Saturday, April 20, 2024
Home » நரம்புகள் நலமாக இருக்கட்டும்!

நரம்புகள் நலமாக இருக்கட்டும்!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு குழுவிலும் நம்பிக்கை நட்சத்திரம் என்ற யாரேனும் ஒருவர் இருப்பார். அதுபோல், நம் உடலில் உள்ள உறுப்புகளில் நம்பிக்கை நட்சத்திரம் எது?! இதயமா, நுரையீரலா, கல்லீரலா, சிறுநீரகமா, தண்டுவடமா என்று கேட்டால், இவை அனைத்தையும் தனது மாயவலையால் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நரம்புகளே நமது உடலின் நட்சத்திரங்கள் என்று கூறுவது சாலச் சிறந்தது. இதற்கு பல நியாயமான காரணங்கள் உண்டு.வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ண இயலுமா, இயலாது. அதுபோல் நம் உடம்பிலுள்ள நரம்புகளின், நரம்பணுக்களின் எண்ணிக்கையும் பல ஆயிரம் கோடிகளை தாண்டும். எனவே, அவற்றையும் எண்ண இயலாது. சரி… நரம்புகள் என்றால் என்ன? அது மனித உடம்பில் எங்கெங்கு உள்ளது? என்ன செயல்கள் செய்கிறது? நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளால் நோய்கள் எவ்வாறு ஏற்படுகிறது?இவற்றை பொதுமக்களுக்கு அடிக்கடி தோன்றும் சில சந்தேகங்களை அடிப்படையாக வைத்தே உதாரணத்துடன் கூறினால், நாம் எளிதாகப்புரிந்துகொள்ள முடியும்.1) சந்தேகம்: எனக்கு தலை ஒருபுறமாக வலிக்கிறது. வெயிலில் போனாலோ, பஸ் பயணம் சென்றாலோ, தலை குளித்தாலோ, குளிர்ச்சியான பொருள் சாப்பிட்டாலோ, ஸ்பிரே, சென்ட், பூ வாசனை முகர்ந்தாலோ தலைவலி அதிகமாகிறது. பல சமயம் தலைவலி ஒருநாள் முழுவதும் நீடிக்கிறது, கூடவே வாந்தியும் வருகிறது, என்ன பண்ணுவது?பதில்: இதற்கு ‘மைக்ரேன்’ என்று பெயர். இது மூளையில் உள்ள ட்ரைஜெமினல் நரம்பினால் ஏற்படுவது. மூளையில் உள்ள டிரைஜெமினல் நரம்புகள் தூண்டப்பட்டு ரத்தக்குழாய்கள் விரிவடைவதனால் இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.2) சந்தேகம் :; எனது கண்கள் கடந்த ஒரு வாரமாக சரியாகத் தெரியவில்லை. சிறிது சிறிதாக மங்கலாக ஆரம்பித்து தற்பொழுது எதிர் நிற்பவரின் முகமே சரியாக தெரியவில்லை, என்ன காரணம்?பதில்: இது கண்ணிலிருந்து வரும் ஆப்டிக் நரம்பு பாதிப்படைவதால் ஏற்படுவது, இதற்கு ‘ஆப்டிக் நியூரைட்டிஸ்’ என்று பெயர். தகுந்த சிகிச்சையின் மூலம் இதைக் குணப்படுத்த முடியும்.3) சந்தேகம்: என் பாட்டிக்கு 60 வயதாகிறது. அவர்களுக்கு கன்னத்தில் ஷாக் அடிப்பதை போன்று ‘சுருக்… சுருக்’ என்று வலி அதிகமாக வருகிறது. சாப்பிடும்போது, வாய் கொப்பளிக்கும்போது, பல் துலக்கும்போது வலி அதிகமாகிறது. அவர்களால் அதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. என்ன காரணம்?பதில்: இது முகத்தில் உள்ள ஐந்தாவது நரம்பான டிரைஜெமினல் நரம்பில் தொந்தரவு ஏற்படுவதால் வருவது. இதற்கு ‘டிரைஜெமினல் நியூரால்ஜியா’ என்று பெயர். இதற்கும் தகுந்த சிகிச்சை முறைகள் உள்ளன.4) சந்தேகம்: நான் சென்ற வாரம் ஒரு குளிர்ந்த இரவில் பேருந்தில் பயணம் செய்தேன். அடுத்த நாள் காலையிலிருந்து என்னால் சரி வர பேச முடியவில்லை. சரி வர சாப்பிட முடியவில்லை. என் இடது கண்ணை மூட முடியவில்லை எனது வாயின் வலதுபக்கம் கோணியுள்ளது. எனது நெற்றியை சுருக்க முடியவில்லை என்ன காரணம்?பதில்: இதனை முகவாதம் என்று சொல்வோம். முகத்திலுள்ள ஏழாம் நரம்பு அதாவது ஃபேஷியல் நரம்பு செயலிழந்து போவதால் இவ்வாறு ஏற்படுகிறது. மாத்திரைகள், பிசியோதெரபியின் மூலம் இதனை குணப்படுத்தலாம்.5) சந்தேகம் : நான் ஆசிரியராக பணிபுரிகிறேன். எனக்கு எழுத்து வேலை அதிகம். எனக்கு கழுத்தில் அதிகமாக வலி உள்ளது. அந்த வலி என் வலது கையின் விரல் நுனிவரை பரவுகிறது, சமயத்தில் எனது கை மரத்துப்போகவும் செய்கிறது. என்ன காரணம்?பதில்: இதற்கு சர்விகல் ராடிக்யூலோபதி என்று பெயர். கழுத்து எலும்புகளுக்கு நடுவில் உள்ள ஜவ்வு சிறிது வீங்கி அருகில் உள்ள நரம்புகளை அழுத்துவதால் இவ்வாறு ஏற்படுகிறது. கழுத்தில் இருந்து வரும் நரம்புகள் கை வரை செல்கிறது, இதனாலேயே கழுத்தில் ஏற்படும் வலி விரல்கள் வரை செல்கிறது.6) சந்தேகம் : எனக்கு இடுப்பிலிருந்து கால் வரை வலிக்கிறது. சமீபகாலமாக என் கெண்டை கால்களில் குறுக்குயிழுப்பதைப் போன்று இழுக்கிறது. வலி தாங்க முடியவில்லை, என்ன செய்வது?பதில்: இது இடுப்பிலிருந்து வரும் நரம்புகளால் ஏற்படும் பாதிப்பு. முதுகெலும்புக்கு இடையே உள்ள ஜவ்வு வீங்கி அருகிலுள்ள நரம்பினை அழுத்துவதால் இவ்வாறு ஏற்படுகிறது. இதற்கு ‘ஷயாடிகா’ என்று பெயர். இடுப்பிலிருந்து கால் வரை ஷாக் அடிப்பது போன்று வலி ஏற்படலாம். இதற்கும் தகுந்த சிகிச்சை முறைகள் உள்ளன.7) சந்தேகம் : எனக்கு சர்க்கரை நோய் 10 வருடங்களாக உள்ளது. இரவுகளில் எனது கால்களில் எரிச்சல், ஊசி வைத்து குத்துதல், மரத்துப்போதல் போன்ற உணர்வுகள் என்னை தூங்கவிடாமல் தொந்தரவு செய்கிறது. என்ன காரணம்?பதில்: இது சர்க்கரை நோயினால் கால் உணர்ச்சி நரம்புகளில் ஏற்படும் தொந்தரவு. இதனை ‘நியூரோபதி’ என்று சொல்வோம். பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த தொந்தரவு அதிகமாக இருக்கும். சமயத்தில் காலில் செருப்பை வலுவாக பிடிக்க இயலாமல் கழன்று சென்றுவிடும். இதற்கும் தகுந்த சிகிச்சை முறைகள் உள்ளன.இவ்வாறு உச்சி முதல் உள்ளங்கால் வரை நரம்புகளினால் ஏற்படும் பாதிப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை சிறு துளியே! நரம்புகளைப் பற்றியும் அது நமது உடலில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியும் கூறுவதற்கு ஒரு கட்டுரை போதாது. இந்த மேற்கோள்களை சற்றே கூர்ந்து கவனித்தால் அதனூடே ‘வலி’ என்பது பிரதானமாக உள்ளது. இந்த வலி எவ்வாறு ஏற்படுகிறது. வலிக்கும் நரம்புகளுக்கும் என்ன சம்பந்தம்? என்பதை புரிந்துகொள்ள நரம்புகளின் அமைப்பை பற்றி தெரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.ஒரு திரைப்படத்தை வெளிக்கொணர்வதில் டைரக்டர் பங்குதான் முக்கிய ஆதாரம். அவருக்கு கீழ் ஒவ்வொரு துறைக்கும், அதாவது நடிகர், நடிகை, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், சண்டை பயிற்சியாளர், டான்ஸ் மாஸ்டர் என அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றினால்தான் படம் வெளி வரும். அதேபோல் ஒரு நரம்பு என்று எடுத்துக்கொண்டால், அதனுள்ளே உணர்வுகளை கடத்த தனித்தனி நரம்பு இழைகள் உள்ளன.இதனை ABC சிஸ்டம் என்று வகைப்படுத்துவோம். அவை முறையே A ஆல்பா, A பீட்டா, A காமா, A டெல்டா மற்றும் B C நரம்பு இழைகள், இவை ஒவ்வொன்றும் முக்கிய உணர்வுகளான தொடுதல், அழுத்துதல், வலி, குளிர்ச்சி, சூடு(Hot) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு உணர்வைக் கொண்டு செல்லுமாறு அமையப் பெற்றுள்ளது.உணர்வுகளுக்கு மட்டுமன்றி செயல்திறனுக்கான மோட்டார் நரம்புகளும் A ஆல்ஃபா நரம்புகளில் உள்ளது. ஒவ்வொரு நரம்புகளை சுற்றியும் ஒரு அரண் போல் மயலின் என்ற தடுப்புச்சுவர் இருக்கும். இந்த மயலின்(Myelin) சுவர் வழியாக நரம்புகளின் தகவல் பரிமாற்றம் மின்னல் வேகத்தில் நடைபெறுகிறது.ஒரு சூடான பொருளை நாம் தவறுதலாக தொடும்போது உடனே கையை அப்பொருளில் இருந்து விலக்கிக் கொள்கிறோம், கணவன் ஆசையாக மனைவியின் இடுப்பைக் கிள்ளும்போது, அவள் ‘ஆ’ என்று சொல்லி விலகிக் கொள்கிறாள். நரம்புகளின் தகவல் பரிமாற்ற வேகத்தை மேற்கூறிய செயல்களில் அழகாக விவரிக்க முடியும்.இதில் சூடு என்ற உணர்வும் கிள்ளும்போது ஏற்படும் வலி என்ற உணர்வும், அவை ஏற்பட்ட இடத்திலிருந்து தோலில் உள்ள; நரம்புகள் வழியாக தண்டுவடம் வரை கொண்டு செல்லப்படுகிறது. இந்த உணர்வுகள் மேலெழுந்து, மூளை தண்டுவடம்(Brain stem) வழியாக பெருமூளையை சென்றடைகிறது.பெருமூளையில் உள்ள, உணர்வுகள் சங்கமிக்கும் இடமான ‘சென்சரி கார்டெக்ஸ்’ என்ற இடத்தில் இந்த தகவல் பரிமாற்றம் நடக்கிறது. அதன்பின் ‘மோட்டார் கார்டெக்ஸ்’ என்று சொல்லப்படும் செயல் திறனுக்கான தலைமையிடத்தில் இருந்து தகவல்கள் கீழிறங்கி தண்டுவடம் வழியாக மோட்டார் நரம்புகளை சென்றடைந்து கையை விலக்கிக் கொள்ள வைக்கிறது.ஆகவே ‘சூடு’ என்னும் உணர்வு கையில் பட்டவுடன் மேலேறி மூளைக்கு சென்றடைந்து பின்னர் மூளையில் இருந்து கீழிறங்கி கைவரை வந்து கையை விலக்கிக்கொள்ள வைப்பதற்கான கால அவகாசம் மைக்ரோ மைக்ரோ வினாடிகள் மட்டுமே. இன்னும் சொல்லப் போனால் நரம்புகளின் தகவல்பரிமாற்ற ஆற்றல் ஆராய்ச்சியாளர்களுக்கே புரியாத ஒன்று.96 படத்தில் ஜானு, ராமின் நெஞ்சில் கைவைக்கும்போது ராம் ஆகிய விஜய் சேதுபதியின் இதயம் படபடவென்று துடித்து மயங்கி கீழே விழுவார். இம்மயக்கத்திற்கு காரணம் ‘இதயம்தான்’ என்று சொன்னால், ‘எய்தவன் நானிருக்க அம்பை நோவது ஏன்’ என்று நரம்பு மண்டலம் நம்மைப் பார்த்து நகைக்கும். ‘தானியங்கி நரம்பு மண்டலம்’ என்பது நம் மூளையின் கட்டுப்பாட்டிற்குள் வராமல் தானாக இயங்குவது. இதனை சிம்பதெடிக், பாரா சிம்பதெடிக் என்று வகைப்படுத்துவோம்.இவை உடலில் உள்ள; இதயம் ,நுரையீரல், குடல், நீர்ப்பை ஆகிய உள்ளுறுப்புகளைக் கட்டுப்படுத்துகிறது. ஆசிரியர் நம்மை பரீட்சையில் கேள்வி கேட்கும்போது ஏற்படும் பய உணர்வுக்கும், வேர்த்து கொட்டுவதற்கும், சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதற்கும், இதயம் படபடவென்று துடிப்பதற்கும் சிம்பதெடிக் நரம்பு தொகுப்பிலிருந்து வெளிவரும் அட்ரினலின் என்ற வேதிப்பொருள் முக்கிய பங்காற்றுகிறது.நரம்புகள்தானே என்று சாதாரணமாக எண்ணுபவர்கள் நரம்புகளின் அமைப்பு, எண்ணிக்கை, செயல்திறன், தகவல் பரிமாற்ற திறன் ஆகியவற்றை ஆராய்ந்து அறிய முற்பட்டால் நரம்புகளின் ராஜபாட்டை மெய்சிலிர்க்க வைக்கும்.(நலம் பெறலாம்)படம்: ஜி.சிவக்குமார்

You may also like

Leave a Comment

sixteen + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi