Monday, June 17, 2024
Home » கருப்பு ராணி வெள்ளை ராஜா சரங்க ஆட்டம்

கருப்பு ராணி வெள்ளை ராஜா சரங்க ஆட்டம்

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழி அகன்று விரிந்த சதுரங்க கட்டங்களுக்கு நடுவில் மீசை முறுக்கி மிடுக்காய் நிற்கும் வெள்ளை நிற மன்னனை, தன் கூரிய வாள் கொண்டு ‘செக்’ வைத்து நிறுத்துகிறார் எதிரணியின் கருப்பு ராணி. பின்னணியில் போர்க்கள இசை அதிர்கிறது. வசனங்கள் ஏதுமற்ற அந்தக் காணொலி 3 நிமிடங்கள் 40 விநாடிகளைக் கடந்து நம் மனங்களைக்  கொள்ளை கொள்கிறது.சென்னையில் நடைபெற்று வரும் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் “சதுரங்க நடன சித்தரிப்பு” (Chaturangam A Dance Depiction) என்ற தலைப்பில் தயாரித்து வெளியிடப்பட்ட இந்த காணொலி, தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களிலும் பகிரப்பட்டதுடன், சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரின் கவனம் பெற்றது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட நிர்வாக ஆட்சியர் கவிதா ராமுவிடம் பேசியபோது மகிழ்ச்சியோடு தன் அனுபவங்களைப் பகிர்ந்தார்.முழுக்க முழுக்க இது புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பு. நாங்கள் இதில் டீமாகவே களம் இறங்கினோம். அடிப்படையில் நான் க்ளாஸிக்கல் டான்ஸர் என்பது இதில் ப்ளஸ் பாயிண்ட். நடனத்தின் மீதிருந்த ஆர்வத்தில், நம்முடைய பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் ஒன்றிணைத்து, செஸ் போர்டில் உள்ள கருப்பு வெள்ளை காய்களுக்கு, கதாபாத்திரங்களாகவே உயிர்கொடுத்து, யுத்த நடனம் ஒன்றை உருவாக்க நினைத்தோம். இந்த சிந்தனைக்கு உயிர் கொடுக்க பலர் கை கோர்த்தனர். செஸ் விளையாட்டின் கதாபாத்திரங்கள் வழியே ஒரு நடன யுத்தத்தை நிகழ்த்தி, அதில் கருப்பு நிற வீரர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என முடிவானது. இந்த வெற்றியில் ஒரு முக்கியத்துவத்தையும் வைத்தோம். அதாவது கருப்பு ராணி வெள்ளை ராஜாவுக்கு தன் கூர்முனை வாள் கொண்டு செக் வைப்பதே அது. மேலும் வெள்ளை நிறத்தின் மீதான கூடுதல் கவனத்தை, ஈர்ப்பினை, தனது ஆளுமையால், திறமையால் கருப்பு நிற அரசி அடக்கி மன்னனை சிறைப்படுத்துவதே இதில் திருப்பு முனை. அத்துடன் கருப்பு நிறம் மீதான தாழ்வு மனப்பான்மையும் தகர்க்கப்படுகிறது.  இரு படைக்கும் நடக்கும் யுத்தத்தில் கருப்பு படையே இறுதியில் வெல்கிறது. வெள்ளைப் படை சரணடைகிறது.இந்த யுத்த நடனத்தில் கைகோர்த்த பலரும் கலைத்துறை சார்ந்த என் நண்பர்களே என்ற புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு. இதில் தீர்க்கமான தன் பார்வையால், கூரிய வாள் ஏந்தி கருப்பு ராணியாக வந்து கவனம் பெற்றவர் பிரியதர்ஷினி. இவர் புதுக்கோட்டை மாவட்ட இசை பள்ளியின் முன்னாள் நாட்டிய மாணவி. மார்ச் 8 மகளிர் தினத்தில் நடனம் ஆட வந்தவரின் நடன அசைவுகள் என்னைப் பெரிதும் கவர்ந்தது. வியப்பை முகத்தில் வெளிப்படுத்தி வெள்ளை நிற ராணியாய் மிடுக்காய் வந்து நின்றவர் சுரம் சஹானா. இவர் அடையார் மியூசிக் கல்லூரியின் முன்னாள் மாணவி. என்னோடு இணைந்து க்ளாசிக்கல் நடனத்திலும்  இருப்பவர்.மற்ற நடனக் கலைஞர்களையும் வெவ்வேறு குழுவில் இருந்து எடுத்துக்கொண்டோம். தெருக்கூத்துக் கலைஞர்களை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்தும், சிலம்பக் கலைஞர்களை திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தும், பொய்க்கால் குதிரை ஆட்டக் கலைஞர்களை எம்.பி.ஆர். கலைக்குழுவில் இருந்தும், மல்யுத்த வீரர்களுக்கு மாடல்களையும் பயன்படுத்தினோம்.போர்க்களத்தை கண் முன் நிறுத்தி, செஸ் காயின் நகர்வுகளை பத்தே மூவ்களில் மிக அழகாய் கொண்டுவந்து கோரியோகிராஃப் செய்தவர் நடன இயக்குநர் நரேந்திர குமார். இயக்கம் மற்றும் கிரியேட்டிவ் விஜய் ராஜ். கேமரா இளையராஜா. போர்க்களப் பின்னணி இசையில் பெரிதும் ஈர்த்தவர் கே.கே. செந்தில் பிரசாத். இவர் தனிப்பட்ட முறையில் க்ளாசிக் நடனங்களுக்கு இசை அமைப்பவர். புதுக்கோட்டை நிர்வாகத்தின்  ‘செஸ் நடன சித்தரிப்பு’ காணொளியினைப் பார்த்த பலரும் தங்கள் பாராட்டுக்களை சமூக வலைத்தளம் வழியே பதிவிட்டு வருகிறார்கள். தமிழக முதல்வரும் எங்களை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அழிந்து வரும் நமது பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளையும், அதைத் தூக்கி நிறுத்தும் கலைஞர்களையும் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டின் வழியே பல்வேறு தரப்பு மக்களிடத்தில் கொண்டு சேர்த்ததில் மனசுக்கு மகிழ்ச்சியே. நிறைவாகவும் இருக்கு என்றவாறு விடைபெற்றார்.கவிதா ராமு, ஐ.ஏ.எஸ்.ஒருபுறம் பரபரப்பு மிக்க அரசு உயர் அதிகாரி. மறுபுறம் நடன நிகழ்ச்சி என பம்பரமாய் சுழல்பவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு. 600க்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை இதுவரை இவர் மேடை ஏற்றியுள்ளார். நடனம் வழியே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். 2019ல் சீன அதிபர் ஜி ஜின் பிங் மாமல்லபுரம் வருகை தந்தபோது சென்னை விமானநிலைய ஓடுபாதையின் இருபக்கமும் 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் ஏற்பாடு செய்து நிறுத்தியவர். அவர்கள் தங்கள் இசையையும் நடனத்தையும் வெளிப்படுத்தி சீன அதிபரை உற்சாகமாய் வரவேற்றனர். இதில் மயிலாட்டம், பறையாட்டம், கரகாட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம், கொம்பு வாத்தியம் என பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தது.மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வெளியில் தொடங்கி கிண்டி வரை 3500க்கும் மேற்பட்ட கிராமியக் கலைஞர்கள் சாலையோரம் நின்று மேளதாளம் முழங்க வாத்தியங்களை இசைத்து நடனமாடி சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். இந்த ஏற்பாடுகளை முன்நின்று செய்து` சீன அதிபரை மகிழ்வித்து அசத்தியவர்தான் இந்த கவிதா ராமு ஐ.ஏ.எஸ். பாரம்பரியம் மிக்க நமது கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்து நெகிழ்ந்து போனார் சீன அதிபர். இது குறித்து நமது பிரதமரிடத்திலும் நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்படங்கள்: ஜி.சிவக்குமார்

You may also like

Leave a Comment

five × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi