Tuesday, June 11, 2024
Home » உதய் திட்டத்தில் எடப்பாடி அரசு சேர்ந்ததால் வந்த வினை: ஒன்றிய அரசின் தொடர் நெருக்கடியால் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது

உதய் திட்டத்தில் எடப்பாடி அரசு சேர்ந்ததால் வந்த வினை: ஒன்றிய அரசின் தொடர் நெருக்கடியால் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது

by kannappan

சென்னை: ஒன்றிய அரசின் தொடர் நெருக்கடி காரணமாக, தமிழகத்தில் மின் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதில்,  100 யூனிட் வரை பயன்படுத்துகிறவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டுதலங்களுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார். தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில், அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அனைத்து மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று காணொலி மூலம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின் கட்டணத்தை திருத்தி அமைப்பது குறித்து நேற்று மாலை தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2011-12ம் ஆண்டில் ரூ.18,954 கோடியாக இருந்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பானது, கடந்த 10 ஆண்டுகளில் ரூ 94,312 கோடியாக மேலும் அதிகரித்து, 31-03-2021 வரை ரூ 1,13,266 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பினை, 2021-22ம் ஆண்டிலிருந்து 100% முழுமையாக அரசே ஏற்று கொள்ளும் என்ற தற்போதைய தமிழக அரசின் உறுதிப்பாட்டைபோல, முந்தைய காலத்தில் எவ்வித உறுதிபாடும் வழங்காத காரணத்தினால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இதன் விளைவாக 2011-12ம் ஆண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடரமைப்பு கழகத்துக்கு ரூ.43,493 கோடியாக இருந்த கடன், கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து தற்சமயம் (2021-22) வரை ரூ. 1,59,823 கோடியாக உள்ளது. இதன் விளைவாக, 2011- 12 ம் ஆண்டில் ரூ.4.588 கோடி(கடன்) வாங்கிய நிதியின் வட்டியானது 259 % அதிகரித்து 2020-2021ம் ஆண்டில் ரூ.16,511 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட பெரும்பாலான மின் திட்டங்கள், அத்திட்டங்களுக்கான உரிய கால அட்டவணைக்குள் முடிக்கப்படாத காரணத்தினால் இத்திட்டங்களின் மூலதனச் செலவு கடுமையாக அதிகரித்ததுடன் கட்டுமானத்தின் மீதான வட்டி ரூ.12,647 கோடியாக அதிகரித்துள்ளது. மின் விநியோக காலங்களின் கடன்களை 75% எடுத்துக்கொண்டு அதன் மூலம் அசல் மற்றும் வட்டியை குறைத்து, நிதிநிலைமையை சீராக்குவதே உதய் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 30.09.2016 அன்று நிலுவையில் உள்ள மொத்த கடன் ரூ.81,300 கோடியாக இருந்த நிலையில், மின் விநியோக கழகங்களின் கடனில் ரூ.22,815 கோடியை மட்டுமே 2017-18 முதல் 2020-21 ஏற்றுக் கொண்டது. அவ்வாறாக பெறப்பட்ட கடனிற்கான வட்டியை ஈடுசெய்யும் பொருட்டு வீட்டு உபயோக பிரிவிற்கான மானியம் 2017ம் ஆண்டு குறைக்கப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எடப்பாடி ஆட்சியின்போது உதய் திட்டத்தில் இணைந்தாலும் தொடர்ந்து இழப்பையே சந்தித்ததுள்ளது. இதன்மூலம், எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.2011-2012ம் ஆண்டில் ரூ.16,488 கோடியாக இருந்த மின் கொள்முதல் கட்டணம் 2020-2021ம் ஆண்டில் 127 % அதிகரித்து ரூ.37,430 கோடியாக உள்ளது. அதேபோல் கடந்த 2011-2012ம் ஆண்டில் ரூ.5462.8 கோடியாக இருந்த எரிபொருளுக்கான செலவுத் தொகை 2020-2021ம் ஆண்டில் 21% அதிகரித்து ரூ.6610 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2011-2012ம் ஆண்டில், ரூ.4,125.20 கோடியாக இருந்த பணியாளர்களுக்கான செலவுத் தொகை 2020-2021ம் ஆண்டில் 161% அதிகரித்து, ரூ.10.777.53 கோடியாக உள்ளது.ஒன்றிய அரசின் மின் அமைச்சகத்தால் மாநிலத்திற்கு 0.5% கூடுதல் கடன் வாங்குவதற்கு கட்டணத் திருத்தத்துடன் மின்துறை சீர்திருத்தங்களின் கட்டாய நிபந்தனையை உருவாக்கியுள்ளது. ஒன்றிய அரசின் நிதி நிறுவனங்களான M/s REC  மற்றும் M/s PFC சிறப்புப் பணப்புழக்கத் திட்டத்தின் (ஆத்மநிர்பார்) கீழ் ரூ.30,230 கோடி கடனை அனுமதிக்கும்போது வருடாந்திர கட்டண திருத்தத்தை மேற் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அனுமதித்துள்ளது.கட்டணத்திருத்தம் செய்யப்படாததால், ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் மீதமுள்ள ரூ.3,435 கோடியை M/s REC  மற்றும் M/s PFC  நிறுவனங்கள் நிறுத்தி வைத்ததால் மின் உற்பத்தியாளர்களுக்கு தீர்வு காணப்படவில்லை. ஒன்றிய அரசின் மின் அமைச்சகத்தின் வழி காட்டுதல்களின் படி விநியோக முறையை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் நிதியை வெளியிடுவதற்காக மின் கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தனையாகும். அவ்வாறு மின் கட்டணம் திருத்தம் செய்யப்படாவிட்டால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 10,793 கோடி ரூபாய்க்கான மானியங்கள் வழங்கப்படாது, மற்றும் அந்த திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது. மின் விநியோக நிறுவனங்கள் உட்பட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு கடன் வழங்குதற்கான வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு கட்டாய வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது. அதன் படி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ம் தேதிக்குள் மின் விநியோக நிறுவனங்கள் மின் கட்டண மனுவை தாக்கல் செய்யவேண்டும். CERC/APTEL போன்ற பல சட்ட அமைப்புகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் கட்டணம் திருத்தம் செய்யாதது குறித்து அவ்வப் போது கண்டனம் தெரிவித்து வந்தன.ஒன்றிய அரசின் மின் அமைச்சகத்தின் அறிவிக்கையின் படி 10 சதவீதம் வெளிநாட்டு நிலக்கரியை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மின்சாரத்தின் சராசரி விலை அதிகரிந்து மின்வழங்கல் விலை மற்றும் சராசரி வருவாய்த் தேவைக்கான இடைவெளி அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என அறிவித்த போதிலும் மூன்றில் இரண்டுபங்கு மின்சாரம் அதிக விலைக்கு கடந்த காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது. எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மின் கட்டணத்தை 8 வருட இடைவெளிக்குப் பிறகு உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை.தாழ்வழுத்த மின் கட்டணம்: தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில் ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை. அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி எண்.222-ன் படி நிலைக்கட்டணம் இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவர்.தற்பொழுது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டுதலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.27.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொந்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 36.25 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (15.30) சதவீதம் மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொந்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நகர்வு செய்யும் 10.56 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 மட்டுமே உயர்ந்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.32 சதவிதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.155 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.இரு மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 லட்சம் வீட்டுமின் நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.275 மட்டும் உயர்ந்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 800 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.26 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.53 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.395 மட்டுமே உயர்ந்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 900 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 0.84 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.35 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.565 மட்டுமே உயர்ந்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.வீட்டு மின் உபயோகம்: தற்பொழுது, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் மின்சாரத்தில் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மின் கட்டணமாக மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மின் நுகர்வு 500 யூனிட்டிலிருந்து, 501, யூனிட்டுகளாக அதிகரிக்கும் பொழுது அதற்கான மின் கட்டணத் தொகையானது 58.10 % அதிகரித்து மொத்தம் ரூ.1.716 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. 500 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட் கூடுதலாக பயன்படுத்தினாலும் மின்துகர்வோர் கூடுதலாக ரூ.656.60 செலுத்தி வருகின்றனர். இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு ஒரே மின் கட்டணமாக மாற்றி அமைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. நுாலகங்களுக்கான மின்கட்டணம்: தற்பொழுது ஊரகம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இயங்கி வரும் நூலகங்களுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றிற்கு ரூ.5.75 ஆகவும், நிலைக் கட்டணமாக மாதம் ஒன்றிற்கு ரூ.60 ஆகவும் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் படிக்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வணிக ரீதியில் இயங்காத நூலகங்களுக்கான மின் கட்டணத்தினை மானியம் இல்லா வீட்டு விகிதப்பட்டியலில் கணக்கீடு அதாவது 30 % குறைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிற தாழ்வழுத்த மின் கட்டணம்: 93% (2.26லட்சம்) சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு குறைந்த அளவாக யூனிட் ஒன்றிற்கு 50 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 53% (19.28 லட்சம்) வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றிற்கு சிறிய தொகையாக ரூ.1 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி நுகர்வோர்களுக்கு 750 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதற்கு மேல் யூனிட் ஒன்றிற்கு 70 பைசா மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடத்த 8 ஆண்டுகளுக்கு பிறகு தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு குறைந்த அளவில், யூனிட் ஒன்றிற்கு ரூ 1.15 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில், யூனிட் ஒன்றிற்கு 40 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. ரயில்வே மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 65 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உயரழுத்த வணிகப் பிரிவு நுகர்வோர்களுக்கான, மின் கட்டணமானது யூனிட் ஒன்றிற்கு குறைந்த அளவாக 50 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. பிற உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள்: 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குறைக்கப்பட்ட மின்சாரத்திற்குரிய மின் மானியத்தை நுகர்வோர் விரும்பும் பட்சத்தில் ‘‘மின்மானியத்தை தாமாக விட்டுக் கொடுக்கும்” திட்டம் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.*மின் வாகனங்களுக்கான சலுகைவீட்டு நுகர்வோர்கள் தங்கள் மின் வாகனத்தை தங்கள் வீட்டிலேயே அதே விகிதப் பட்டியலில் மின்னேற்றம் செய்து கொள்வதற்கும். அதேபோல், வணிக நுகர்வோர்கள் அதே விகிதப் பட்டியலில் பொது மின்னேற்றம் செய்வதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதற்காக ஆர்இ சான்றிதழுடன் ஆர்இ மின் சக்தியை வழங்குவதற்காக பசுமைக் கட்டணம் அறிமுகப்படுத்தப்படுகிறது. பொது வழங்கல் வீட்டு உபயோகத்திற்கான மின் மானியத்தை, பல முறை பெறுவதைத் தடுக்க பொது மின் இணைப்புக்கான விளக்குகள், மின் தூக்கி, நீர் வழங்கல் போன்ற அமைப்புகளுக்கு  தனியாக விகிதப் பட்டியல் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சிக் கூடம், நீச்சல்குளம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம். நீர்சுத்திகரிப்பு நிலையம் மற்றும் நீ அணைப்பு கருவிகள் போன்ற அமைப்புகளுக்கு வணிகப் பிரிவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு விகிதப்பட்டியல் 1(டி) ஆக மாற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.மருந்துவர்கள் / பொறியாளர்கள்/ உள்அமைப்பு அலங்கரிப்பாளர்/ கணக்காயர்/ வழக்கறிஞர் போன்றவர்கள் தங்கள் தொழில்முறை வேலைக்கு தங்கள் வீட்டில் 200 சதுர அடி வரை பயன்படுத்தலாம். வீட்டு உபயோகிப்பாளர்கள் ரூ.2,000க்கு மேற்பட்ட மின்கட்டணத்தை இணைய வழி மூலம் கட்டாயமாக செலுத்த வேண்டும். ஒரு வீட்டில் கூடுதலாக வாடகை குத்தகைக்கு விடப்பட்டதைத் தவிர மற்ற கூடுதல் மின் இணைப்பிற்கு மாதம் ஒன்றிற்கு ரூ.225 வசூலிக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளால் பராமரிக்கப்படும் பூங்காக்கள் மற்றும் நீச்சல் குளங்களுக்கான வணிக விகிதப் பட்டியலில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளின் கட்டண விகிதத்தின் கீழ் மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. மின்மயானம், அங்கன்வாடிமையங்கள், பொதுவசதிகள், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள், சத்துணவு மையங்கள் ஆகியவற்றை வீட்டு விகிதம் பட்டியலில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளின் கட்டண விகிதத்தின் கீழ் மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. திருமன மண்டபங்கள் / அவை கூட்டுகை மையங்கள் அபரிதமான வெளிச்சம் பயன்பாட்டிற்கு தனியாக தற்காலிக மின் விகித பட்டியலில் மின் இணைப்பு பெறாமல் அதே மின் இணைப்பில் 5% கூடுதல் கட்டணத்துடன் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்….

You may also like

Leave a Comment

3 + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi