Sunday, June 2, 2024
Home » அம்பானியே ஆளனுப்பி அழைத்தார்! : யார் இவர்?

அம்பானியே ஆளனுப்பி அழைத்தார்! : யார் இவர்?

by kannappan

கோவையின் சூலூரில் அமைதியான சூழலில் வசித்துக்கொண்டிருக்கிறார் ராபர்ட் வில்லியம். ஒரு காலத்தில் பஞ்சாலைகள் கொடிகட்டிப் பறந்த கோவை மாநகரத்தில் தனது திறமை எனும்  தனிக்கொடியைப் பறக்கவிட்டவர் வில்லியம். திருபாய் அம்பானி முதல் கோவை லட்சுமி மில்ஸின் அதிபர் ஜி.கே.சுந்தரம் வரை இவரைத் தெரியாத மில் அதிபர்களே இல்லை. சிந்தடிக் சாயங்கள்  கொண்டு விதவிதமான துணி ரகங்களைத் தயாரிக்கும் ஆடைத் தொழிலில் உலகிலேயே முதன் முதலாக இயற்கையான சாயங்களைத் தயாரித்துக்காட்டி ஆடை உலகையே அசரவைத்தவர். தற்போது  இயற்கையான தாவரங்களில் இருந்து எடுக்கப்பட்ட சாயங்களைக் கொண்டு விதவிதமான ஓவியங்கள் வரைந்து கொண்டிருக்கிறார். இப்படியான ஓவியங்கள் வரைவதிலும் இவர்தான் முன்னோடி. அவரின் நீண்ட நெடிய அனுபவங்களைக் கேட்டோம்.“நான் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் பயின்றேன். கல்லூரியில் பயின்ற காலத்தில் என்னை அஜந்தாவுக்கு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு இருந்த  பாறை குகை ஓவியங்கள் நேற்று வரைந்தவை போல் பொழிவோடு இருக்கக் கண்டேன். என்ன மாதிரியான சாயங்களைக் கொண்டு இதை வரைந்திருப்பார்கள் என்ற ஆச்சர்யமும் பிரமிப்பும் அப்போது  உருவானது. பின்னர் அது ஒரு மாபெரும் தேடலாக என்னைத் துரத்தத் தொடங்கியது. நான் அப்போதிருந்த ஆசியர்கள் முதல் நிபுணர்கள் வரை பலரிடமும் விசாரித்தேன். அது என்ன மாதிரியான சாயம்  என்பதற்கான போதுமான விளக்கங்கள் எனக்குக் கிடைக்கவில்லை. இந்த சூழலில்தான் நான் என் ஓவியக் கல்லூரி படிப்பை முடித்தேன். அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச சமூக சேவை நிறுவனம் டெல்லியில் ஆடைகளில் அச்சுத் தொழில்நுட்பம் சார்ந்து ஒரு வகுப்பை  நடத்தியது. அதில் தமிழ்நாட்டிலிருந்து என்னை அழைத்திருந்தார்கள். நான் அங்கு பணியாற்றியபடியே கற்றுக்கொண்டிருக்கும்போதே அகமதாபாத்தில் புதிதாய் தொடங்கியிருந்த நேஷனல் இன்ஸ்டிட்யூட்  ஆஃப் டிசைனில் ஒரு புதிய தொழில்கல்விக்கான விளம்பரத்தை நாளிதழில் பார்த்தேன். அதற்காக விண்ணப்பித்தேன். அந்த நிறுவனத்துக்கு அப்போது தலைவராக இருந்தவர் கீரா சாராபாய். இஸ்ரோவை  நிறுவிய விகரம் சாராபாய், தொழில் அதிபர் கெளதம் சாராபாய் ஆகியோரின் சகோதரி இவர். எனக்கு அங்கு கல்வி கற்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்போதே கல்விக் கட்டனமாக எழுநூறு ரூபாய்  கேட்டார்கள். நான் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். என் தந்தை இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ஒரு முன்னாள் ராணுவ வீரர். நேர்மையான மனிதர் என்பதால் எனக்கு அது நினைத்துப் பார்க்க முடியாத தொகையாக இருந்தது. என் சூழலைப் புரிந்து கொண்ட கீரா சாராபாய் எனக்கு ஸ்காலர்ஷிப் தர முன்வந்தார். கரும்பு தின்னக் கூலி கொடுத்தது போல் நான் குஷியானேன்.  அங்கு படிப்பு முடித்ததும் அங்கேயே பணியாற்ற வேண்டிய சூழல். எனக்கு கல்வித் துறையைவிட தொழில் நிறுவனங்களில் பணியாற்றி நேரடி களப் பயிற்சியும் அனுபவம் பெற வேண்டும் என்றுதான்  ஆர்வம் இருந்தது. எனவே, அங்கிருந்து வெளியேறினேன். சாராபாய் குடும்பத்தின் காலிக்கோ மில்லிலேயே டிசைனராகப் பணிபுரிந்தேன். என் வயதுக்கு அது மிகப் பெரிய பதவி. ஆனால், என் திறமையை  நம்பி அந்தப் பொறுப்பைக் கொடுத்தார்கள். கொஞ்ச நாளில் அகமதாபாத்திலேயே இன்னொரு நிறுவனத்தில் பணியாற்றினேன். ஒரு டிசைனராக என் பெயர் அப்போதே மில்களில் புகழ்பெறத் தொடங்கிவிட்டது. தொடர்ச்சியாக பெரிய பெரிய மில்களில் இருந்தெல்லாம் எனக்கு அழைப்புகள் வரத் தொடங்கின. ஆனால், என் குடும்பச் சூழல் காரணமாக நான் தமிழ்நாட்டுக்கு வர நேர்ந்தது. கோவை லட்சுமி மில்லில் மிகக் குறைவான சம்பளத்தில் வேலை செய்தேன். அப்போதுதான் ஒருமுறை என்னைப் பார்க்க திருப்பாய் அம்பானியின் உதவியாளர் வந்தார். சீனியர் அம்பானி என்னை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். நான் மும்பைக்குப் போய் அவரைச் சந்தித்தேன். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி. ‘எப்போ எங்க நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றப் போறீங்க?’ என்பதுதான். நான் குழப்பமாய் என் அப்போதைய முதலாளியான கோவை ஜி.கே.சுந்தரம் அவர்களிடம் இதைச் சொன்னேன். ‘சரி அது மிகப் பெரிய வாய்ப்பு. நீங்கள் போங்கள். ஒரு வருடம் வேலை செய்துவிட்டு திரும்ப இங்க வந்துவிடுங்கள். அந்த அனுபவம் நமக்கும் எதிர்காலத்துக்குத் தேவைப்படும்’ என்றார். சரி என்று சொல்லிவிட்டுப் போய் அங்கு பணியாற்றினேன்.கொஞ்ச காலத்தில் அங்கிருந்து வெளியேறி மீண்டும் லட்சுமி மில்ஸ் வாசம். இப்படி ஓடிக்கொண்டே இருந்தபோதும் என்னுடைய இயற்கை சாயம் மீதான தேடல் மட்டும் தீரவேயில்லை. ஒரு நிறுவனம்  அதை சர்வதேச பருத்திக் கண்காட்சியில் தனி ஸ்டாலில் வைப்போம் என்று சொன்னார்கள். அதற்காக அதுவரை நான் தேடி தெரிந்துகொண்டதை எல்லாம் வைத்து இருக்கும் உட்கட்டுமானங்களைக்  கொண்டு இயற்கை சாயத்தில் தயாரான துணிகளை உருவாக்கினேன். அது அப்போது மிகப் பெரிய சாதனை. அதன் மதிப்பு அங்கிருந்த வெளிநாட்டவர்களுக்குப் புரிந்திருந்தது. என்னை அணுகிக்  கேட்டார்கள். நான் அந்தச் சாதனை இந்த மண்ணுக்கு உரியது. எனவே, இந்தியாவுக்குத்தான் இதன் வணிகநலன் போய்ச் சேர வேண்டும். பிறருக்குத் தரமாட்டேன் எனச் சொல்லிவிட்டேன்.இப்போதும் என்னிடம் இயற்கையான செடிகளை, மூலிகைகளைப் பயன்படுத்தி துணிகளுக்கு வண்ணம் ஏற்றும் தொழிநுட்பம் உள்ளது. பல்வேறு மூலிகை ஆராய்ச்சிகள், சித்தமருத்துவ ஆய்வுகள் வழியே  நான் கற்றுக்கொண்டது இது. இயற்கைச் சாயங்கள் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியமானவை. அஜந்தா போன்ற பல நூற்றாண்டுகளானாலும் சோபை குறையாத ஓவியங்களில் நிறைந்திருக்கும்  வண்ணங்கள் இவைதான். இதைக் கொண்டு தற்போது விதவிதமான டிசைன்கள், ஓவியங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.  என் நிலத்தின் அறிவு என் நிலத்து மக்களுக்கே போய்ச் சேர வேண்டும்  என்பதே என் விருப்பம். அதனால்தான் எத்தனையோ வெளிநாட்டு நிறுவனங்கள் விலை பேச முயன்றும் நான் அதை யாருக்கும் தராமல் பாதுகாத்து வருகிறேன்’ என்கிறார் இந்த முன்னாள் ராணுவ  வீரரின் தேசபக்த மைந்தன்.- இளங்கோ கிருஷ்ணன்…

You may also like

Leave a Comment

nine + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi