திருச்சுழி : திருச்சுழி அருகே பாம்பு கடித்து இறந்த வீரன் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே பரளச்சியில் இருந்து பெருநாழி செல்லும் சாலையில் பழமையான கற்சிலை இருப்பதாக, வரலாற்றுத்துறை மாணவி பாலமாரீஸ்வரி தகவல் கொடுத்தார். இதையடுத்து கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மைய ஆய்வாளருமான ரமேஷ், தொல்லியல் கள ஆய்வாளர்களான ஸ்ரீதர், முனைவர் தாமரைக்கண்ணன் ஆகியோர் அங்கு சென்று கள மேற்பரப்பாய்வு செய்தனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், ‘‘பொதுவாக நம் முன்னோர்கள் வீரத்தில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்தது. எதிரிகளுடனான போரிலோ, ஆநிரைகளை மீட்டல் போரிலோ அல்லது தீங்கு விளைவிக்கும் விலங்குகளுக்கு எதிரான சண்டைகளிலோ அல்லது ஏதேனும் வீரதீர செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எடுக்கப்படும் நினைவுக்கல்லே நடுகல் அல்லது வீரக்கல் என்பர்.
தற்போது நாங்கள் கண்டறிந்த நடுகல்லில் வீரனின் உருவம் நன்கு ஆபரணங்களுடனும் காலில் வீர கழலையுடனும் வணங்கியபடி நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. வீரனின் தலைக்கு வலது புறம் ஒரு பாம்பு சீறியவாறு செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் வடிவமைப்பை வைத்து பார்க்கும்போது பாம்பின் மூலம் இவ்வீரன் இறந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. எனவே இதனை பாம்பு கொத்தி பட்டான் கல் என்பர். மேலும் இந்த சிற்பத்தின் வடிவமைப்பை வைத்து பார்க்கும் போது 18ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால சிற்பமாக கருதலாம்’’ என்றனர்.