காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த திருமூலஸ்தானம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர்(32). இவருக்கும், புவனகிரி சின்னாண்டிகுழியை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சாருநிஷா(23) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நிஷா என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதர் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்து வருகிறார். தற்போது தனது மாமியார் வீட்டில் கைக்குழந்தையுடன் சாருநிஷா வசித்து வந்தார். இவரது தாய் உடல்நிலை சரியில்லாமல் புதுவை ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் காலை தனது மாமியார் ராஜகுமாரியிடம், தனது தாயை பார்த்துவிட்டு வர அனுமதி கேட்டார். அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சாரு நிஷா தனது கை குழந்தையை தூங்க வைத்துவிட்டு படுக்கையறை மின் விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ஏழுமலை, உதவி ஆய்வாளர் தெய்வநாயகம் மற்றும் போலீசார் சென்று சாருநிஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சாருநிஷாவின் தந்தை ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 1 வருடமே ஆனதால், மேல் விசாரணைக்காக சிதம்பரம் உதவி ஆட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.