Sunday, May 19, 2024
Home » உடல்பருமன் தடுப்பு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் : அன்புமணி யோசனை!!

உடல்பருமன் தடுப்பு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் : அன்புமணி யோசனை!!

by kannappan

சென்னை : உடல் பருமனை தடுக்கும் திட்டங்களை அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘உலக உடல்பருமன் நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், உடல்பருமன் பேராபத்து குறித்து இந்திய, குறிப்பாக தமிழக மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. உடல் பருமன் ஒருவரின் தனிப்பட்ட பிழையல்ல… ஒட்டுமொத்த சமூகமும் இணைந்து தடுக்க வேண்டிய பேராபத்து என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பது தான் உலக உடல்பருமன் நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நான் சொல்ல விரும்பும் செய்தியாகும்.உலக அளவில் 80 கோடிபேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் உடல்பருமனால் பாதிக்கப்பட்டோர் அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது. குறிப்பாக, நகர்ப்புற மக்கள் உடல்பருமனால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழ்நாட்டில் ஒருபக்கம் அதிகமான மக்கள் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்; மறுபக்கம் உடல்பருமனாலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது வருந்தத்தக்க நிலை ஆகும். நீரிழிவு நோய், இருதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், தூக்கமின்மை என பலவித நோய்களுக்கு உடல்பருமன் காரணமாகிறது.ஐந்தாவது தேசிய குடும்பநல ஆய்வின்படி (NFHS 5), 15 முதல் 49 வயது வரையிலான பெண்களில் தமிழகத்தைச் சேர்ந்த 40.4% பேர் உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். நகரங்களில் இந்த அளவு 46.1% ஆகவும், கிராமங்களில் 35.4% ஆகவும் இருக்கிறது. சென்னையில் வாழும் பெண்கள் இந்தியாவின் இதர பெருநகரங்களில் உள்ள பெண்களைவிட அதிக எண்ணிக்கையில் உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைத்துப் பிரிவிலும் உடல்பருமன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த ஆபத்துக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.உடல்பருமன் தனிமனித தவறு அல்ல. தனிமனிதர்களின் உணவுப்பழக்கமும், உடலுழைப்பு போதாமையும் உடல்பருமனுக்கான காரணமாக இருந்தாலும் கூட, நுகர்பொருள் விளம்பரம், போக்குவரத்து முறை, நகரமைப்பு, வரிவிதிப்பு முறை, கார்ப்பரேட் உணவுப்பொருட்கள் மீதான குறியிடல் விதிகள், அரசின் கொள்கை உள்ளிட்டவை தான் உடல்பருமன் அதிகரிப்புக்கான மறைமுக காரணங்கள் ஆகும். எனவே, தனிமனிதர்களால் மட்டும் உடல்பருமனை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது; ஒட்டுமொத்த சமூகமும் உடல்பருமன் தீமைக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பதே அறிவியல் அடிப்படையிலான தீர்வாகும். குறிப்பாக, அரசின் கொள்கைகள் உடல்பருமனை தடுப்பதில் முதன்மை பங்கு வகிக்கின்றன. உடல்பருமனை கட்டுப்படுத்துவதில் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை வலியுறுத்தும் வகையில் ‘அனைவரும் செயல்பட வேண்டும்’ (World Obesity Day: Everybody Needs to Act) எனும் முழக்கம் 2022 உலக உடல்பருமன் நாளில் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசும், தனி மனிதர்களும் இந்த நோக்கத்தை உணர்ந்து செயல்பட்டால் உடல்பருமனை விரைவாக கட்டுப்படுத்திவிட முடியும்.உள்ளூர், மாநிலம், தேசிய அளவில் என அனைத்து நிலைகளிலும் உடல்பருமனை திணிக்கும் தீமைகள் தடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, பெருந்தீனி எனப்படும் கார்ப்பரேட் உணவு திணிப்பை கட்டுப்படுத்த வேண்டும். அதிக சர்க்கரை, அதிக உப்பு, அதிக கொழுப்பு கொண்ட துரித உணவுகள், மென்பானங்கள், பொட்டல உணவுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அவற்றின் மீது அதிக பாவ வரி (Sin Tax) விதிக்கப்பட வேண்டும். அவற்றின் விளம்பரங்கள் தடுக்கப்பட வேண்டும். பொட்டல உணவுப்பொருட்கள் மீது, அதன் பாதிப்பை விளக்கும் தெளிவான எச்சரிக்கைப் படங்கள் அச்சிடப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் குழந்தைகளின் மீது தீய உணவுகள் திணிக்கப்படாமல் தடுக்க வேண்டும்.தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உணவு எண்ணெய் வகைகளில் கலந்துள்ள அதிதீங்கு கொழுப்பு (Trans fats) உடல்பருமனுக்கான ஒரு காரணமாக உள்ளது. உணவு எண்ணெய் வகைகள், பலவகை பொட்டல உணவுப்பொருட்களில் அதிதீங்கு கொழுப்பு கலக்கப்படுவதை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.வாகனம் இல்லாத போக்குவரத்தை ஊக்குவித்தல், நடைபாதைக்கும் மிதிவண்டிகளுக்கும் வழி அமைத்தல், பூங்காக்களையும் பொது இடங்களையும் அதிகமாக்குதல், பள்ளிகளில் விளையாட்டை கட்டாயமாக்குதல், விளையாட்டு திடல்களை அதிகமாக்குதல் உள்ளிட்ட பொதுவெளி மற்றும் உடலுழைப்பு செயல்பாட்டுக்கான  திட்டங்களை அனைத்து நகரங்களிலும் முழு அளவில் செயல்படுத்த வேண்டும்.உடல்பருமனை கட்டுப்படுத்தும் பணி என்பது சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான நலவாழ்வு நடவடிக்கை ஆகும். இந்திய அரசும், தமிழ்நாடு அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் சேர்ந்து ஒருங்கிணைந்த உடல்பருமன் தடுப்பு திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும்; அதன் மூலம் மக்கள் நலனைக் காக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். …

You may also like

Leave a Comment

fifteen + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi