Saturday, June 1, 2024
Home » அறிந்த திருமலை அறியாத தகவல்கள்

அறிந்த திருமலை அறியாத தகவல்கள்

by kannappan
Published: Last Updated on

விபவ அவதாரமா? அர்ச்சாவதாரமா?நரசிம்மன், ராமன், கண்ணன் போன்ற தோற்றங்களோடு இறைவன் பூமிக்கு வருவதை விபவ அவதாரநிலை என்று சொல்வார்கள். ஸ்ரீரங்கநாதன், வரதராஜன், சாரங்கபாணி போன்ற திருக்கோலங்களில் இறைவன் கோயில்களில் எழுந்தருளி இருப்பதை அர்ச்சாவதார நிலை என்று சொல்வார்கள். ஆனால் திருமலை ஸ்ரீநிவாசன், முதலில் அங்கே அவதாரம் செய்தபோது விபவ அவதாரமாகத் தோன்றி, பத்மாவதியை மணம் புரிந்து, அதன் பின் அர்ச்சாவதார நிலைக்கு மாறிக் கோயில் கொண்டவர். விபவம், அர்ச்சை ஆகிய இருநிலைகளும் இணைந்திருப்பது ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கே உண்டான தனிச்சிறப்பு.அணையா விளக்குகள்திருமலையப்பனின் கருவறையில் ஏற்றப்பட்டிருக்கும் எண்ணெய் விளக்குகள் என்றும் அணைவதே இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை எரிந்துகொண்டே இருக்கின்றன.திருமலைக்கு அதிபதி யார்?சுவாமி புஷ்கரிணிக் கரையில் உள்ள வராகப் பெருமாள் தான் திருமலைக்கு அதிபதியான பெருமாள். அவரிடம் நூறு சதுரஅடி நிலம் கடனாகப் பெற்றுக்கொண்டு, ஆனந்த நிலைய விமானத்தின் கீழே கருவறையில் ஸ்ரீநிவாசன் கோயில் கொண்டிருக்கிறார். எனவே திருமலைக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் வராகப் பெருமாளைத் தரிசித்துவிட்டு அதன்பின் மலையப்ப சுவாமியிடம் செல்ல வேண்டும் என்பது மரபு.திருமலை கோயிலில் ஒரு மண்வெட்டி திருமலையப்பனுக்கான புஷ்பங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமாநுஜரின் சீடரான அனந்தாழ்வான் அமைத்த நந்தவனத்தில் இருந்துதான் இன்றளவும் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு சமயம் திருமலையப்பனே சிறுவன் வடிவில் அனந்தாழ்வானுடன் லீலை புரியச் சென்றான். அப்போது அந்தச் சிறுவனைத் தன் மண்வெட்டியால் அனந்தாழ்வான் அடித்தார். சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் பெருகி வந்தது. அத்துடன் அச்சிறுவன் ஓட, அவனை அனந்தாழ்வான் துரத்தி வந்தார். மலையப்பனின் கருவறைக்குச் சென்று அச்சிறுவன் மறைந்து போனான். வந்தவன் மலையப்பனே என உணர்ந்தார் அனந்தாழ்வான். மலையப்பனின் தாடையிலிருந்து ரத்தம் வந்தபடியால், அவ்விடத்தில் பச்சைக் கற்பூரம் வைக்கப்பட்டது. அதனால் தான் இன்றளவும் மலையப்ப சுவாமியின் தாடையில் பச்சைக் கற்பூரம் இருப்பதைக் காணமுடிகிறது. பெருமாளை அடிப்பதற்கு அனந்தாழ்வான் பயன்படுத்திய மண்வெட்டி இன்றளவும் சந்நதி நுழைவாயிலில் பராமரிக்கப் பட்டு வருகின்றது.உள்ளே சென்ற மாலை வெளியே வருவதில்லை திருமலைக்கு மேல் மலையப்பனைத் தவிர வேறு யாரும் மாலை அணியக் கூடாது என்றொரு மரபு உள்ளது. மேலும், பெருமாளுக்குச் சமர்ப்பிக்கப்படும் மாலைகள் ஏதும் திரும்ப வெளியே வருவதில்லை. பெருமாளின் கருவறைக்குப் பின்புறத்தின் வாயிலாக அவை வெளியேற்றப் படுகின்றன.மலையே இறைவனின் வடிவம்திருமலையின் ஏழு மலைகளுமே திருமாலின் வடிவமாகப் போற்றப்படுவதால், ராமாநுஜர் திருமலைக்கு வந்த போது, மலைமீது ஏற முதலில் மறுத்து விட்டார். திருமலையப்பனைத் தரிசிக்க இயலாதவர்கள், அந்த ஏழு மலைகளைத் தரிசித்தாலே அனைத்துப் பாபங்களும் நீங்கி விடும் என்றுகுன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்சென்று சேர் திருவேங்கட மாமலைஒன்றுமே தொழ நம் வினை ஓயுமேஎனும் பாடலில் நம்மாழ்வார் பாடியுள்ளார்.திருமலையில் மூன்று நாட்கள் விரதம் இருந்த மகான் சில காலம் முன் வாழ்ந்த அன்னயார்ய மகாதேசிகன் என்ற பெரியவர், திருமலைக்குச் சென்ற போது மூன்று நாட்கள் உணவோ தண்ணீரோ உட்கொள்ளவில்லை. காரணம் வினவிய போது, உணவோ தண்ணீரோ உட்கொண்டால், இப்புனித மலையில் சிறுநீரோ மலமோ கழிக்க நேரிடும். அந்தப் பாபத்தை நான் செய்ய மாட்டேன் என விடையளித்தார்.கோதை தரும் மாலைபுரட்டாசி பிரம்மோற்சவத்தின் போதுதிருமலையப்பன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் களைந்த மாலையை அணிந்துகொள்வது ஒரு சிறப்பம்சமாகும்.மலையப்பனின் கண்கள்ஏன் மறைக்கப்பட்டிருக்கின்றன?மலையப்பனின் கண்களில் இருந்து பொங்கி வரும் அருள்வெள்ளத்தைச் சாதாரண மக்களான நம்மால் முழுமையாக உள்வாங்க இயலாது என்பதால், இரு கண்களையும் மறைத்தவாறு திருமண் காப்பு சாற்றி இருக்கிறார் பெருமாள். தன் கடைக்கண்ணால் மட்டும் நமக்கு நல்லருளைச் சுரக்கிறார். வியாழக்கிழமை திருமஞ்சனத்தின் போது, திருமண் காப்பு இல்லாமல் முழு கண்களையும் தரிசிக்கும் பேறு கிட்டும்.திருப்பதி லட்டுஸ்ரீநிவாசனுக்கும் பத்மாவதிக்கும் நடைபெற்ற திருக்கல்யாணத்தின் நினைவாக வழங்கப்படும் லட்டுப் பிரசாதம் மிகவும் பிரசித்தியானது. கடலைமாவு, முந்திரி, நெய், ஏலக்காய், வெல்லம், திராட்சை உள்ளிட்டவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் திருப்பதி லட்டு திருமலையப்பன் அருளும் மகாபிரசாதம் ஆகும்.பெருமாள் அமுது செய்யும் பிரசாதம்பெருமாளுக்கான பிரசாதங்கள் புதிய மண் சட்டியிலேயே தயாரிக்கப்படும். தயிர் சாதம் தவிர மற்றைய பிரசாதங்கள் குலசேகரப் படியைத் தாண்டிப் பெருமாள் சந்நதிக்குள் செல்வதில்லை.குலசேகரன் படிதிருமலையில் பெருமாளின் கருவறைக்கு முன்னே படியாக இருக்க வேண்டும் என்று விரும்பிய குலசேகர ஆழ்வார், படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே என்று பாடியுள்ளார். அதன் நினைவாக இன்றும் பெருமாளின் முன்னே இருக்கும்படி குலசேகரன் படி என்றே அழைக்கப்படுகிறது.புரட்டாசி மாத மாவிளக்குதிருமலையில் வாழ்ந்த ஒரு வேடன், அங்கிருந்த ஒரு மரத்தையே பெருமாளாக எண்ணி, அப்பெருமாளுக்குத் தினந்தோறும் தேனும் தினைமாவும் சமர்ப்பித்து வந்தான். ஒரு புரட்டாசி சனிக்கிழமையில் மலையப்பன் அந்த வேடனுக்குக் காட்சி தந்து அருள்புரிந்தார். அதன் நினைவாக இன்றும் புரட்டாசி சனிக்கிழமைகளில் திருமலையப்பனுக்காக மாவிளக்கு போடும் வழக்கம் உள்ளது. வேடன் சமர்ப்பித்த தினைமாவுக்கு இணையாக அரிசி மாவும், தேனுக்கு இணையாக வெல்லமும் சேர்த்து, மாவிளக்கு போடுகிறார்கள். அந்த மாவு உருண்டை திருப்பதி மலையைக் குறிக்கிறது. அதன் மேல் ஏற்றப்படும் விளக்கு மலைக்கு மேல் விளக்காய் ஒளிவீசும்மலையப்பனைக் குறிக்கிறது.புரட்டாசியில் தோன்றிய புண்ணியன்புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் முதன்முதலாகத் திருமலையில் பெருமாள் அவதாரம் செய்தபடியால், புரட்டாசி மாதமே திருமலையப்பனுக்கு மிகவும் உகந்த மாதமாகும்.ரிக்வேதம் போற்றும் திருவேங்கடம்“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே, சிரிம்பிடஸ்ய ஸத்த்வபி: தேபிஷ்ட்வா சாதயாமஸி” என்ற ரிக் வேத மந்திரம் திருமலையைப் புகழ்கிறது. ஏழைகள், எதிர்காலம் பற்றிய அறிவில்லாதவர்கள், துன்பப்படுபவர்கள், சுற்றதாரின் ஆதரவுஅற்றவர்கள் ஆகிய அனைவரும் பக்தர்களோடு இணைந்து ஸ்ரீநிவாசன் திகழும் திருமலைக்குச் சென்று, அப்பெருமாளின் திரு வடிகளில் அடைக்கலம் புகுந்தால் அவன் காத்தருள்வான் என்பது இம்மந்திரத்தின் பொருள்.சிலப்பதிகாரத்தில் திருமலைசிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் காடு காண் படலத்தில் திருமலையைப் புகழ்ந்து இளங்கோவடிகள் பாடியுள்ளார். வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலயத்து உச்சி மீமிசை என்று அப்பாடல் தொடங்குகிறது.திருமலையப்பனின் குருதிருமலையில் உள்ள ராமாநுஜர் சந்நதியில் ராமாநுஜர் பெருமாளுக்குக் குருவாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே சீடனாகப் பெருமாள் நிற்பதாக ஐதீகம். அதனால் தான் அமர்ந்திருக்கும் ராமாநுஜருக்கு எதிரே நின்றிருக்கும் பெருமாளின் திருவடிச் சுவடுகள் மட்டும் இருப்பதைக் காணலாம். பெருமாளுக்குச் சங்கு சக்கரங்கள் தந்தபடியாலும், வேதார்த்த சங்கிரகத்தை உபதேசம் செய்தபடியாலும், பெருமாள் தனக்குக் குருவாக ராமாநுஜரை அங்கீகரித்தார்.திருமலையப்பனின் குலதெய்வம்திருமலையில் கோயில் கொண்டிருக்கும் நரசிம்மர் நிவாசனால் பூஜிக்கப்பட்டவர். ஸ்ரீநிவாச கல்யாணம் நடைபெறுவதற்கு முன் இந்த நரசிம்மரைப் பூஜித்து, அவருக்குப் பிரசாதங்களை நிவேதனம் செய்துவிட்டுத்தான் பத்மாவதியை மணந்துகொள்ளச் சென்றார் ஸ்ரீநிவாசன்.விமான வேங்கடேசன்பொன்மயமான ஆனந்த நிலைய விமானத்தின் வடக்குப் பகுதியில் விமான வேங்கடேச னாகப் பெருமாள் காட்சிஅளிக்கிறார். முன்பு ஒரு பொய்கைக் கரையில் கஜேந்திரன் என்ற யானை துயருற்றபோது அதைக் காத்த பெருமாள், சுவாமி புஷ்கரிணிக் கரையிலும் அப்படி அடியார்களின் குரல் ஏதும் கேட்டால், உடனே ஓடோடிச் சென்று காக்க வேண்டும் என்ற எண்ணத்திலே விமான வேங்கடேசனாக, விமானத்தின் மேல் தயார் நிலையில் காத்திருக்கிறார்.தெய்வீக மலை‘கட்டெதுர வைகுண்டமு’ என்ற கீர்த்தனையில், திருமலையில் உள்ள ஒவ்வொன்றுமே தெய்வீகமானது என்று அன்னமாச்சாரியார் பாடியுள்ளார். வைகுண்ட லோகமே திருமலை, வேதங்களே அதன் பாறைகள், பிரம்மா உள்ளிட்ட தேவர்களின் லோகங்கள் இம்மலையின் நான்கு மூலைகள், தேவர்களே இம்மலையில் வாழும் உயிரினங்கள் என்றெல்லாம் கொண்டாடியிருக்கிறார் அன்னமாச்சாரியார்.வேங்கடம் என்றால் என்ன?வடமொழியில் வேம் என்றால் பாபம், கடம் என்றால் போக்குவது. வேங்கடம் என்றால் பாபத்தைப் போக்குவது என்று வடமொழியில் பொருள்படும். தமிழில் வேம் என்றால் போக்குவது, கடம் என்றால் பாபம். எனவே தமிழிலும் வேங்கடம் என்றால் பாபத்தைப் போக்குவது என்றே பொருள்படும். நம் அனைத்துப் பாபங்களையும் தீர்க்கவல்ல மலை திருவேங்கட மலை.ஒலியும் ஒளியும்ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச என்பது கீதையில் கண்ணன் கூறிய சரம ஸ்லோகம் ஆகும். அதாவது, இறைவனை அடைவதற்கான மார்க்கங்களாகப் பிற தர்மங்களை எண்ணாமல், இறைவனே அவனை அடைவதற்கான வழியாவான் என்பதை உணர்ந்து, அவன் திருவடிகளை அடைக்கலமாக நாம் பற்றினால், அவன் நம்மை அனைத்துப் பாபங்களில் இருந்தும் போக்கி, நமக்கு முக்தி அளிப்பான் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள். ஒலி வடிவில் உள்ள இந்த சுலோகத்தின் ஒளி வடிவமாகத் திருமலையப்பன் திகழ்கிறார். அவரது வலக்கரத்தைத் திருவடிகளை நோக்கிக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுமாறு அறிவுறுத்து கிறார். இடக்கரத்தைத் தொடை அருகே வைத்துக் கொண்டு, அவ்வாறு நாம் அடைக்கலம் புகுந்தால், பிறவிப் பெருங்கடலை நம் தொடை அளவுவறச் செய்வதாக உறுதி அளிக்கிறார்.சுக்ரீவன் கூற்று சீதையைத் தேடுவதற்காக வானர வீரர்களை ஏவிய சுக்ரீவன், “வடசொற்கும் தென்சொற்கும் வரம்பிற்றாய் நான்மறையும் மற்றை நாலும் இடைசொற் பொருட்கெல்லாம் எல்லையதாய் நல்லறத்துக் கீறாய வேறு புடைசுற்றுந் துணையின்றிப் புகழ்பதிந்த மெய்யேபோல் பூத்துநின்ற வடைகற்றுந் தண்சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்றடைதீர் மாதோ தோடுறு மால்வரை அதனைக் குறுகுதிரேலும் நெடிய கொடுமை நீங்கி வீடுறுதிர் ஆதலினான் விலங்குதிர் அப்புறத்து நீர்” என்று அவர்களைப் பார்த்துச் சொல்வதாகக் கம்பன் பாடுகிறான். அதாவது, “திருமலையில் மட்டும் சீதையைத் தேடாதீர்கள். ஏனெனில், அங்கே சில காலம் இருந்தாலே நீங்கள் பாபம் நீங்கி முக்தி அடைந்து விடுவீர்கள். நீங்கள் எல்லோரும் முக்திக்குச் சென்று விட்டால் அதன் பின் யார் சீதையைத் தேடுவது எனவே திருமலையைத் தவிர்த்த பிற இடங்களில் மட்டும் சீதையைத் தேடுங்கள்!” என்று அறிவுறுத்துகிறான் சுக்ரீவன்.கோவர்த்தன மலையே திருமலைகண்ணன் ஏழு நாட்கள் கோவர்த்தன மலையைத் தாங்கிப் பிடித்து ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்தான் என்பதை நாம் அறிவோம். அந்த மலை கண்ணனுக்குக் கைம்மாறு செய்ய விழைந்ததாம். அதனால் அந்த கோவர்த்தன மலையே திருமலையில் ஏழு மலைகளாக மாறியது என்றும், தன்னை ஏழு நாட்கள் சுமந்த கண்ணனை ஏழு மலைகளாக மாறிக் காலந்தோறும் அது தாங்கி நிற்கிறது என்றும் சொல்வார்கள்.கலியுக வைகுண்டம்வைகுண்ட லோகத்தில் உள்ள திருமாலை நேரில் சென்று தரிசிக்கும் பேறு பெறாதவர்களுக்கு இந்தக் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக, கலியுக வரதனாகத் திருமலையப்பன் தரிசனம் தருவதால், திருமலையைக் கலியுக வைகுண்டம் என்று சொல்வார்கள்.யசோதையே வகுளமாலிகை கண்ணனின் வளர்ப்புத் தாயான யசோதையால், கண்ணன் செய்து கொண்ட பதினாறாயிரத்து நூற்றெட்டுத் திருமணங்களில் ஒன்றைக் கூடக் காண இயலவில்லை. அதை எண்ணி அவள் வருந்திய நிலையில், அந்த யசோதையையே வகுளமாலிகையாகத் திருமலையில் பிறக்க வைத்தார் திருமால். வகுளமாலிகை ஸ்ரீநிவாசனுக்கும் பத்மாவதிக்கும் திருமணத்தை ஏற்பாடு செய்து, தானே முன்நின்று நடத்தி வைத்துக் கண்ணாரக் கண்டு களித்தாள்.வேதவதியே பத்மாவதிதிருமாலை மணக்க விரும்பிக் கடுந்தவம்புரிந்து வந்தாள் வேதவதி என்ற பெண். ராமாயணக் காலத்தில் ராவணன் சீதையை அபகரிக்க வந்தபோது, சீதையை அக்னி லோகத்துக்குப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டு, போலிச்சீதையாக இந்த வேதவதி வந்து ராவணனுடன் சென்றதாகப் பாத்ம புராணம் போன்ற நூல்கள் சொல்கின்றன. அந்த வேதவதிக்கு அருள்புரிய நினைத்தார் திருமால். அதனால் தான் அந்த வேதவதியைப் பத்மாவதியாகத் திருமலையில் அவதரிக்க வைத்து, தானே ஸ்ரீநிவாசனாக வந்து அவளை மணந்து கொண்டார்.வேங்கடேச சுப்பிரபாதம்மணவாள மாமுனிகளின் சீடரான பிரதிவாதி பயங்கரம் அண்ணா என்பவர் திருவேங்கடமுடையானுக்காக வேங்கடேச சுப்பிரபாதம் இயற்றினார். ராமனுக்குச் சுப்பிரபாதம் பாடும் விதமாக விசுவாமித்திரர் கூறிய,கௌசல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர சார்தூல கர்தவ்யம் தைவம் ஆஹ்நிகம்என்ற ஸ்லோகத்தையே முதல் ஸ்லோகமாகக் கொண்டு, மேலே வேங்கடேசனின் சுப்பிரபாதம் இயற்றப்பட்டது.திருமலையப்பன் நெற்றியில் இருப்பது என்ன?திருமலையப்பன் நெற்றியில் அணிந்திருக்கும் திருமண் காப்புக்கு ஸ்ரீபாத ரேணு என்று பெயர். இறைவனின் பாதத்தூளியை நாம் நெற்றியில் திலகமாக அணிகிறோம். பக்தர்கள் மேல் பேரன்பு கொண்ட திருவேங்கடமுடையான், தன் பக்தர்களின் பாதத்தூளியைத் தன் நெற்றியில் திருமண் காப்பாக அணிகிறானாம். அதனால் தான் ஸ்ரீபாத ரேணு – அடியார்களின் பாதத் தூளி எனத் திருமலையப்பனின் திருமண் காப்பை அழைக்கிறார்கள்.திருக்குடந்தைதொகுப்பு: டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

You may also like

Leave a Comment

10 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi