Sunday, June 2, 2024
Home » ஆகமம் காட்டும் தீப ஆராதனை

ஆகமம் காட்டும் தீப ஆராதனை

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில், குறிப்பாக சிவன் கோயில்களில் பல வகைப்பட்ட தீபங்கள் உண்டு. ஒன்று முதல் இரண்டு, மூன்று, நான்கு என பல திரிகளுள்ள விளக்குகளால் ஆராதிப்பது ஐதீகம். ஆராதனைக் காலத்தில் தேவர்கள் அனைவரும் தெய்வ தரிசனத்தை காண, விளக்கு குருவாக வந்தமர்கின்றனர் என்று சிவாகமங்கள் கூறுகின்றன.அவற்றுள், ஒன்று முதல் ஐந்து அளவுள்ள விளக்குகள் ஈசனாதி தேவர்கள் என்றும், திரி தீபம் (மூன்று விளக்குகள்) தத்துவத்ரயம் என்றும், பஞ்ச தீபமானது பஞ்ச கலா சக்திகள் என்றும், சப்த தீபங்கள் (ஏழு விளக்குகள்) சப்த மாதர்கள் என்றும், நவ தீபம் (ஒன்பது விளக்குகள்) நவசக்திகள் என்றும், ஏக தீபம் (ஒரு விளக்கு) சரஸ்வதி ஸ்வாகாதேவி என்றும், மற்றவை ரிஷபாதி உருவமுள்ளவை என்றும் சொல்லப்படுகின்றன. பல தேவர்கள் பல்வேறு உருகொண்டு வந்து தரிசிப்பதாகவும் ஐதீகம் உண்டு. ஷோடசங்களாகிய (பதினாறு விதமான) தீப உபசாரங்கள், பஞ்ச பூதாதி தேவதா தரிசனம் என்றும் சிரிகாரணம் என்னும் சிவாகமத்தில் கூறப்பட்டிருக்கிறது.இந்த விளக்கு ஆராதனை ரந்திர ஆதாரமாகவும் (பிரம ரந்திரம் எனும் சூட்சும பாதை), ஏக ஆதாரமாகவும், கொம்புகளை ஆதாரமாகவும் பெற்றதாம். இவை சர்வ பிரபஞ்ச நலம் பொருட்டு செய்யப்படுபவை ஆகும். இவை அனைத்தும் சிவ ஆகமத்தில் சொல்லப்பட்டிருகின்றது. இந்த தீபத்திற்கு காராம் பசுவின் நெய் சிறந்ததாகும். அதற்கு அடுத்தபடியாக, ஏனைய பசுக்களின் நெய்யிலும் செய்யலாம்.முதலாவது, தீப ஆராதனை செய்யு மிடத்து நாக ஆரத்தி,(பாம்பு போல முகமுடைய தீப வரிசை) முதலாகக் கொண்டு இறுதியாக கட (பானை போன்று) தீபம் செய்ய வேண்டியது. பின்னர், பதினாறு கலை கொண்ட தீபம், பட்சத் தீபமும் (பௌர்ணமி முதலில் சதுர்த்தசி வரை), வார தீபமும், ருத்ரம், நிர்திஷ்டம், சப்த மாதரம், நிவர்த்தியாதி, கலா தீபம், சரஸ்வதி தீபம் முதலிய தீப ஆரத்திகளை செய்ய வேண்டியது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. தீப ஆரத்திகளை எடுத்துத் தேவர்களுக்கு மூன்று முறை ஆராதனை புரிய வேண்டும். அதில் முதல் முறை உலக நலனின் பொருட்டும், இரண்டாம் முறை கிராம நலனின் பொருட்டும், மூன்றாம் முறை ஐம்பூதங்களின் நலனின் பொருட்டும் என்று மூன்று முறை பாதம் முதல் தலைவரை எடுத்துத் தலை, லலாடம் (நெற்றி), மார்பு, திருவடிகள் முதலியவற்றைக் குறித்துப் பிரணவாகாரமாக (ஓங்கார வடிவமாக) காட்ட வேண்டும்.இந்த தீபார்த்திகளின் முடிவில், கற்பூரார்த்தி செய்ய வேண்டும். இது நீராஞ்சனம் என்று கூறப்படும். இதனைச் செய்யும் பொழுது, நான்கு அங்குல ஒளி எழும்பக் கற்பூரம் ஏற்றுவது சிறந்ததாகும். மூன்று அங்குலம் உயரம் மத்திமம் (பரவாயில்லை). இரண்டு அங்குலம் அதமம் (கூடாது). நீராஞ்சன பாத்திரமானது (கற்பூரத் தட்டு) சூரிய மண்டலகாரமாய் இருத்தல் வேண்டும். இடையில் அக்கினி தேவனுடைய இருப்பாய்க் கற்பூரார்த்திகள் பதித்தல் வேண்டும். இதைச் சிரிகாரணம் என்னும் சிவாகமம் விரித்துரைக்கின்றது.ஆகமங்களிலே இந்தத் தீப வரிசையிலும் பெயரிலும் வித்தியாசங்கள் உண்டு. இதோடு விபூதி ரட்சை இறைவனுடைய திருஉருவின் நெற்றியில் விபூதியை இடுவது, கண்ணாடி, குடை, சாமரம், விசிறி போன்ற உபசாரங்களும் சேர்த்துச் செய்யப்படுகின்றன. தீப அலங்கார தத்துவம் என்பது ஒன்று பலவாறாகப் பரிணமித்து ஊர்வன, பறப்பன, நடப்பன என்ற முறையில் உள்ளது. சிறத்தல் எனும் தத்துவ முறையில் (மேன்மையாதல், மங்கலமாதல், அன்பாதல்) எழுந்து மீண்டும் பஞ்ச பூதங்களுக்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஒடுங்கி இறுதியில் கற்பூரம்போல் எஞ்சாது எரிந்து இறைவனோடு ஒன்றி விடுகின்றன. இது உற்பத்தி ஒழுங்கை (சிருஷ்டிக் கிரமத்தை) கூறுவதாகத் தெரிகிறது.சாக்த தந்திரமானது, குண்டலினி ஆறாதாரங்களின் வழியாக மேலேறிச் செல்லும்போது அந்தந்த ஆதாரங்களில் சாதகனுக்கு ஏற்படும் அனுபவங்களான. 1). ஒளி, 2). ஓசை, 3). நிறம், 4). சுவை, 5). தோற்றம் இவைகளைத்தான் தீபங்களும் தத்துவமாக வெளிப்படுத்துகின்றன. வாத்தியம், அலங்காரம், நைவேத்தியம், மூர்த்தி என்று இந்த வழிபாட்டு ஆராதனை விவரிக்கிறது. மேலும் கோயில் கருவறையில் இருக்கும் எல்லாம் வல்ல இறைவனின் திருஉருவை ஆச்சாரியனான குருக்கள் அறிவு ஒளியால் (ஞான ஒளியில்) காட்ட உயிர்கள் இறைவனின் உருவக் காட்சியைக் கண்டுகளிக்கிறார்கள். இறைவனின் திருவுருவிற்குச் செய்யும் அபிஷேகம் இறைவனின் உற்பத்தித் தொழிலையும், நைவேத்தியம், காத்தல் தொழிலையும், பலி என்பது அழித்தல் தொழிலையும், தீபம் மறைந்திருந்ததை காட்டும் தொழிலையும், திருநீறு அருளல் தொழிலையும் குறிக்கும் என்றும் கூறுகின்றனர்.தொகுப்பு: கிருஷ்ண வசந்தன்

You may also like

Leave a Comment

2 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi