Saturday, June 1, 2024
Home » ஓம் தத் சத்யம்

ஓம் தத் சத்யம்

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மீகம்
அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்

நின்னை…உமையம்மையை பற்றி சாஸ்திரங்கள் எட்டு விதமான குறிப்புரைகளை வழங்கியுள்ளது. அதை அறிந்த பிறகே இந்த வார்த்தைக்கு பொருள் கூற முடியும். அதனால் அதை முதலில் காண்போம். அன்பு, முயற்சி, தொடர்ச்சி, இடைவிடாத பண்பு, பொறுமை, எதிர்பார்ப்பின்மை, நம்பிக்கை, அருள் இவைகளின் ஒருங்கிணைந்த தன்மையால் உருவாகும் அனுபவப் பண்பைக் கொண்டே உமையம்மையை அறிய முடியும். அவ்வாறு அல்லாது பிறவற்றால் அறிதல் என்பது உமையம்மையின் ஒரு பகுதியை மட்டுமே அறிந்ததாக ஆகுமே அன்றி முழுமையாக அறிந்ததாக ஆகாது என்ற பண்பையே “நின்னை” என்றார்.உள்ள வண்ணம் “ஏகம் சத்” என்கிறது வேதம். இதையே ‘ஒன்றாய் அரும்பி’ (56) என்கிறார். “விப்ரா: பஹூதா வதந்தி” கற்றோர்கள் அதை பலவிதமாக உள்ளது என்கிறார்கள் இதையே ‘பலவாய் விரிந்து’ (56) என்கிறார். “தத் சர்வம்” இதுவே அனைத்தும் (உலகனைத்தும்) என்கிறது வேதம். இவ்வுலகெங்குமாய் நின்றார். “ப்ரோ தஞ்ச சர்வம் சதா” என்கிறது   ஆகமம். அனைத்தையும் தாண்டி குறுக்கும் நெடுக்கு மாய், எங்குமாய், எப்பொழுதுமாய் இருக்கின்றாய். இதையே உமையம்மையானவள் ‘அனைத்தையும் நீங்கி நிற்பாள்’ (56) என்றார் பட்டர். “தம் சர்வ ஜனாந்தரஸ்தம்” – என்கிறது வேதம். பிறந்த உடல் அனைத்தின் உள்ளேயும் உமையம்மை இருக்கிறாள்.“ஓம் தத்சத்யம்” அதுவே என்றும் அழிவில்லாததாய், மாற்றமில்லாததாய், குறைவில்லாததாய், இருப்பதையே பட்டர் ‘பொன்றாது’ (56) என்று குறிப்பிடுகிறார். நின்று புரிகின்ற வா என்ற சொல்லால், நம் உடலுக்கு வெளியே உள்ள உடலுக்கு ஹிதமான மெய், வாய், கண், மூக்கு, செவிகளால் ஏற்று, அனுபவிக்கத்தக்க உணவு, நீர், காற்று, வெப்பம் ஒளியாய் இருந்து நமக்கு தன் உணர்வை ஏற்படுத்துகிற பண்பை உடைய நிலம், நீர், காற்று, தீ, ஆகாசமாய், அதன் இணைவுகளால் தோன்றிய பொருள்களால் நம்மால் புசிக்கப்பட்டு மனதில் நினைவுகளாகவும், உடலில் ரத்தம் முதலிய பொருள்களாகவும், இயக்கமாகவும், அன்பு பாசம் முதலிய உணர்வாகவும், தீயதை, நன்மைகளை பகுத்தறியும் அறிவாகவும் உமையம்மையே இருக்கிறாள். இதையே  “ப்ராண சக்தி பராண்ண” ப்ராண ப்ரதிஷ்டை என்கின்ற ஆகம கலைச் சொல்லையே ‘நின்று புரிகின்ற வா’ (56) என்கிறார், பட்டர்.வேத, ஆகம, சித்தாந்த வாக்கியங்களை குரு உபதேசத்தின் வழி காதால் கேட்டு (ஸ்ரவன) மனதால் சிந்தித்து (மனன) உடலால் பின்பற்றுவதனால் (நிதித்யாசன) தோன்றும் அனுபவத்தை அடைவது (அனுசந்தானம்). மேற்கண்ட எட்டு உண்மைகளையும் அறிந்து உணர்ந்து அனுபவிக்க வேண்டிய உமையம்மையை பற்றிய உண்மையையே “நின்னை உள்ள வண்ணம்” என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். அதையே வேதம் “ய ஏவம் வேதா’’ என்கின்றது. ‘இப்பொருள் அறிவார்’ (56) என்கிறார் பட்டர். ஒன்றானதும், பலவாக தோன்றுவதும், உலக பொருள்களாகவும், அறிவிற்கு எட்டாத இயல்பைக் கொண்டவளாகவும், அனுபத்தினாலேயும், அவள் அருளினாலேயும் அறியப் படுபவளாயும், குறைவின்றி அழியாது நிற்கும் உமையம்மையினுடைய பண்பையே, வேதாகம சித்தாந்தக் கருத்தையே “நின்னை உள்ள வண்ணம்” என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்.பேயேன் அறியும் அறிவுதந்தாய்..அறிவு சாஸ்திரத்தை பொறுத்தவரை மானுடர்களுக்கு பத்து விதமாகும். இதை கண்டறிதல், கேட்டறிதல், உண்டறிதல், நுகர்ந்தறிதல், தொட்டறிதல், இவ்ஐந்தின் நினைவுப் பதிவறிதல், பயிற்சி அறிதல், பட்டறிதல், சுட்டறிதல், சூழல்அறிதல் (கவனிப்பார் அறிவது) இப்படிப்பட்ட எந்த அறிதல் முயற்சியினாலும் அறிய முடியாதவள் உமையம்மை என்பதை மிக நன்றாய் நமக்கு அறிவிக்கிறார். ‘பாலினும் சொல் இனியாய்’ (60) ‘கண் களிக்கும்படி கண்டுகொண்டேன்’ (70) ‘மெய்ப்புளகம் அரும்பி’ (94) ‘உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே’ (33) ‘பண்ணளிக்கும் சொல்’ (15) என்று புலன்களினாலாலும் மனதினாலும் ‘ஆனந்தமாய் என் அறிவாய்’ (11) என்று பயிற்சியாலும் ‘சுருதிகளின் பனணயும்’ (2) என்று பிறர் சுட்டிகாட்டிய வழியிலும், ‘பரமாகம பத்ததியே’ (6) என்று பட்டறிவினாலும் உமையம்மையை பற்றி பல்வேறு விதமாக அறிய முயன்று தோற்றிருக்கிறார். கடைசியாக இவர் முயற்சியை கண்டு உமையம்மை தன்னை தானே அறிவித்து இருக்கிறாள்.அதன்பிறகே ஐயம், திரிபு, குற்றம், நீங்கி, உமையம்மையை பற்றி அவள் அருளினாலே அறிவிக்கப்பட்டு, அதன்வழி அறிந்த பிறகே உண்மைத் தன்மையானது அறியப்பட்டது என்பதை நமக்கு சூட்டவே “அறியும் அறிவு தந்தாய்” என்கிறார். உலகியல் சார்ந்து தான் பெற்ற அனுபவத்தின் வழிதான் உமையம்மையைப் பற்றி தவறாக அறிந்துகொண்ட அறிவைச் சூட்டவே “பேயேன்” என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். தான் பெற்ற அனுபவ அறிவை தவறு என்றும், உமையம்மை அறிவித்த வழி அறிவதையே மெய்யான அறிவு என்றும் நமக்கு வேறுபடுத்தி தெளிவாகக் காட்டி “பேயேன் அறியும் அறிவுதந்தாய்” என்றார்.என்ன பேறு பெற்றேன்உமையம்மையே வந்து அறிவிப்பது உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவாக நடக்காத ஒன்றாக உள்ளது. தன்னை குறித்து உமையம்மை கருணையுடன் அறிவித்தாள் என்றால் அதை தனக்கு கிடைத்த சிறப்பாகவே கருதுகிறார். அதனால்தான் “என்ன பேறு பெற்றேன்” என்று உயர்வாக குறிப்பிடுகிறார். அதே சமயம் அபிராமி அம்மையானவள் தனது அன்பின் காரணமாக தன் முன் தோன்றி காட்சி தந்தும், தன்னை அறிவித்தும், தான் உமையம்மையை அறிந்து உணர்ந்து அறியத் தவறியதை “என்ன பேறு பெற்றேன்” என்று தம் இழிவையும் இருபொருள்பட இணைத்து ஒரே சொல்லால் குறிப்பிடுகிறார்.உபாசனை நெறியில் சில பேர் நன்கு பழகி இருந்தாலும், பல நூல்களை கற்றதனால் பெற்ற  ஞானமிருந்தாலும், அவர்கள் விரும்பிய சில பொருட்களை, விரும்பியவாறு அடைய இயலாமல், சில அருட்காட்சிகளை மட்டுமே அடைவர். அந்த காட்சியானது உபாசகனுக்கு உமையம்மை இருக்கிறாள் என்ற நம்பிக்கையை ஊட்டுமே அன்றி செல்வத்தையோ, புகழையோ, விருப்பத்தையோ நிறைவு செய்யாது, அப்போது ஒரு வெறுப்பும், சலிப்பும் ஏற்படும் இது எல்லா உபாசகனுக்கும் ஏற்படும் இடையூறு, அந்த நிலையையும் அபிராமி பட்டர் அனுபவப்பட்டு இருக்கிறார். அந்த அனுபவத்தையே “என்ன பேறு பெற்றேன்” என்றும் இழிவாக பேசுகிறார். என்பதை பதிகத்தின் வழி நின்று,“பாச பந்தத்திடை மனங் கலங்கித்தினம் பலவழியும் எண்ணி யெண்ணிப், பழிபாவம் இன்ன தென்று அறியாமல் மாயப்ர  பஞ்ச வாழ்வு உண்மை என்றே  ஆசை மேலிட்டு வீணாக நாய் போல் திரிந்து அலைவதல்லாமல்’’வேறு எந்த பயனையும் அடையாத நிலையையும் இழிவு, சிறப்பு, சலிப்பு என்ற உணர்வுடன் மூன்று நிலையிலும் “என்ன பேறு பெற்றேன்” என்கிறார். இதை நுட்பமாக அறிந்து உணர்ந்து அறிய வேண்டும்.தாயே மலைமகளேதாயாக வணங்குகிறபோது தாய்போல் கண்காணித்து காத்து பக்தர்களின் மீது அன்பு கொண்டவளாக இருக்கிறாள் உமையம்மை. ஒரு தாயானவள் தன் மகன் எப்படியிருக்கின்றானோ, அப்படியே ஏற்று அன்பு செய்பவளாயிருக்கிறாள். நல்லவனாக இருந்தாலும் தீயவனாக இருந்தாலும் அவள் செலுத்தும் அன்பில் ஒரு சிறிதும்  மாறுபாடில்லை. எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துகிறாள். தன் மகன் தன்னை நேசித்த போதும் துன்புறுத்தும் போதும் தாயின் அன்பில் எந்தவிதமான மாறுதலுமில்லை. தன் மகனுக்கு தானே முன்வந்து உதவி செய்கிறாள். மகன் மீது அக்கறை கொள்கிறாள். எந்த நிலையிலும் அடைக்கலம் தருபவளாக இருக்கிறாள்.தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போது தன்னையும் மகனையும் ஒன்றாகவே கருதுகிறாள். பாலை தன் மகனுக்கு உணவாக கொடுக்கும்போது மகனுடைய உணவாக உடனாக இருக்கிறாள். மகன் நல்ல நிலையில் வரும்போது வேறாகயிருந்து ஆசி கூறுகிறாள். இவ்வனைத்து பண்பையும் அபிராமி பட்டர் தன் தாயினிடத்து இயல்பாக இருப்பதை உமையம்மையினிடத்திலும் பக்தியிலும் எதிர்பார்க்கின்றார். சைவ உபாசகர்கள் இறைவனை தகப்பனாக, தோழனாக, இறைவனுக்கு அடிமையாகவும் தங்களை கருதி இறைவன் மீது அன்பு செலுத்துவார்கள். அதுபோல, சாக்த உபாசகர்கள் இறைவியைத் தாயாகவே கருதி வழிபடுவார்கள். இதையே பெற்ற தாயும் என்பதனால் நன்கு அறியலாம். (மாத்ருபாவம்) தாயாக கருதி அன்புசெய்வது உமையம்மையின் அருளை விரைவாக பெறுவதற்கும் உபாசகன் செய்யும் சிறுசிறு தவறுகளை மன்னிப்பதற்கும், தான் என்ன செய்ய வேண்டும் என்பதை உமையம்மையை முன்நின்று தாய்போல் அறிவுறுத்தி தன்னை விளங்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் உபாசனையில் இடையில் தடைபடாமல் இருப்பதற்கும் இந்த மாத்ரு பாவம் சிறந்தது என்கின்றார்கள். இதை மனதில்கொண்டே மாதா என்றே முதலில் அழைக்கிறது சகஸ்ரநாமம். இவ்வனைத்தையும் மனதில் கொண்டே “தாயே” என்கின்றார் பட்டர். மலை யாகத்திற்கான அனைத்தையும் வழங்கும் பண்புடையது யாகம். இறைவியின் அருளை அடைவிப்பது என்பதையே “மலைமகளே” என்றார்.செங்கண்மால் திரு தங்கச்சியேதிருவீழி மிழலையில் திருமால் சக்கரம் வேண்டி சிவபெருமானை குறித்து சிவ சகஸ்ரநாமம் சொல்லி, தினந்தோறும் ஆயிரம் தாமரை மலர்களைக்கொண்டு ஆராதனை செய்தார். சிவபெருமான் அருள் செய்ய எண்ணி ஆயிரம் தாமரை மலரில் ஒன்றை மட்டும் மறைத்தருளினார். மஹாவிஷ்ணுவோ ஒரு மலர் குறைந்ததை எண்ணி வருந்தினார். சிவந்த தன் கண்களையே மலராக சாற்றினார். சிவபெருமான் பூசனையில் மகிழ்ந்து இழந்த கண்ணை முன்னைவிட அழகாக செய்து அவருக்கு வேண்டிய சக்கரத்தையும் அளித்தருளினார். அந்த சிவந்த கண்களையே இங்கே அபிராமி பட்டர் செங்கண்மாலாகிய சிவபெருமானை பூசித்த மஹாவிஷ்ணுவின் சகோதரியாக உமையம்மையை குறிப்பிடுகின்றார். அந்த கண்ணின் சிறப்பு மகா விஷ்ணுவிற்கு பூசனையினால் அவர் விரும்பிய பலனை அளித்து தெய்வநிலைக்கு உயர்த்தியது. அத்தகைய கண்ணைப் பெற்ற வரின் தங்கையாக தியானம் செய்தால், சிவனைக் காணும் கண்ணும், சிவன் அருளால் அளிக்கப்பட்ட ஞானக்கண்ணும் தனக்கு அருள உமையம்மையை வேண்டுகிறார். அதனால் “செங்கண்மால் திரு தங்கச்சி” என்கின்றார்.(முடிவாக) அந்தமாக“நாயேனையும்” என்பதனால் ஆன்மா விற்குரிய வழிபாட்டுப் பண்பையும்.“இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து” என்பதால் உமையம்மையே வந்து அருளினாலன்றி அருளை பெற முடியாது என்றும்.“நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய்” என்பதால் எந்த தகுதியில்லாமலேயே உமையம்மையின் கருணையால் அருளைத் தான் அனுபவித்ததையும்.“நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய்” என்பதால் நாம் கடவுளைப் பற்றி பெற்ற அறிவு அறிவல்ல. கடவுளின் அருளாலேயே பெறப்பட்ட அறிவே மெய்யறிவு எனவும்.“என்ன பேறு பெற்றேன்” என்பதால் இழிவு, சிறப்பு, சலிப்பு என்று உணர்வின் வழியும்.“தாயே” என்பதனால் இறைவியே முன்வந்து அருளும் கருணையையும். “மலைமகளே” என்பதால் யாகத்தையும் பூசனையையும். “செங்கண்மால் திரு தங்கச்சியே” என்பதனால் பூசை செய்வதற்கு உண்டான மன உறுதியையும் தெரிவித்து உபாசனைக்கு உரிய பண்புகளை எடுத்து இயம்புகிறார். இந்தப் பாடலை  அடியொற்றி அம்மையின் அருளை அடைய முயல்வோம்.தங்கச் சிலைகொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து மதவெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன், மெய் அடையக்கொங்கைக் குரும்பைக் குறியிட்டநாயகி, கோகனகச்செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதேஅந்தாதியின் பாடல் எண் 62முதலாக (ஆதியாக)இப்பாடலானது நான்கு திருவிளையாடல் களைப் பற்றி விளக்கமாக குறிப்பிடுகிறது. அந்த திருவிளையாடல்களை, அதாவது வரலாறுகளை விளக்கமாக அறிந்தால் அன்றி இப்பாடலானது  முழுவதும் விளங்கிக் கொள்ளப்பட்டதாக ஆகாது. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தலத்தில் நிகழ்ந்த இறையருட் செயலாகும். இதை தற்காலத்தில் உள்ள ஊடகங்களின் வழி செய்தித்தாள், இதழ்கள், தொலைபேசி, கைபேசி மற்றும் இணையத்தின் வழி இருந்த இடத்தில் இருந்தபடியே உணர்ந்து கொள்வது போல், அபிராமிபட்டர் காலத்தில் உணர்வது சாத்தியமில்லை. திருவதிகை, வழுவூர், காஞ்சிபுரம், கைலாசம், போன்ற வெவ்வேறு தலங்களில் நிகழ்ந்த உமையம்மையின் அருட்செயலை பட்டர் திருக்கடையூரில் உள்ள இறைவியின் சந்நதியின் முன் ஒரே இடத்தில் நின்று பாடுகிறார். இது உமையம்மையின் அருட் சக்தியால் மட்டுமே நிகழக்கூடியது, அதை ஒவ்வொன்றாய் இனி காண்போம்.தங்கச்சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து சிவபெருமான் மேருமலையை வில்லாக வளைத்து மூன்று ஊர்களின் வடிவான அசுரர்களை அழித்ததை இங்கு குறிப்பிடுகிறார் பட்டர். யார் அந்த அசுரர், எப்பொழுது எப்படி, ஏன் என்பதை இங்கே சிவ மஹா புராணம் விளக்குகிறது. அதை சற்று விரிவாய் அடுத்த இதழில் காண்போம்.முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

You may also like

Leave a Comment

five × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi