Tuesday, June 11, 2024
Home » காவிரி டெல்டாவுக்கு வரும்போது தாய்மடியை தேடி வந்து தவழ்கின்ற குழந்தை உணர்வு ஏற்படுகிறது: திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

காவிரி டெல்டாவுக்கு வரும்போது தாய்மடியை தேடி வந்து தவழ்கின்ற குழந்தை உணர்வு ஏற்படுகிறது: திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

by kannappan

சென்னை: காவிரி டெல்டாவுக்கு வரும்போது தாய்மடியை தேடி வந்து தவழ்கின்ற குழந்தையின் உணர்வு ஏற்படுவதாக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதம்: “உழவர் ஓதை, மதகு ஓதை, உடைநீர் ஓதை தண்பதங்கொள் சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி” என்ற சிலப்பதிகார வரிகளுக்குச் சிறப்பான உரை எழுதிடும் வண்ணம், கரைபுரளும் காவிரி டெல்டா மாவட்டங்களில், ஓய்வில்லாத இரண்டு நாள் ஆய்வு சுற்றுப் பயணத்தை நிறைவு செய்தபின், நேற்று (ஜூன் 1) காலையில் தலைமைச் செயலகத்தில் அனைத்துத் துறை செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றேன். 14 துறைகளுடன் ஆய்வு செய்தேன். திமுகவின் மூத்த முன்னோடியும் சிந்தனையாளருமான திருச்சி செல்வேந்திரனின் நினைவு வந்தது. மாவட்டச் செயலாளரான அமைச்சர் கே.என்.நேருவிடம் சொல்லி, செல்வேந்திரன் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடல்நலனை விசாரித்தேன். 4 மணியளவில் திருச்சியிலிருந்து வேளாங்கண்ணிக்கு புறப்பட்டேன். பயண வழியில் முதலில் தஞ்சாவூரில் வரவேற்பு அளித்தனர். அப்போது, வா.வீரசேகரன் என்ற திமுக தோழர் என்னிடம் ஒரு காகிதத்தை கொடுத்தார். அது என்னவென்று பார்த்தபோதுதான், அது வெறும் காகிதமல்ல, அரிய ஆவணம் என்பது தெரிந்தது. அது என்னவென்றால், திருவாரூர் கமலாம்பிகா நகரக் கூட்டுறவுச் சங்கத்தில் நமது தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் தந்தையும் எனது தாத்தாவுமான முத்துவேலர் தனக்கிருந்த பங்குகளை, தன் வயதுமூப்பின் காரணமாக, நம் தலைவருக்கு மாற்றித் தரக்கோரிய ஆவணம் அது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு ஓராண்டுக்கு முன்பாக 1946ல், கூட்டுறவு வங்கியின் ஆவணத்தில் தாத்தா முத்துவேலரின் கையெழுத்தையும் தலைவரின் ஆங்கில எழுத்துகளில் அமைந்த கையெழுத்தையும் பார்த்தபோது பரவசமாக இருந்தது.தஞ்சை பீமனோடை யில் வடிகாலை தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டேன். பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் வந்திருந்தனர். குழந்தைகளிடம் சாக்லேட் கொடுத்து அவர்களைப் போலவே நானும் மகிழ்ந்தேன். மே 31 காலையில் 8 மணிக்கெல்லாம் நாகை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளையும், வேளாண் பணிகளையும் பார்வையிட புறப்பட்டோம்.  திருக்கடையூரில் ரஷ்யா சென்று மருத்துவம் படித்துச் சாதித்துள்ள விஜயலட்சுமியும், அவரது  தாயையும்நேரில் சந்தித்து எனது பாராட்டுகளை தெரிவித்து மகிழ்ந்தேன். மயிலாடுதுறையில் கண்ணில்பட்டு, நெஞ்சை ஈர்த்தது ‘தில்லையாடி’. அப்போது திமுக நிர்வாகி ஒருவர், “எதிர்ப்புறத்தில்தான் தலைவர் கலைஞர் கட்டிய மண்டபம் இருக்கிறது” என்றார். தென்னாப்பிரிக்காவில் உத்தமர் காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரகப் போராட்டத்திற்கு துணைநின்ற தமிழர்களில் மறக்க முடியாத மாதரசி தில்லையாடி வள்ளியம்மை. அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் தலைவர் கலைஞர் கட்டிய மண்டபம்தான் அது. அங்கிருந்து திருவாரூர் மாவட்டத்திற்குப் பயணம். நல்லாடை, பேரளம் ஆகிய இடங்களில் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டேன். பேரளம் ரயில்வே கிராஸிங்கைக் கடக்கும்போது என் சிறு வயது நினைவுகள் வட்டமிட்டன. பள்ளிக்கூட நாட்களில் அம்மாவின் ஊருக்கு வரும்போது, பூந்தோட்டம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கித்தான் மாட்டு வண்டியில் செல்வோம். தாய் பிறந்த மண்ணுக்கு வரும்போது என் தாயார் தயாளு அம்மாள் மனதில் எழும் மகிழ்ச்சியும் உறவினர்கள் காட்டும் அன்பும் நெஞ்சை விட்டு அகலாதவை.அதே பேரளத்தில்தான் பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகனான பரிமளத்திற்கும் பெண் எடுத்திருந்தனர். அதனால், தலைவர் கலைஞர் குடும்பத்தைப் போலவே பேரறிஞர் அண்ணா குடும்பத்திற்கும் பேரளத்துடன் தொடர்பு உண்டு. பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவுகள் எப்படி நெஞ்சை விட்டு நீங்காதோ அதுபோலவே சிறுவயது நினைவுகளும் அகலாது அலைமோதின. அவற்றை மீட்டெடுப்பதுபோல என்னுடைய மாமா தெட்சிணாமூர்த்தி 99 வயதிலும் ஆர்வத்துடன் வந்து வரவேற்றார். நான் திடுக்கிட்டு, “நீங்க ஏன் இந்த வயதில் சிரமப்படுறீங்க? நானே வீட்டுக்கு வந்திருப்பேனே!” என்றேன். திமுக பற்று மிகக் கொண்டவரான மாமா, “உன்னைப் பார்த்து வாழ்த்து சொல்லணும்னுதான் வந்தேன். ரொம்ப நல்லா நிர்வாகம் பண்ணிக்கிட்டிருக்க நீ” என்றபோது நெகிழ்ந்து விட்டேன்.திருவாரூரை நெருங்க நெருங்க வரவேற்பும் அதிகமானது. தமிழ் காக்கத் தளராது போராடிய நம் தலைவர் முதன்முதலில் தமிழ்க்கொடி ஏந்திப் போராடிய மண் அல்லவா! “அப்பா போலவே நீங்களும் மக்களைப் பார்த்ததும் காரை நிறுத்தி, நலம் விசாரிக்கிறீங்க” என்று மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள வீட்டிற்குச் சென்று சாப்பிட்ட பிறகு, உடனடியாக அருகிலுள்ள காட்டூரில் நம் தலைவரின் தாயாரும் என் பாட்டியுமான அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினேன். அந்த நினைவிடத்தின் அருகிலேயே நம் உயிர்நிகர் தலைவருக்கான அருங்காட்சியகம் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது. அந்த அருங்காட்சியகத்தையும், அதன் பின்பகுதியில் அமைக்கப்படும் பெரிய அரங்கத்தையும் நேரில் விளக்கினார் எ.வ.வேலு.திருவாரூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கும் மக்கள் மனுக்களுடன் காத்திருந்தனர். நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் நம்பிக்கையுடன் வந்திருந்தனர். முதலமைச்சரிடம் மனு கொடுத்தால் கவனிக்கப்படும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற மக்களின் எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது. அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகிற வகையில்தான், காவிரிப் படுகை மாவட்டங்களில் ஆய்வுப் பணியை முடித்துத் திரும்பிய வேகத்தில் அடுத்த நாளே தலைமைச் செயலகத்தில் துறை வாரியான இருநாள் ஆய்வுப் பணிகள் வேகம் பெற்றன.தமிழ்நாட்டின் முதலமைச்சராக ‘யாதும் ஊரே’ என்ற பொறுப்புணர்வுடன் அனைத்து ஊர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டாலும், காவிரி டெல்டாவுக்கு வரும்போது தாய்மடியைத் தேடி வந்து தவழ்கின்ற குழந்தை உணர்வு ஏற்படுகிறது. அதிலும் திருவாரூர் என்கிறபோது தலைவர் கலைஞரின் காலடிச் சுவடுகளைக் காண்பது போன்ற உணர்வில் மெய்சிலிர்ப்பது வழக்கமாக இருக்கிறது. அது, நம் ஆருயிர்த் தலைவர் போல என்றும் ஓயாது உழைக்க வேண்டும் என்ற தளராத ஊக்கத்தைத் தருகிறது. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று பாடிய புலவரே கணியன் பூங்குன்றன் என்று தன் பெயருடன், தனது ஊரான பூங்குன்றத்தைச் சேர்த்துக் கொண்டார் என்று சொல்வார் முத்தமிழறிஞர் கலைஞர். காவிரியும் அதன் கிளை ஆறுகளும் பாயும் இடங்களுக்குச் செல்லும்போது அதுபோன்ற உணர்வுதான் எனக்கும். என்ன இருந்தாலும் அடிப்படையில் நான் டெல்டாகாரனாயிற்றே. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. திருவாரூர் என்கிறபோது தலைவர் கலைஞரின் காலடிச் சுவடுகளைக் காண்பது போன்ற உணர்வில் மெய்சிலிர்ப்பது வழக்கமாக இருக்கிறது. அது, நம் ஆருயிர்த் தலைவர் போல என்றும் ஓயாது உழைக்க வேண்டும் என்ற தளராத ஊக்கத்தைத் தருகிறது….

You may also like

Leave a Comment

10 + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi