Monday, June 10, 2024
Home » ‘அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கட்டும்’- தலைவர்கள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

‘அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கட்டும்’- தலைவர்கள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

by kannappan

சென்னை: ஆங்கில புத்தாண்டு 2022 இன்று நள்ளிரவு பிறக்கிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அனைவருக்கும் அனைத்து நலன்களும் வளங்களும் கிடைக்கட்டும் என தெரிவித்துள்ளனர். அதன் விவரம்: ஆர்.என்.ரவி (கவர்னர்): அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான வாழ்த்துகள். மாநிலமும், மக்களும் புதிய நம்பிக்கைகள், உயர்ந்த மகிழ்ச்சி மற்றும் அதிக செழிப்பு ஆகியவற்றால் நிரப்பப்படட்டும். எல்லோரும் நல்ல ஆரோக்கியத்துடனும், ஒருவருக்கொருவர் பரிபூரண இணக்கத்துடனும் இருக்கட்டும். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்: புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலர்கின்ற இந்த புத்தாண்டில் தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். இறைவன் நமக்கு புதிதொரு ஆண்டினை வழங்கி உள்ளார். இந்த புதிய ஆண்டு பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்து செல்லும் என்ற நம்பிக்கையோடு வாழ்வை தொடருவோம்.ராமதாஸ் (பாமக): கடந்த 2 ஆண்டுகளில் நாம் அனுபவித்த விஷயங்கள் காரணமாக இந்தாண்டும் சோதனைகள் நிறைந்ததாகவே இருக்கும் என்ற எண்ணம் மக்களிடம் நிலவுகிறது. அதையும் கடந்து நம்மால் சாதிக்க முடியும் என்ற புதிய நம்பிக்கை தான் நமது வலிமை. அதன் பயனாக 2022ம் ஆண்டு இனிப்பாக அமையும். கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): தமிழகத்தில் புதிய ஆட்சி மலர்ந்து மக்கள் அரசின் நலன்சார்ந்த திட்டங்களினால்  பெரும் பயனைடைந்து வருகிறார்கள். எந்த சேதாரமும் இல்லாமல் மக்கள் நல திட்டங்கள் பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைகின்றன. இதனால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் காரணமாக வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கிற வாய்ப்பு உருவாகியிருக்கிறது. வைகோ (மதிமுக): ஈழத் தமிழர் இனப்படுகொலை நடத்தப்பட்டதன் தொடர்ச்சி இன்னும் நின்றபாடில்லை. சிங்களவரின் அடிமை நுகத்தடியிலிருந்து தமிழர்கள் விடுபடவும், சுதந்திரமான தமிழ் ஈழம் அமையவும், சிங்களவர் நடத்திய இனக்கொலைக்கு உரிய பன்னாட்டு விசாரணை நடைபெறவும், தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தவும் வேண்டிய நடவடிக்கைகளை உலகெங்கும் உள்ள தமிழர்கள் 2022 உதயத்தில் சூளுரைப்போம்.ஜி.கே.வாசன் (தமாகா): பிறக்கின்ற புத்தாண்டானது வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நிலைநாட்டும் வகையில் சகோதரத்துவமும், அன்பும், நட்பும் பெருகி நாட்டு மக்களும், நாடும் வளம் பெற வேண்டும். அன்புமணி (பாமக): கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து நாம் மீண்டெழுவோம். 2022ம் ஆண்டில் நாம் அனைத்து துறைகளிலும் முன்னேறி வெற்றிக்கொடி ஏற்ற வேண்டும்.  டிடிவி.தினகரன் (அமமுக): மனிதநேயம் தழைத்திட, எல்லாரும் எல்லாமும் பெற்றிட இல்லாமை இல்லாத நிலை உருவாகிட புத்தாண்டில் வழி பிறக்கட்டும். என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி): கடந்தாண்டில் நடந்த இன்னல்களும், சோகங்களும், தீமைகளும் முழுமையாக விலகி விடவும், பிறக்கின்ற புத்தாண்டு இனியதாகவும் மகிழ்ச்சியாகவும் அமையவும், பகைமை மறைந்து நட்புகள் பெருகிடவும், அச்சமின்றி மக்கள் வாழ்ந்திடவும், ஜாதி மத பேசமின்றி ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும் மக்கள் வாழ்ந்திட வேண்டும். செங்கை பத்மநாபன் (நமதுரிமை காக்கும் கட்சி): அரசுகளின் கட்டுப்பாடுகளை பின்பற்றி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை காத்து கொள்ளவும், இனம், மதம், மொழி, சாதி, கலாச்சார பிரிவினை தவிர்த்து மனித நேயம் கொண்டு அனைத்து வளங்களையும் பெற்று இன்புற்று வாழ வேண்டும். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாளர்) சங்க மாநில தலைவர் சேம.நாராயணன், சமக தலைவர் எர்ணாவூர் நாராயணன், சமக தலைவர் சரத்குமார், இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பு தலைவர் ஹென்றி, காங்கிரஸ் விஜயவசந்த் எம்பி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்….

You may also like

Leave a Comment

seventeen − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi