Tuesday, June 11, 2024
Home » அரசின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த தமிழகம் முழுவதும் 600 கிராம செயலகங்கள்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த தமிழகம் முழுவதும் 600 கிராம செயலகங்கள்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

by kannappan

சென்னை: மீண்டும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும். 600 புதிய கிராம  செயலக கட்டிடம் இந்த ஆண்டே கட்டப்படும். இதன் மூலம் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் அரசின் அனைத்து திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும். ஊரக  உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் அமர்வுப்படி அதிகரிக்கப்படும். கிராம சபைக் கூட்டம் 6ஆக அதிகரிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில், விதி 110ன் கீழ், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக நேற்று அளித்த அறிக்கை: வருகிற 24ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு சில அறிவிப்புகளை நான் வழங்க விரும்புகிறேன். திமுக ஆட்சி அமையும் போதெல்லாம், உள்ளாட்சிகளின் உரு சிதையா வண்ணம், உயர்த்தி வலிமைப்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறோம். உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையினை ஏற்படுத்திடவும், உள்ளாட்சி அமைப்புகளின் சாதனைகள் மற்றும் திட்டச் செயலாக்கங்கள் குறித்து தகவல், கல்வி மற்றும் தொடர்பு இயக்கங்கள் நடத்திட ஏதுவாக, ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தினத்தை ‘உள்ளாட்சிகள் தினம்’ எனக் கொண்டாட வேண்டுமென்று நான் துணை முதல்வராக இருந்தபோது முடிவு மேற்கொள்ளப்பட்டது. 2007 நவம்பர், 1ம் நாள் அன்று உள்ளாட்சி தினமாகக் கொண்டாடப்பட்டது. இறுதியாக 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் கொண்டாடப்பட்டு, அதற்குப் பிறகு அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திடவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும், இடையில் நடத்தப்படாமல் போன இந்த நிகழ்வு, மக்கள் இயக்கமாக மீண்டும் நவம்பர் 1ம் தேதி, “உள்ளாட்சிகள் தினமாக”கொண்டாடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் நான் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.கலைஞர் முதல்வராக இருந்தபோது, 1998ம் ஆண்டில் முதல் முறையாக, ஆண்டிற்கு 4 முறை, குறிப்பிட்ட நாட்களில் கிராம சபை நடத்தப்பட வேண்டும் என்பதை அரசாணையாக வெளியிட்டார். இவ்வாறு குறுகிய கால அறிவிப்புகள்மூலம் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் போது, மக்களின் பங்கேற்பு குறைவாக இருக்கிறது என்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே, இந்த ஆண்டு முதல், ஆண்டிற்கு 6 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும். அந்த வகையில், ஜனவரி 26-குடியரசு தினம், மே-1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட்-15 சுதந்திர தினம், அக்டோபர்-2 அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினம் ஆகிய நாட்களில் நடைபெற்று வரக்கூடிய கிராம சபை கூட்டங்கள், இனி வரும் காலங்களில், கூடுதலாக மார்ச்-22 உலக தண்ணீர் தினம் அன்றும், நவம்பர்-1 உள்ளாட்சிகள் தினம் அன்றும் நடத்தப்படும்.  முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், முதல்வராக இருந்த போது தான், முதன்முதலாக மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கு அமர்வுப் படி வழங்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, இன்றுவரை வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில்மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு அமர்வுப் படித் தொகை பத்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும். கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப் படித் தொகை ஐந்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும். இதனால், தமிழகத்திலுள்ள 12,525 கிராம ஊராட்சித் தலைவர்கள், 99,327 கிராம ஊராட்சி உறுப்பினர்கள், 388 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், 6,471 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 36 மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 655 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 1 லட்சத்து 19 ஆயிரம் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இதன்மூலம் பயன்பெறுவார்கள். 2008ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோது, 385 ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன. ஆனால், அதன்பிறகு 10 ஆண்டுகளுக்கு வாகனங்களே வாங்கப்படவில்லை. தற்போது, அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும். நான் துணை முதல்வராகவும், துறையினுடைய அமைச்சராகவும் இருந்தபோதுதான், கலைஞரால், ‘உத்தமர் காந்தி கிராம ஊராட்சி’ என்ற விருது 2006ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டது. அந்த வகையில், 2006 முதல் 2010ம் ஆண்டு வரை, 60 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதற்குப்பிறகு இடைப்பட்ட காலத்தில் இவ்விருது வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு முதல் வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம். சிறப்பாகச் செயல்படக்கூடிய கிராம ஊராட்சிகளுக்கு “உத்தமர் காந்தி விருது” 2022ம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும். ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு பத்து லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும்.கிராம அளவில், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வருவாய்த் துறைக்கு மட்டுமே அலுவலகங்கள் தனித்தனியே செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், பிற துறைகள் மூலம் கிராமங்களில் செயல்படுத்தப்படக்கூடிய திட்டங்களை ஒருங்கிணைத்து, அதனைக் கண்காணிக்க கிராம அளவில் வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே, உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற நோக்கத்துடன், மக்களாட்சியின் மாண்பினை கிராம அளவில் உறுதி செய்திட ஏதுவாக, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை மற்றும் சமூக நலத் துறை போன்ற முக்கிய துறைகளின்மூலம் செயல்படுத்தப்படக்கூடிய அரசின் பல்வேறு  திட்டங்களை  கிராம அளவில் ஒருங்கிணைத்து செவ்வனே செயல்படுத்திட 600 ஊராட்சிகளில் “கிராமச் செயலகங்கள்” இந்த ஆண்டே கட்டப்படும்.இந்த கிராமச் செயலகங்கள் ஊராட்சித் தலைவருக்கான அறை, அனைத்துத் துறை கூட்ட அரங்கம், கிராம நிர்வாக அலுவலருக்கான அறை, கிராம ஊராட்சிச் செயலருக்கான அறை, இணைய வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும்.  இந்த புதிய முன்னெடுப்பின் முதற்கட்டமாக, இந்த ஆண்டு 600 புதிய கிராமச் செயலகக் கட்டிடங்கள், ஒவ்வொன்றும் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.கோட்டையில் இருந்து திட்டங்களை வகுத்து, அதற்கான அரசாணைகளை அரசு பிறப்பித்தாலும், அவற்றினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய பணியை ஆற்றிக் கொண்டிருப்பது உள்ளாட்சி அமைப்புகள்தான். அந்தக் காரணத்திற்காகத்தான், நாங்கள் ஊரக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.  அதனை மக்களும் நன்கு உணர்ந்துள்ள காரணத்தினால்தான், திமுக அரசின் மீது தமிழக மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, எங்களுக்கு இமாலய வெற்றியைத் தந்தார்கள் என்பதை நான் ஆணித்தரமாக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.தமிழக மக்கள் எங்களது அரசின் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை என்றென்றும் வீண்போகாத வண்ணம் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்.இவ்வாறு அவர் பேசினார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் பெரியகருப்பன், செல்வபெருந்தகை(காங்கிரஸ்), ஜி.கே.மணி(பாமக), நயினார் நாகேந்திரன்(பாஜ),  சிந்தனை செல்வன்(விசிக), நாகை மாலி(சிபிஎம்), ராமச்சந்திரன்(சிபிஐ), சதன்  திருமலைகுமார்(மதிமுக), அப்துல் சமது(மமக), இ.ஆர்.ஈஸ்வரன்(கொங்குநாடு மக்கள்  தேசிய கட்சி), வேல் முருகன்(தமிழக வாழ்வுரிமை கட்சி) உள்ளிட்டோர் பேசினர்.எம்எல்ஏக்களுக்கு கார்பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ” ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கு வாகனம் வழங்குவது போல, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்க வேண்டும். அதே போல் கார் வாங்க வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்ேபாது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு பேசுகையில், ”ஒன்றிய அரசிடம் பரிந்துரை செய்து தமிழக அரசுக்கு கூடுதலாக நிதி வாங்கி கொடுங்கள். உங்களுக்கு நீங்கள் கேட்ட கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்றார். …

You may also like

Leave a Comment

1 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi