Saturday, June 1, 2024
Home » எனது திராவிட மாடல் ஆட்சியின் மையக் கொள்கை; மனிதநேயமும் சமூகநீதியும்தான்: கனடாவில் நடைபெற்ற சமூகநீதி மாநாட்டில் முதல்வர் பேச்சு

எனது திராவிட மாடல் ஆட்சியின் மையக் கொள்கை; மனிதநேயமும் சமூகநீதியும்தான்: கனடாவில் நடைபெற்ற சமூகநீதி மாநாட்டில் முதல்வர் பேச்சு

by kannappan

சென்னை: எனது திராவிட மாடல் ஆட்சியின் மையக் கொள்கை என்பது மனிதநேயமும் சமூகநீதியும்தான் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கனடாவில் நடைபெற்ற மூன்றாவது பன்னாட்டு மனிதநேயச் சமூகநீதி மாநாட்டில் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கனடாவில் நடைபெற்ற மூன்றாவது பன்னாட்டு மனிதநேயச் சமூகநீதி மாநாட்டில் ஆற்றிய உரை: இதுபோன்ற மாநாடுகள் தொடர்ச்சியாக நடந்தால் உலகம் முழுவதும் பெரியார் கொண்டாடப்படுவார் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை ‘தமிழ் மரபுத் திங்கள்’ என்று அறிவித்த ஒரே நாடு, கனடா. அத்தகைய நாட்டில், இந்த மாநாடு நடப்பது மிகமிக பொருத்தமானது. தமிழர்கள் அதிகளவில் வாழும் அயல்நாடுகளில் ஒன்றாக கனடா இருக்கிறது.தைப்பொங்கல் வாழ்த்துகளைச் சொல்லி மகிழ்வித்தவர் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. பல்வேறு இன, மத மக்கள் வாழ சிறப்பான நாடாக கனடா உருவாகி வருவதாக அவர் சொல்லி இருந்தார். தமிழ் மரபுத் திங்கள் – மசோதா கனடா நாடாளுமன்றத்தில் 2017ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. தமிழுக்கும் தமிழர்க்கும் இத்தகைய பெருமையைச் சேர்த்த கனடா நாட்டின் பிரதமருக்கு இதற்கு காரணமான கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களையும் – கனடா தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.தூரங்களால் நாம் பிரிந்திருந்தாலும், தமிழ் உணர்வால் – சுயமரியாதை உணர்வால் – சமத்துவ உணர்வால் – சமூகநீதி உணர்வால் – மனிதநேய உணர்வால் நாம் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்பதன் அடையாளமாக, காணொலி வாயிலாக உங்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கிறேன். நம்மை ஒளி இணைத்துக் கொண்டு இருக்கிறது என்பதைவிட, நம்மைப் பெரியாரின் ஒளி இணைத்துக் கொண்டு இருக்கிறது  என்றுதான் சொல்ல வேண்டும்.இந்த மாநாடு மனிதநேய – சமூகநீதி மாநாடாக கூட்டப்பட்டுள்ளது. மனிதநேயத்தின் அடிப்படையே சமூகநீதிதான். சமூகநீதிக் கருத்தியலே மனிதநேயத்தின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய மனிதநேய – சமூகநீதி மாநாட்டில், சமூகநீதி மண்ணில் இருந்தபடியே நான் கலந்து கொள்கிறேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – என்று சொன்ன திருவள்ளுவரின் மண்ணில் இருந்து பேசுகிறேன்.‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று உயிர்க்குரலாக ஒலித்த வள்ளலாரின் மண்ணில் இருந்து பேசுகிறேன். சமூகநீதியே சமநீதி என்று முழங்கிய தந்தை பெரியாரின் மண்ணில் இருந்து பேசுகிறேன்.அனைத்து வகுப்புக்கும் அனைத்து வாய்ப்புகளும் என்று 100 ஆண்டுகளுக்கு முன் சட்டம் போட்ட நீதிக்கட்சி ஆட்சி அமைத்த மண்ணில் இருந்து பேசுகிறேன்.இவற்றின் நீட்சியாக ‘திராவிட மாடல்’ ஆட்சி நடந்து கொண்டு இருக்கும் தமிழ்நாட்டில் இருந்து நான் பேசுகிறேன்.வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – என்று போற்றப்படுபவர் வான்புகழ் வள்ளுவர். தமிழ்நாட்டில் பிறந்து – தமிழில் திருக்குறளைத் தீட்டி இருந்தாலும் – அவரின் குறள்கள் – இன்று உலகில் 125-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகப் பொதுமறையாக உயர்ந்து நிற்கிறது.அதேபோல், தமிழ்நாட்டில் பிறந்து – தமிழில் எழுதியும் பேசியும் பரப்புரை செய்தாலும் இன்றைய நாள் உலகச் சிந்தனையாளராகப் போற்றப்படுகிறார் தந்தை பெரியார். அவரது நூல்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் உலகின் 21 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. உலகளாவிய சமூகநீதியைப் பேசியவர்கள் தான் திருவள்ளுவரும் – தந்தை பெரியாரும்.இதனை இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த – பல்வேறு மொழிகள் பேசும் சிந்தனையாளர்களாகிய நீங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். திருவள்ளுவரின் குறளையும் – தந்தை பெரியாரின் சிந்தனைகளையும் – உலகளாவிய அளவில் கொண்டு செல்வதன் மூலமாக மனிதநேய உலகத்தை – சமூகநீதி உலகத்தை – சமநீதிஉலகத்தை – சமத்துவ உலகத்தை நாம் உருவாக்க முடியும். பெரியார் இன்று உலகமயமாகி வருகிறார் என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். பெருமை அடைகிறேன்.அதேபோல், உலகத்தை உணர்ந்தவராக – எதிர்கால உலகம் எப்படி அமையும் என்பதைக் கணிக்கக் கூடிய தொலைநோக்குச் சிந்தனையாளராக பெரியார் இருந்தார். உலக நாடுகளின் பண்பாட்டை இந்தியாவில் விதைக்க விரும்பிய உலகத் தலைவர்தான் தந்தை பெரியார். சாக்ரடீஸ், இங்கர்சால், மார்க்ஸ், லெனின், பெட்ரண்ட் ரசல் ஆகியோர் உலகப் புகழ்பெற்ற தத்துவ மேதைகள். இவர்கள் எழுத்துக்களை 80 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் மொழிபெயர்த்து புத்தகங்களாக வெளியிட்டவர் தந்தை பெரியார்.அத்தகைய பெரியார், மனிதநேயத்தையும் – சமூகநீதியையும்தான் வலியுறுத்தினார். தன்னைப் போல வலியுறுத்திய உலகத் தலைவர்கள் அனைவரையும் தமிழ்நாட்டுக்கும் அறிமுகம் செய்தார். அத்தகைய, தந்தை பெரியாரின் பெருந்தொண்டர்களான பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழித்தடத்தில்தான் நான் எனது தலைமையிலான ஆட்சியை நடத்தி வருகிறேன். இதற்கு திராவிட மாடல் என்று பெயர்சூட்டி இருக்கிறேன். எனது திராவிட மாடல் ஆட்சியின் மையக் கொள்கை என்பது மனிதநேயமும் சமூகநீதியும்தான். அனைத்து இடங்களிலும் சமூகநீதியை நிலைநாட்டி வருகிறோம். வகுப்புரிமை எனப்படும் இடஒதுக்கீடு அனைவர்க்கும் சமவிகிதத்தில் தரப்பட்டு வருகிறது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்படுகிறது.அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக அறிவிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்படுகிறது. அயோத்திதாச பண்டிதருக்கு நினைவு மண்டபம் கட்ட இருக்கிறோம். பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக இலவச போக்குவரத்து பயண வசதி தரப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை அடைய தாய்மொழி அறிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.இல்லம் தேடிக் கல்வி செல்கிறது. மக்களைத் தேடி மருத்துவம் செல்கிறது. உயர்கல்வி பெறும் அரசுப் பள்ளி மாணவியர்க்கு ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது. அரசுப்பள்ளி பிள்ளைகளுக்கு காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து இளைஞர்களையும் மாணவ மாணவியரையும் தகுதியுள்ளவர்களாக ஆக்க நான் முதல்வன் திட்டம் அமலில் உள்ளது. அனைத்து தொழில் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்க்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.சமூகநீதிக் கண்காணிப்பு குழுவை பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நிறுவி இருக்கிறோம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தை நீதியசரர் சிவக்குமார் தலைமையில் உருவாக்கி இருக்கிறோம். இப்படி எண்ணற்ற திராவிட மாடல் திட்டங்களை தீட்டி தமிழ்நாட்டை வளப்படுத்தி வருகிறோம். கடந்த ஐம்பதாண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட  இடஒதுக்கீட்டு உரிமைகள், இருமொழிக் கொள்கை, தமிழ்மொழி மேம்பாடு, தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள், வேளாண்மைக்குத் தரப்பட்ட முக்கியத்துவம், சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கம், மாநில உரிமைகளுக்காக போராடுதல் ஆகியவற்றின் மூலமாக தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதனை மேலும் உச்சத்துக்கு கொண்டுவரவே திராவிட மாடல் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.  எங்களின் வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்.பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் காணவிரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி என திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறேன். இத்தகைய திராவிடவியல் கொள்கையானது இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பரவ வேண்டும் என்றும் சொல்லி வருகிறேன்.இந்தியாவின் பிற மாநிலங்களை ஆளும் அரசுகள், தமிழகத்தின் திராவிட மாடல் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அறிவதில் ஆர்வமாக இருக்கின்றன. தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்துவதிலும் துடிப்புடன் இருக்கின்றன. இத்தகைய சூழலில் திராவிட மாடல் தத்துவமானது உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்காக கனடாவில் இம்மாநாடு நடத்தப்படுவதாகவே நான் நினைக்கிறேன்.ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் திராவிடர்கள்தான் என்று சொன்னார் தந்தை பெரியார். மனிதனுக்குள் ரத்த பேதமும் இல்லை. ஆண் பெண்ணுக்கு மத்தியில் பால் பேதமும் இல்லை என்று சொன்னவர் தந்தை பெரியார். ஒரு மனிதன் சக மனிதனை, மனிதனாக நடத்துவதே மனிதநேயம். அனைத்து மனிதர்க்கும் நீதி வழங்குவதே சமூகநீதி. தந்தை பெரியார் வலியுறுத்திய சமூக நீதி, மானுடப்பற்று, சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம் ஆகிய ஐந்தும் உலகளாவிய கருத்தியல்கள். இவை, நாடு, மொழி, இனம், எல்லைகள் கடந்தவை. பெரியார் உலகமயமாக வேண்டும் என்ற ஆசிரியர் வீரமணியின் நோக்கம் நிறைவேறும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இதனை முன்னெடுக்கும் கி.வீரமணி, சோம இளங்கோவன், கண்ணபிரான் ரவிசங்கர், இலக்குவன் தமிழ், அருள்செல்வி வீரமணி, வி.குமரேசன், வீ.அன்புராஜ் ஆகியோருக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்வில், நான் பங்கெடுத்து உரையாற்ற வாய்ப்பை வழங்கிய கேரி ஆனந்த சங்கரி மற்றும் அவரது குழுவினருக்கும் – கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் – டாண்டன் மற்றும் கனடியன் தமிழ் காங்கிரசைச் சேர்ந்த சிவன் இளங்கோ – கனடா மனிதநேய அமைப்புக்கும், நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.1932ம் ஆண்டு இலங்கையில் பேசிய தந்தை பெரியார் “நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை இடித்துத் தள்ளி தரைமட்டம் ஆக்குங்கள். அவற்றின் மீது தேசம், மதம், சாதி என்கிற பாகுபாடு இல்லாத – மனித சமூகம் – சம உரிமை – சமநிலை என்ற கட்டடத்தைக் கட்டுங்கள். அனைத்து உலக மக்களுடனும் பிரிவினைக்கு இடமில்லாமல் ஒன்று சேருங்கள். அப்போது, நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!” என்று சொன்னார். அதையே நானும் இன்று சொல்கிறேன். ‘மானுட சமுத்திரம் நான் எனக் கூவு’ என்றார் புரட்சிக் கவிஞர். மனித நேயமும் – சமூகநீதியும் மட்டுமே மானுட சமுத்திரத்தை ஒன்றாக்கும். இவ்வாறு பேசினார்….

You may also like

Leave a Comment

ten − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi