது ஒருபோதும் பின்னோக்கிச் செல்லாது. சூரியனால்தானே நாள் கணக்கிடப் படுகிறது? அது காலத்தின் அடையாளம் அல்லவா? காலம் முன்னோக்கிச் செல்லுமே அல்லாது ஒருபோதும் பின்னோக்கிச் செல்வதில்லையே? ராமாயணத்தில் வரும் தசரதன் எட்டுத் திசைகளில் மட்டுமல்ல, பாதாளம், மேல் உலகம் என இரண்டு திசைகளையும் சேர்த்துப் பத்துத் திசைகளில் ரதம் ஓட்டக் கூடியவன். அதனாலேயே அவனுக்கு `தச – ரதன்’ எனப் பெயர்.சம்பராசுர யுத்தத்தில் தசரதனுக்குத் தேரோட்டியவள் அவன் மனைவி கைகேயி. அப்போது தேரின் அச்சாணி கழன்றுவிட தன் விரலையே அச்சாணியாக்கித் தேரை நில்லாது ஓட்டி தசரதன் வெற்றிபெற உதவிய வீராங்கனை அவள். அவளால் கிட்டிய வெற்றியில் மகிழ்ந்துதான் அவளுக்கு இரண்டு வரங்களை வழங்கினான் தசரதன். அந்த வரங்களைப் பின்னால் பெற்றுக் கொள்கிறேன் எனச் சொன்ன கைகேயிக்கு சரி என்று மன்னன் கொடுத்த வாக்குறுதிதான் ராமாயணக் கதையின் பெரும் திருப்பத்திற்கு வித்தாகிறது! ராவண வதத்திற்கான விதை வெகுகாலம் முன்பே கைகேயி செலுத்திய தேரில் விதைக்கப்பட்டுவிட்டது! அதுபோலவே, மகாபாரதத்தில் கண்ணன் மனைவி சத்யபாமா தன் கணவனுக்காகத் தேரோட்டும் சம்பவம் வருகிறது. நரகாசுரவதத்தின்போது நிகழ்கிறது அந்தத் தேரோட்டம்.ராமாயணத்தை விடவும் ராமாயண காலத்திற்குப் பிறகு நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் மகாபாரதத்தில் தேர் இன்னும் அதிக முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. பகவான் கண்ணனே  அர்ஜுனனுக்கு தேரோட்டியாகப் பணிசெய்து `பார்த்த சாரதி’ என்ற நாமம் பெற்று, வாகன ஓட்டிகளுக்கெல்லாம் இன்றளவும் கெளரவம் சேர்த்து விட்டார். வாகனத்தை ஓட்டுவதென்பது கடவுள் செய்த தொழில் அல்லவா? நம் பாரத தேசத்தின் மிக முக்கியமான நீதி நூலாகிய பகவத் கீதை தேர்த்தட்டில்தான் கண்ணன் மூலம் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப் பட்டது. தேருக்கு அளிக்கப்பட்ட பெரும் கெளரவம் அது. கோயிலில் குடிகொண்ட தெய்வம், தேரில் குடியேறி கீதையை உபதேசம் செய்ததால் தேரே கோயிலான நிகழ்வு. மகாபாரதத்தின் முக்கியமான பாத்திரமான கொடைவள்ளல் கர்ணனை வளர்த்தவனே ஒரு தேரோட்டிதான். உண்மையில் ஷத்திரியனான கர்ணன் ஆயுள் முழுதும் தேரோட்டி மகனாகவே அறியப்பட்டு வாழ்ந்தவன். அதனால், விளைந்த வாழ்வியல் சிக்கல்களை அனுபவித்தவன்.கர்ணன் எய்த நாகாஸ்திரம் அர்ஜுனனை தாக்காதவாறு கிருஷ்ணன் தேரை நிலத்தில் அழுத்தினான். கர்ணனின் தேர்ச் சக்கரம் மண்ணில் இறங்கிய தருணத்தில் அவனது தேரோட்டியான சல்லியன் அவனைப் பழித்துப் பேசிவிட்டு இறங்கிச் சென்றுவிட்டான். இறுதியில் கர்ணன் தேர்ச்சக்கரத்தை உயர்த்திச் சரிசெய்ய முயன்றபோதுதான் கிருஷ்ணனின் கட்டளைக்குப் பணிந்து அவன்மேல் அம்பெய்து அவனைக் கொன்றான் அர்ஜுனன். இப்படி மகாபாரதத்தில் தேர்கள் போர் நெடுக ஓடிக் கொண்டே போரில் முக்கிய இடம்பிடிக்கின்றன. இறுதியில், பாண்டவர்களுக்கு வெற்றி கிட்டுகிறது. வெற்றி மதர்ப்பில் தேரை விட்டு இறங்காது கர்வத்தோடு தேரிலேயே வீற்றிருக்கிறான் அர்ஜுனன்.`போர் முடிந்தது, தேரை விட்டு இறங்கு’ என ஆணையிடுகிறான் கிருஷ்ணன். வெற்றி மமதை ஒருவரை என்ன பாடுபடுத்துகிறது! அதுவரை கிருஷ்ணனை வணங்கிய பக்தன். உயர்ந்த நீதிக் களஞ்சியமான கீதையைக் கிருஷ்ணனிடம் உபதேசமாகக் கேட்ட பாக்கியசாலியும் கூட. ஆனால், காதில் ஏறிய கீதை மனத்தில் ஏறவில்லை. தேர்ச் சக்கரம் மேல் கீழாகச் சுழலுவதுபோல, வாழ்க்கைப் போக்கும் மேலும் கீழுமாக மாறும் என்பதை மறந்தது அர்ஜுனனின் மனம். `கண்ணா! ஒரு தேரோட்டி தானே நீ? நீ சொல்லி மன்னனான நான் ஏன் தேரைவிட்டு இறங்க வேண்டும்?’ என்று அந்த வெற்றியை வாங்கிக் கொடுத்த கண்ணனிடமே கேட்டான் அர்ஜுனன். கிருஷ்ணனால், தான் பேரன்பு செலுத்தும் அர்ஜுனனை விட்டுக் கொடுக்க இயலுமா? அர்ஜுனனின் ஆணவத்தைக் கண்டு நகைத்தது கண்ணன் உள்ளம்.அர்ஜுனனையே சிறிதுநேரம் உற்றுப் பார்த்த கண்ணன், `உன்மேல் ஆணை. இறங்கு கீழே!’ எனக் கடுமையாக உத்தரவிட்டான். அந்தக் குரலின் சீற்றத்திற்கு அஞ்சி அர்ஜுனன், கீழிறங்கியதும் கண்ணனும் தேரைவிட்டுக் கீழே குதித்தான். மறுகணம் தேர் சடாரெனத் தானே தீப்பற்றி எரிந்து ஒரு கணத்தில் சாம்பலாயிற்று! அர்ஜுனன் திகைத்து நிற்கையில் கண்ணன் விளக்கம் தந்தான். `இதற்காகத் தான் நான் இறங்குவதற்கு முன் உன்னை இறங்கச் சொன்னேன். நான் தேர்த்தட்டில் வீற்றிருந்தும், அனுமன் உன் தேர்க் கொடியில் அமர்ந்திருந்தும் இந்தத் தேரைக் காத்துக் கொண்டிருந்தோம். நான் இறங்கியதும் அனுமனும் தாவிச் சென்றுவிட, தேரில் ஏற்கெனவே பாய்ந்திருந்த கடுமையான அஸ்திரங்கள் தங்கள் வேலையைக் காட்டிவிட்டன. தேர் பற்றி எரிந்துபோயிற்று. நான் இறங்கிய பின்னரும் நீ தேரில் வீற்றிருந்தால், நீ என்ன ஆகியிருப்பாய் என்று நினைத்துப்பார்! கண்ணனின் விளக்கத்தைக் கேட்ட அர்ஜுனன், விழிகளில் கண்ணீர் வழிந்தது. கண்ணனைக் கைகூப்பித் தொழுதான் அர்ஜுனன். உள்ளம் என்னும் தேரை ஓட்டும் சாரதியாக இறைவனை மனத்தில் நிலைநிறுத்திக் கொண்டால் காமம், குரோதம், ஆணவம் முதலிய நெருப்புகள் நம்மை எரிக்காது என்ற உண்மையைச் சொல்லும் உயர்ந்த கதை இது.சங்க காலத்திலேயே தமிழகத்தில் தேர்ப்படை உண்டு. யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளில் முக்கிய இடம்பிடிக்கும் படை அது. ஒரு படை என்றால் கட்டாயம் நூற்றுக்கணக்கான தேர்கள் அந்தப் படையில் இருந்திருக்க வேண்டும். அப்படியானால் சங்க காலத் தமிழகத்தின் தச்சுத் தொழில் வளர்ச்சி எண்ணிப் பார்க்கும் நம்மை பிரமிக்க வைக்கிறது. முல்லைக்குத் தேர் கொடுத்த பாரிவள்ளல் வரலாறும், தேர்ச்சக்கரத்தை ஏற்றித் தன் மகனைக் கொன்று கன்றை இழந்த தாய்ப் பசுவுக்கு நீதி வழங்கிய மனுநீதிச் சோழன் வரலாறும் தமிழர்களின் பெருமிதங்கள். புத்தர் வரலாற்றிலும் தேருக்கு முக்கிய இடம் உண்டு. சன்னா என்ற தேரோட்டி மூலம் முதல் முறையாக வெளியுலகத்தில் தேரில் வீதியுலா போகிறான் அரசிளங்குமரன் சித்தார்த்தன். பிணி, மூப்பு, சாக்காடு ஆகிய மூன்றையும் மனிதர்கள் தவிர்க்க இயலாது என்பதை நேரில் கண்டு புரிந்து கொள்கிறான்.சித்தார்த்தன் மனத்தில் ஞானத் தேடல் பிறக்கிறது. அன்றிரவே தன் மனைவி யசோதரையையும், மகன் ராகுலனையும் பிரிந்து மறுபடியும் நள்ளிரவில் தன் தேரிலேறி தேரோட்டி சன்னா தேரை ஓட்ட கானகம் வருகிறான். சன்னாவைத் திரும்ப அனுப்பி விட்டு கானகத்தின் உள்நடந்த சித்தார்த்தன் போதி மரத்தடியில் ஞானம் பெற்றுப் பின் புத்தராக மலர்கிறான். புத்தர் என்ற மெய்ஞ்ஞானியை உருவாக்கியதில் போதி மரத்திற்கு மட்டுமல்லாமல் தேருக்கும் பங்கிருக்கிறது என்ற உண்மையை உணரும்போது தேரின்மேல் நாம் கொள்ளும் மதிப்பு அதிகரிக்கிறது.நம் திரைப்பாடல்களிலும் அழகிய தேர்கள் ஆங்காங்கே ஓடுகின்றன. `தங்கரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே..’ என்ற கண்ணதாசன் பாடல் கலைக்கோயில் திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் பாலமுரளிகிருஷ்ணா, எஸ்.ஜானகி ஆகியோர் குரலில் ஓர் அழகிய தேரோட்டத்தை நம் மனத்தில் நடத்திக் காட்டுகிறது. சாதாரணத் தேர் அல்ல அது. `மரகதத் தோரணம் அசைந்தாட நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட’ ஊர்ந்து வரும் கவிதையால் நெய்யப்பட்ட தங்கத் தேர். `தேரேது சிலையேது திருநாள் ஏது?’, `தேருபாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே…’ என்றெல்லாம் தேரை மையமாக்கிப் பல திரைப்பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. `தேர்த் திருவிழா’ எனத் தலைப்பிலேயே தேரைக் கொண்ட திரைப்படமும் உண்டு.திருவள்ளுவருக்கென்று சென்னையில் நிறுவப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தில், ஓர் அழகிய கல்தேர் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறிடங்களில் அழகிய கல்தேர்கள் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கலை அற்புதங்களாய்க் காட்சி தருகின்றன. புராதனமான ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தேர் உண்டு. கோயில் தேர்களில் திருவாரூர்க் கோயில் தேர் மிக அழகானது என்பதால், `திருவாரூர்த் தேரழகு’ என்றே ஒரு சொற்றொடர் உருவாகிவிட்டது. பல திருத்தலங்களில் சிறிய அழகிய தங்கரதங்கள் உண்டு. பண்டிகைக் காலங்களில் தங்கரதத்தில் சுவாமி பவனி வருவதைக் காண்பதென்பது கண்கொள்ளாக் காட்சி.ஆலயங்களில், திருவிழாக் காலத்தில் தேர் ஓடும். அல்லாத நாட்களில் அந்தத் தேரை பத்திரமாக நிறுத்துமிடம் `தேரடி’ என்றே அழைக்கப் பட்டு வருகிறது. விசேஷ நாட்களில் தங்கள் இல்லவாயிலில் புள்ளிகளாலும், கோடுகளாலும் ஆன மிகப் பெரிய தேர்க் கோலத்தை வரைந்து பெண்கள் வீட்டை அழகுபடுத்துகிறார்கள். தேர் ஒற்றுமையின் அடையாளமும் கூட. தெருவில் தேர் ஊர்ந்து வரும்போது அதை வடம் பிடித்து இழுப்பவர்கள் ஜாதி பேதங்களைப் பார்ப்பதில்லை. எல்லாப் பிரிவுகளையும் கடந்த ஒற்றுமையின் அடையாளம் தேர். அதனால்தான் `ஊர்கூடித் தேரிழுப்போம்’ என்ற பழமொழியே உருவாகியுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன், வள்ளுவரால் உருவாக்கப் பட்ட திருக்குறள் என்ற தமிழ்த் தேர், தன் கருத்தின் வலிமையால் காலம் காலமாய் ஊர்ந்து இந்த நூற்றாண்டு வரை வந்து சேர்ந்திருக்கிறது.திருக்குறள் தேரில் பவனி வரும் உயர்ந்த நீதிக் கருத்துகளைக் கொண்டாடிப் பின்பற்றுவதன் மூலம், இன்றும் நம் வாழ்வில் எல்லா நலங்களையும் நாம் பெற முடியும்.(குறள் உரைக்கும்)திருப்பூர் கிருஷ்ணன்…

You may also like

Leave a Comment

thirteen + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi