Tuesday, May 28, 2024
Home » அதிமுக ஆட்சியில் அம்மா உணவகங்களில் ஊழல் சிறு கடைகளுக்கு உணவை விற்று முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலம்: சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடித்து அறிக்கை தயாரிப்பு

அதிமுக ஆட்சியில் அம்மா உணவகங்களில் ஊழல் சிறு கடைகளுக்கு உணவை விற்று முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலம்: சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடித்து அறிக்கை தயாரிப்பு

by kannappan

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ‘அம்மா உணவகம்’ திறக்கப்பட்டது. சென்னையில் முதலில் தொடங்கப்பட்ட இத்திட்டம், பின்னர், தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. ஆனால், அதில் நடந்த ஊழல் காரணமாக அம்மா உணவகங்கள் நஷ்டத்தில் இயங்க தொடங்கின.இந்நிலையில், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இந்த திட்டத்தில் லாப, நஷ்டம் பார்க்க ஆரம்பித்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு. 2018-19ம் ஆண்டிற்கான தமிழக பட்ெஜட் தாக்கல் செய்யப்பட்ட போது, நிதித்துறை செயலாளர் கூறுகையில், ‘‘அம்மா உணவகத்துக்கு அரிசி இலவசம். மற்ற பொருட்கள் பொது விநியோக திட்ட விலையில் கொடுக்கப்படுகிறது. திட்டத்தின் தொடக்கத்தில் நஷ்டம் ஏற்படாது என்று சொன்னார்கள். இப்போது நஷ்டம் வந்துவிட்டது என்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளே நிர்வகிக்கிறார்கள். நஷ்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். நஷ்டம் ஏற்பட்டதால் சில உணவகங்கள் மூடப்பட்டது,’’ என்று கூறினார். இதன் மூலம் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அம்மா உணவக திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் ஏற்பட்டது சமூக ஆர்வலர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகும்,  இந்த உணவகங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில், கடந்த அதிமுக ஆட்சியில் அதிமுக நிர்வாகிகளால் சிபாரிசு அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களே இன்றும் பணிகளை தொடர்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த அதிமுக ஆட்சியின் போது இத்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். அதே முறைகேட்டை தொடர்ந்து வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இந்த முறைகேடுகள் தொடர்வதாக புகார் எழுந்தது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 2013ம் ஆண்டு 207 அம்மா உணவகங்களும், 2014ம் ஆண்டு 200 அம்மா உணவகங்களும் ஆக மொத்தம் 407 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. இவற்றில் 4 அம்மா உணவகங்கள் மே 2021க்கு முன்னரும், 2 அம்மா உணவகங்கள் மே 2021க்கு பின்னரும் சில காரணங்களால் மூடப்பட்டு தற்போது 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், இந்த அம்மா உணவகங்களில் லாபம் கிடைக்காத நிலையிலும் ஏழை மக்கள் பசியாற நடத்தப்படும் நிலையில், வழக்கத்தை விட வருமானம் குறைந்து வருவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தற்போது சில அதிகாரிகள் உதவியுடன், வெளியில் நடத்தப்படும் சிறு  உணவகங்களுக்கு அம்மா உணவகம் மூலம் இட்லி, சப்பாத்தி போன்ற உணவு பொருட்களை முறைகேடாக விற்பனை செய்வது தெரியவந்தது. இதன் மூலம் கிடைக்கும் தொகையை சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஒரு சில மாநகராட்சி அதிகாரிகள் பங்கு பிரித்து எடுத்து செல்வதும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவகம், இதுபோன்ற ஊழியர்கள் மற்றும் ஒரு சில அதிகாரிகளால் மேலும் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா உணவகங்களில் நடந்த முறைகேடுகள் மூலம் கிடைக்கும் ஒரு தொகையை சம்மந்தப்பட்ட நிர்வாகிகளுக்கும் கொடுத்து வந்துள்ளனர். இதனால் துணிகரமாக இந்த முறைகேடு தொடர்ந்துள்ளது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையிலும், அந்த ஊழியர்கள் தொடர்ந்து  முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். சென்னை மாநகராட்சி, பல்வேறு நிதி நெருக்கடி நிலையிலும் இந்த அம்மா உணவகங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.  ஒரு அம்மா உணவகத்திற்கு விற்பனையை கருத்தில் கொண்டு அதிகபட்சமாக 12 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் பல அம்மா உணவகங்களில் 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை அதிமுக நிர்வாகிகளின் சிபாரிசுகளின் பெயரில் நியமித்துள்ளனர். தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு அதை கண்டறிந்து அனைத்து அம்மா உணவகங்களிலும் விற்பனைக்கு ஏற்ப சமச்சீராக இருக்கும் வகையில் உறுப்பினர்கள் பணி அமர்த்தப்பட்டுள்னர். முறைகேடுகள் குறித்து அறிக்கை தயாரித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.தேவைக்கு அதிகமான உறுப்பினர் நியமனம்அம்மா உணவகங்களுக்கு தேவையான சுய உதவிக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 3,350 ஆகும். ஆனால் எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் கடந்த அதிமுக ஆட்சியில் 4355 உறுப்பினர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே 2021 அக்டோபர் மாதம் ஒவ்வொரு அம்மா உணவகத்தின் மாத விற்பனைக்கேற்றவாறு உறுப்பினர்களின் எண்ணிக்கை முறை செய்யப்பட்டது. அதனடிப்படையில் எந்த ஒரு உறுப்பினரையும் பணியிலிருந்து விடுவிக்காமல் அனைத்து உறுப்பினர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன் மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் பணியமர்த்தப்பட்ட உறுப்பினர்களுக்கு வேலை அளிக்கப்பட்டதுடன் சென்னை மாநகராட்சியின் வரிப்பணம் மாதம் 60 லட்சம் முதல் 80 லட்சம் ரூபாய் வரை சேமிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ₹5.69 கோடி நஷ்டம்கடந்த 2016ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கையில், ‘‘சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களில் உள்ள அம்மா உணவகங்களில் 4 லட்சம் சப்பாத்தி தயாரிக்கும் திறன் கொண்ட இயந்திரங்கள் வாங்கப்பட்டதாகவும், அப்போது, அதன் தரம் பரிசோதித்து பார்க்கப்படவில்லை என்றும், மாநகராட்சி டெக்னிக்கல் ஆய்வு கமிட்டியும் அந்த இயந்திரம் தரமில்லை எனவும் 2013ல் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் அதற்குள்ளாக கான்ட்ராக்டருக்கு ரூ.1.33 கோடியை சென்னை மாநகராட்சி வழங்கிவிட்டது. இதுகுறித்து கான்ட்ராக்டரிடம் விளக்கம் கேட்டபோது, “3 மாதங்களுக்குள் இயந்திரத்தை சீர் செய்து தருகிறோம் அல்லது பணத்தை திருப்பி தருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இரண்டுமே நடக்கவில்லை. சப்பாத்தி இயந்திரங்களுக்கு வாரண்டி தர வேண்டும் என்ற நிபந்தனையை கூட மாநகராட்சி விதிக்கவில்லை. பழுதடைந்த மிஷினை வைத்து, அதை ரிப்பேர் பார்ப்பதிலேயே செலவு அதிகரித்துள்ளது. இதனால் அரசு கருவூலத்திற்கு ரூ.5.69 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது….

You may also like

Leave a Comment

9 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi