Tuesday, May 21, 2024
Home » ஆசியாவின் பணக்கார பெண்கள் பட்டியல்!

ஆசியாவின் பணக்கார பெண்கள் பட்டியல்!

by kannappan

முதலிடத்தில் கெத்துக் காட்டும் இந்தியப் பெண்!!ஆண்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை பெண்கள்  என்பதை  அவ்வப்போது பலரும்  நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில், தொழில் துறையிலும்  கோலோச்ச முடியும்.  ஆசியாவின் பணக்கார பெண்ணாக உயரவும் முடியும்  என சாதித்துக் காட்டியிருக்கிறார் சாவித்திரி ஜிண்டால். ஆம், இவரே தற்போது  ஆசியாவின்  முதல் பணக்கார பெண் ஆவார். ப்ளூம்பெர்க்  இண்டக்ஸ்,  சமீபத்தில் ஆசியாவின் டாப் 10  பணக்கார பெண் களின் பட்டியலை வெளியிட்டது. அதில் இந்தியாவைச் சேர்ந்த சாவித்திரி ஜிண்டால் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக  சீனப் பெண்ணான யாங் ஹூயான் ஆசியாவின் முதல் பணக்கார பெண் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்தார்.  தற்போது அவரை பின்னுக்குத் தள்ளி, சாவித்திரி ஜிண்டால் முதலிடம் பிடித்துள்ளார். யார் இந்த சவித்திரி ஜிண்டால்? இளமை பருவம்1950 இல் அஸ்ஸாமின் தின்சூக்கியா நகரில்  மார்ச் 20 இல் பிறந்தவர்  சாவித்திரி. எஃகு மற்றும் மின் துறை சார்ந்த தொழில் துறையில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்திருக்கும் ஜிண்டால் குழுமத்தின்  நிறுவனரான ஓம் பிரகாஷ் ஜிண்டாலை 1970ம் ஆண்டு மணந்தார். ஜிண்டாலின் முதல் மனைவியும் சாவித்திரியின் சகோதரியுமான வித்யா தேவி இறந்த பிறகு, அவரது தந்தை சாவித்ரியை ஜிண்டாலுக்கு திருமணம் செய்து வைத்தார். இதனால் பள்ளி கல்வி முடித்த நிலையில், கல்லூரி செல்ல முடியாமல் போனது அவரால். பின்னர், இல்லத்தரசியாக  இருந்து வந்தவர், கடந்த 2005 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் ஓ.பி காலமான பிறகே ஜிண்டால் நிறுவனத்தின்  பொறுப்புகளை  ஏற்றார்.சாவித்திரி ஜிண்டால் அவர்களுக்கு நான்கு மகன்கள் பிறந்தனர் ரத்தன் ஜிண்டால், பிரித்விராஜ் ஜிண்டால், சஜ்ஜன் ஜிண்டால் மற்றும் நவீன் ஜிண்டால். இவர்கள், தற்போது தங்கள் ஜிண்டால் குழுமத்தில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். அரசியல் வாழ்க்கை2005 ஆம் ஆண்டில், ஹிசார் தொகுதியில் இருந்து ஹரியானா சட்டசபைக்கு சாவித்திரி ஜிண்டால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதியானது, முன்னர், அவரது  கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் நீண்ட காலமாக பணியாற்றி வந்த தொகுதியாகும். 2009 ஆம் ஆண்டில் இவர் மீண்டும் இத்தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டு  ஹரியானா அரசாங்கத்தில் அமைச்சரவை மந்திரியாக நியமிக்கப்பட்டார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, ஒருங்கிணைப்பு, புனர்வாழ்வு மற்றும் வீட்டுவசதி அமைச்சராகவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வீட்டுவசதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இப்போது இவர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தொழில் வளர்ச்சிசாவித்திரி நிறுவன பொறுப்புகளை ஏற்கும்போது,  சரிவை சந்தித்து வந்த  நிறுவனமும், கொரோனா பாதிப்பும் அவருக்கு  பெரும் சவாலாக  அமைந்தது.  2019, 2020 ல் ஜிண்டால் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 50 சதவிகிதம் சரிந்து இருந்தது. அவரது நிகர மதிப்பு 2018 இல் $8.8 பில்லியனில் இருந்து 2019 இல் $5.9 பில்லியனாகவும், 2020 இல் $4.8 பில்லியனாகவும் குறைந்தது. இருந்தாலும், தனது கடும் உழைப்பாலும்,  விடாமுயற்சியாலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது சொத்து மதிப்பை மூன்று மடங்கிற்கும் மேலாக உயர்த்தி உள்ளார். இரண்டு ஆண்டுகளில் சுமார் $4.8 பில்லியன் டாலரில் இருந்து 2022 ஆண்டில் $17.7 பில்லியன் டாலருக்கு உயர்ந்தியுள்ளார்.  அந்தவகையில், தற்போது அவரின சொத்து மதிப்பு 11.3 பில்லியன் டாலர் என்றளவில் உள்ளது.பணக்காரப் பெண்மணிசீனாவின் யாங் ஹூயான் 24 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆசியாவின் பணக்கார பெண்மணிகளில்  முதல் இடத்தைப் பிடித்து வந்தார்.  இந்நிலையில்,  சீனாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பினால் ரியல் எஸ்டேட் துறை பெரிதும் சரிவை கண்டது. எனவே, அவர் இந்த ஆண்டு 11 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளார். இதனால் அடுத்த நிலையில் இருந்த இந்தியாவின் சாவித்திரி ஜிண்டால் முதலிடத்திற்கு வந்துள்ளார். இதன் மூலம்  தற்போது  ஆசிய பணக்கார பெண்மணிகளில்  முதலாவது  இடத்தைப் பிடித்துள்ளார்  சாவித்திரி ஜிண்டால். உலகப் பணக்கார பெண்மணிகளின்  பட்டியலில் 13வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

You may also like

Leave a Comment

seventeen − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi